பகுதி – 9
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி – 9
ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.
அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல் இருக்கிறது. தலைவலியும் இருக்கிறது.
‘இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார் ‘என்று சொன்னார்.
சரி முதலில் அவருக்கு காலை உணவை கொடுத்து மாத்திரை கொடுக்கலாம் அதன் பிறகு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு தரை தளத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்கு சென்று அவரது நிலை குறித்து எடுத்துச் சொல்லி அவருக்கு காலை உணவை அறைக்கு எடுத்துச் சென்று கொடுத்தேன்.
அதற்குள் என் மைத்துனர் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று சில மாத்திரைகளை வாங்கி வந்தார்.

என் தங்கையோ “இன்றைய பயணத்தை நீங்கள் இருவரும் மேற்கொள்ளுங்கள்.
நான் அறையிலேயே ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் மறுநாள் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்னை திரும்ப வேண்டும்.
சரி என்று நானும் மைத்துனரும் தரை தளத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்கு சென்று வழக்கம் போல் அங்கு வைக்கப்பட்டிருந்த continental காலை உணவை உட்கொண்டோம்.
இன்று எங்களை சபாரி வேர்ல்ட் என்னும் ஓரிடத்திற்கு அழைத்துச் செல்வதாக எங்களுடைய பயணத்திட்டம் இருந்தது.
நானும் மைத்துனரும் லாபியில் தயாராக காத்திருந்தோம்.
9:15 மணிக்கு எங்களை அழைத்துச் செல்லும் வாகனம் வந்தது.
இன்றும் ஒரு புதிய வாகனம் புதிய ஓட்டுனர். வழக்கம்போல் எங்களை அவர் சரி பார்த்துக் கொண்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு மணி நேரம் பயண தூரத்தில் உள்ள சபாரி வேர்ல்ட் என்னும் இடத்திற்கு கொண்டு போய் இறக்கினார்.
பிற்பகல் 2 மணிக்கு நுழைவு வாயிலுக்கு வந்து விட வேண்டும் என்ற நேர கட்டுப்பாடுடன் எங்களை அனுப்பி வைத்தார்.
சபாரி வேர்ல்ட் இயற்கை அழகு நிறைந்த ஒரு பகுதியாக இருந்தது.
உள்ளே நுழைந்ததும் சற்று தூரத்தில் பறவைகள் வளர்க்கப்படும் பகுதி இருந்தது.
அங்கே சிறிய கிளிகள் மற்றும் மக்காவ் பறவைகள் மரக்கிளைகளிலும் அவற்றிற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேகமான மேடைகளின் மேல் அமர்ந்திருந்தும் அழகாக காட்சியளித்தன.

அதற்குப் பிறகு சற்று தூரத்தில் பெலிகான் பறவைகள் கூட்டம் இருக்கும் இடம்.
அதற்கு அடுத்து வெண்மை நிற கொக்குகள் போன்ற பறவைகள் வாழும் பகுதி இருந்தது.
அந்த பெலிகான் பறவைகளையும் கொக்கு போன்ற பறவைகளையும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது.
அதற்குப் பிறகு சற்று தூரத்தில் ஒட்டக சிவிங்கிகள் கூட்டம்.
அதற்கு அடுத்து முதலைகள் வாழும் இடம்.
அதன் பிறகு நட்சத்திர ஆமைகள் வாழும் பகுதி.
அதற்கும் சற்று தூரத்தில் குதிரைகள் போன்ற வடிவில் உயரத்தில் குறைந்த விலங்குகள் வாழும் பகுதி. (படத்தைப் பார்த்து பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்/ brown and white)
அதற்கு அடுத்து ஒட்டகங்கள் வாழும் இடம்.
அதற்கு அடுத்து ஒட்டகத்தின் குட்டிகள் வளர்க்கப்படும் இடம் இருந்தது.
இந்த விலங்குகளுக்கு ஆங்கங்கே தீவனம் விற்கப்படுகிறது.
அதை வாங்கி விரும்புகிறவர்கள் அவற்றிற்கு உணவு ஊட்டலாம்.
அதன் பின்பு கூண்டில் அடைக்கப்பட்ட புலிகள்.
இன்னும் சற்று தூரத்தில்
கங்காருக்களை வைத்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே நடந்து சென்றோம்.
சற்று தூரத்தில் புலி குட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நேரடியாக கைகளில் பிடித்துக் கொண்டும் தூக்கி வைத்துக் கொண்டும் பாட்டிலில் விற்கப்படும் பாலை அவற்றிற்கு ஊட்டி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் அதை நாங்கள் விரும்பாததால் அதில் கலந்து கொள்ளவில்லை.
இது கிட்டத்தட்ட ஒரு மினி மிருக காட்சி சாலை போன்று இருந்தது.
இது ஒரு மிகப்பெரிய பூங்கா.
பல இடங்களுக்கு வெகு தூரம் நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை.
முதியவர்களுக்கு தனியாக திறந்தவெளி பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. அதற்காக தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு அந்த வாகனம் தேவை இல்லையே.😀😀
இந்த பூங்காவின் நடுவில் ஒரு ஆறு ஓடுவது போன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது இயற்கையான ஆறு மாதிரி தெரியவில்லை. செயற்கையாக இவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
அதன் மீது ஒரு நீண்ட கயிற்று பாலம் அமைக்கப்பட்டு அந்த கயிற்று பாலத்தின் வழியே நாங்கள் நடந்து சென்றோம்.
கயிற்றுப் பாலத்தில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாங்கள் மட்டும் என்ன புகைப்படம் எடுக்க மாட்டோமா.
அதற்கு சற்று அப்பால் ஒரு நிரந்தர பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது நின்று பார்த்தால் அந்த ஆறு போன்று அமைக்கப்பட்ட பகுதியிலே படகு செல்வது போல இரண்டு மூன்று பொம்மைப் படகுகளும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பூங்காவின் ஓரிடத்தில் ஒரு அற்புதமான மரத்தை பார்த்தேன்.
அந்த மரத்திலிருந்து கனிகள் கயிறு கட்டி தொங்கவிட்டாற்போல் இருந்தது.
இப்படி ஒரு மரத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. எனவே என் மைத்துனரை அங்கே நிற்கச் சொல்லி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அந்த சபாரி வேர்ல்ட் பார்க்குக்குள்ளே நடைபெறும் ஷோக்களை பார்வையிட வேண்டிய நிலையில் அது நடைபெறும் நேரம் ஏற்கனவே எங்களுடைய கைகளில் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஷோவாக சென்று கண்டு களித்தோம்.

