பயணியர் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம்..!

”நாட்டிலேயே பயணியர் கட்டணம் வாயிலாக வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்களின் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க உள்ளோம்,” என, தெற்கு ரயில்வேயின் பயணியர் பிரிவு தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் கூறினார்.

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.

பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கம், ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பயணியர் ரயில்களை இயக்குவதிலும், தெற்கு ரயில்வே தொடர்ந்து முழு கவனம் செலுத்தி வருகிறது.

இதனால், பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், கடந்த ஏப்., முதல் ஆக., வரை மொத்தம், 32.15 கோடி பேர் பயணித்துள்ளனர்.

இது, இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 6.58 சதவீதம் அதிகம். நாடு முழுதும் ரயில்வேயில் பயணியர் பிரிவில், அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது.

அதாவது, கடந்த ஏப்., முதல் ஆக., வரை, 3,273 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது; அதற்கு முந்தைய ஆண்டை விட, 4.71 சதவீதம் அதிகம்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி:

பயணியர் பிரிவை மையமாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்படுகிறது. பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்பாடு, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில்களின் வேகம் அதிக ரிப்பு, முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் விளைவாக, கடந்த ஏப்ரல் முதல் ஆக., முதல், 32.15 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, 3,273.38 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் இருக்கிறது. கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு, ரயில் பாதைகள் அவசியம்.

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி தடத்தில், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, 3, 4வது புதிய பாதைகள், 365.42 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. பெரம்பூர் – அம்பத்துார் இடையே, 5, 6வது கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க உள்ளோம்.

தற்போது, முதல் கட்டமாக, 177 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 4வது புதிய ரயில் பாதை, 714 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. சேலம் – திண்டுக்கல் இடையே, 165 கி.மீ., துாரம் இரட்டை பாதை பணிகளும், 2,144 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,255 கோடி ரூபாயில், புதிய மற்றும் இரட்டை பாதைகள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 650 மின்சார ரயில்கள் உட்பட தினமும், 1,400க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பாதை பணிகள் முடியும் நிலையில், 2030ல் தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!