வரலாற்றில் இன்று – 28.05.2020 – உலக பட்டினி தினம்
உலக பட்டினி தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ‘தனிஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார்.
ஆனால், உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும், பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஒருமனிதன் ஆரோக்கியத்துடன் இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கமாகும்.
என்.டி.ராமாராவ்
என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் பிர ப ல தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ்.
இவர் 1949ஆம் ஆண்டு மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1951ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்று தந்தது. 1968ஆம் ஆண்டு தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
பிறகு, திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1995ஆம் ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமாராவ் 1996ஆம் ஆண்டு மறைந்தார்.
மைசூர் வாசுதேவாச்சாரியார்
சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1865ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.
இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. பத்ம பூஷண், சங்கீத கலாநிதி விருது, மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விஷாரத், சரஸகான சிரோன்மணி என பல விருதுகளைப் பெற்றார்.
தலைசிறந்த கர்நாடக இசை நட்சத்திரமான மைசூர் வாசுதேவாச்சாரியார் 1961ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1923ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.தியாகராஜன் தஞ்சாவூரில் பிறந்தார்.