ராஜாஜி எழுதிய ஒரு கதை

 ராஜாஜி எழுதிய ஒரு கதை

மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையால் பெரிதும் கவரப்பட்டவர்

காந்தியின் சம்பந்தியான மூதறிஞர் ராஜாஜி. மதுவிலக்குக் கொள்கையைப் பரப்புவதற்கென்றே ‘விமோசனம்’ என்றொரு பத்திரிகை நடத்தினார் அவர்.

அதில் வெளிவந்த கதை, கவிதை, கட்டுரை எல்லாமே மது விலக்கு என்ற உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டவை.

‘விமோசனம்’ கடந்த, 1920இல் வெளிவந்த, தமிழ் மாதப் பத்திரிகை. அதன் ஆசிரியர் ராஜாஜி; துணை ஆசிரியர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. சேலம் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து வெளி வந்தது.

ஆண்டு சந்தா, ஒரு ரூபாய்; தனிப்பிரதி, ஓர் அணா – அதாவது, ஆறு காசு.

மதுவிலக்கு பிரசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த இப்பத்திரிகையில், விளம்பரங்கள் ஏற்கப்படவில்லை.

மதுவிலக்கு கட்டுரைகளோடு, கதைகளும் வெளி வந்தன.

‘விமோசனம்’ பத்திரிகை ஒன்பதாவது இதழ் வெளிவந்த போது, பர்மாவில் இருந்த சாமிநாதன் என்பவர், நான்கு ரூபாய் அனுப்பி, நான்கு ஆண்டுகளுக்கான சந்தாவாக வைத்துக் கொள்ளும்படி எழுதினார்.

எத்தனை ஆண்டுகள் பத்திரிகை வரும் என்ற நிச்சயம் இல்லாததால், அந்த சந்தாவை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பி விட்டார், ராஜாஜி.

‘விமோசனம்’ பத்திரிகை, 12 இதழ்களே வெளிவந்தன.

‌அதில் ராஜாஜி எழுதிய ஒரு கதை இது:

ஒரு தூய்மையான பிரம்மச்சாரி வயல் வரப்பின் வழியே நடந்து செல்கிறான். அழகன் அவன். ஆள் அரவமற்ற பாதை.

ஒரு வேசி அவனின் எதிர்ப்படுகிறாள்.

அவள் நல்ல பலசாலி.

அவள் தலையில் ஒரு மதுக் குடம். கையில் ஒரு வாள். இடுப்பில் ஒரு குழந்தையை ஏந்தியவாறு அவள் அவன் முன் வருகிறாள்.

அவளுக்கு அவனைப் பார்த்து இச்சை எழுகிறது.

தனக்கு இணங்குமாறு வேண்டுகிறாள்.

ஆனாலும் அவள் அவனுக்கு ஒரு சலுகை தருகிறாள்.

குழந்தையை வாளால் கொல்வது,
அவளுக்கு இணங்குவது, மதுவை அருந்துவது இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒன்றை அவன் செய்தால் அவனை விட்டுவிடுவதாக அவள் கூறுகிறாள்.

அவன் தீவிரமாக யோசிக்கிறான்.

அவளிடமிருந்து நிச்சயம் தப்ப இயலாது.

எனவே அவள் சொன்னபடி மூன்றில் ஒரு பாவத்தைச் செய்து மற்ற பாவங்களைச் செய்யாமல் தப்பிக்கலாமே?

அவளுக்கு இணங்குவது அவனது பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் தோற்றுவிக்கும்.

அது தகாது. குழந்தையைக் கொல்வதோ சிசுஹத்தி என்ற மகாபாவம். அது கூடவே கூடாது.

ஆனால், அவள் சொன்ன மூன்று பாவங்களில் குறைவானது
மது அருந்துவதுதான்.

ஏனென்றால் அது அசைவம் கூடக் கிடையாது. சைவம் தான்.

இப்படி எண்ணிய அவன் அவளது நிபந்தனைக்கு உள்பட்டு மதுவை அருந்துகிறான்.

அவளுடன் சேரவேண்டும் என்ற வெறியை மது அவனுக்குத் தோற்றுவிக்கிறது.

அதற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அந்தக் குழந்தையையும் அவன் கொன்றுவிடுகிறான்

இவ்வாறு கதையை முடிக்கிறார் ராஜாஜி. எல்லாப் பாவச் செயல்களுக்கும் ஆதாரமானது மது என்பதை இந்தக் கதை எவ்வளவு அழகாகத் தெரிவிக்கிறது!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...