முதலில் யானைகளை வைத்து நடத்தப்பட்ட ஷோ மிக நன்றாக இருந்தது.
யானைகள் ஷோவுக்கு இடையில் யுவதிகளின் தாய் நடனம் வேறு.
அந்த ஷோ நடந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மரம் காய்ந்த நிலையில் மொட்டையாக வெட்டப்பட்டு அதை சுற்றிலும் மேலே ஏறி செல்வதற்கு ஏணி இருப்பது போன்று ஒரு அமைப்பு இருந்தது.
அது உண்மையான மரமா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மரமா என்று தெரியவில்லை. புகைப்படம் இணைத்துள்ளேன்.
இது குறித்து நமது குழுவின் உலகம் சுற்றும் வாலிபன் ராவ் சார் தனக்கு தெரிந்தால் அதற்கு விளக்கம் அளிக்கலாம்.
அடுத்ததாக உராங்குட்டான் பாக்ஸிங் ஷோ (muay Thai show).
இரண்டு மனித குரங்குகளை பாக்ஸிங் செய்ய விட்டு அவை செய்யும் சேட்டைகளை நமக்கு காட்டுகிறார்கள்.
அப்படி ஒரு ஷோவை நான் இதுவரை பார்த்ததில்லை.
மனிதர்களின் இயல்பான குத்துச்சண்டை போட்டி போல் இருந்தது.
அடுத்து உராங்குட்டான் இசைக்கச்சேரி. சரியான timing உடன் வாத்தியக் கருவிகளை இசைத்தது அபூர்வமானது.
உலகிலேயே முதல்முறையாக இந்த ஷோ இங்கே நடத்தப்படுகிறது என்றும் அறிவித்தார்கள்.
நல்ல நகைச்சுவையுடன் கூடிய ஷோவாக இருந்ததால் மிகவும் ரசித்து பாரத்தோம்.
அதன் பின்பு சீ லையன் ஷோ தொடங்கும் நேரம் என்பதால் அதிவேகமாக நடந்து சென்று அந்த அரங்கத்திற்குள்ளே அமர்ந்து அந்த ஷோவை கண்டு களித்தோம். அவற்றிற்கும் ஆற்றிவு உண்டோ என எண்ணத் தோன்றியது.
அந்த ஷோ முடிந்த அடுத்து 20 நிமிடங்களில் கடைசி ஷோவாகிய டால்பின் ஷோ ஆரம்பிக்க இருக்கிறது.
எனவே வழியில் உள்ள அனைத்தையும் வேகமாக பார்வையிட்டு விட்டு அரங்கத்திற்குள் சென்றோம்.
அது மிகப் பெரிய ஒரு அரங்கம்.
அந்த அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்திருந்தது.
ஏனென்றால் டால்பின் ஷோ என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அல்லவா.
எனக்குத் தெரிந்தவரையில் அந்த அரங்கத்திற்குள் இருந்தவர்களில் 90 சதவீதத்தினர் இந்தியர்கள் தான்.
நான் ஏற்கனவே அமெரிக்காவில் sea world என்னும் இடத்தில் இந்த ஷோக்களை எல்லாம் பார்த்திருப்பதால் எனக்கு ஒன்றும் புதுமையாக தெரியவில்லை.
ஆனால் என் மைத்துனர் மிகவும் ரசித்து பார்த்தார்.
அந்த டால்பின் ஷோ முடிந்த பிறகு நேரத்தை பார்த்தால் சரியாக பிற்பகல் 1.40 .

சரி இங்கிருந்து நடக்க ஆரம்பித்தால் கேட்டுக்கு போய் சேர்வதற்கு 2.00 மணி ஆகிவிடும் என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டு கேட்டு அருகில் வந்தோம்.
அங்கே எங்களுக்காக டிரைவர் காத்துக் கொண்டிருந்தார்.
(தொடரும் )

