வரலாற்றில் இன்று – 27.05.2020 – ரவி சாஸ்திரி
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) 1962ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி.
இவர் கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் இருந்தார். பிறகு ஆல்ரவுண்டராக மாறினார்.
இவர் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக பங்கேற்று முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானார்.
கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக இருக்கிறார்.
ஜவகர்லால் நேரு – நினைவு தினம் இன்று…!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாளை இந்தியக் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.
நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரைப் பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ஆம் ஆண்டு இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கினார்.
‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்து அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திய நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1907ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) அமெரிக்காவில் பிறந்தார்.
1910ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி ஜெர்மானிய அறிவியலாளர் ராபர்ட் கோக் மறைந்தார்.
1937ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.