தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -8

தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 9

ஒரு வழியாக கோரல் தீவில் இருந்து எனது தொலைபேசி மீட்கப்பட்ட நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி அளித்தது போல் குழுவில் உள்ள அனைவரின் உள்ளங்களும் மகிழ்ந்தது.

அன்று எங்களது ஐட்டனரியில் ஜெம்ஸ் கேலரி விசிட் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே அந்த ஓட்டுனர் பெண்மணி எங்களை பட்டாயா நகருக்கு வெளியே உள்ள ஜெம்ஸ் கேலரி டிஸ்கவரி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஒரு மணி நேரம் அங்கு பார்வையிட்டு வர எங்களுக்கு அவகாசம் அளித்தார்.

அங்கே முதலில் எங்களை ரயில் போன்ற ஒரு வாகனத்தில் அமர வைத்து இருளான குகை போன்ற பகுதிகளுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
அங்கே இருளான பகுதியில் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் ஒளி ஒலி காட்சிகளாக எங்களுக்கு காண்பிக்கப்பட்டது.
முதலில் ரத்தின கற்கள் எவ்வாறு வெட்டி எடுக்கப்படுகிறது என்பதை ரயில் நகர்நது செல்லும்போது படங்களின் மூலமாக ஆங்காங்கே காட்டப்பட்டது.
அந்த ரத்தின கற்கள் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு முழு வடிவம் பெறுகிறது என்பதையும் காட்சிகளின் மூலம் காண்பித்தார்கள்.
அதன் பிறகு எங்களை ஓரிடத்தில் அந்த ரயில் போன்ற வாகனத்தில் இருந்து இறக்கி இரத்தின கற்களை பட்டை தீட்டுகின்ற அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று எவ்வாறு அவற்றை பட்டை தீட்டி பினிஷ் செய்கிறார்கள் என்பதையும் அருகில் அழைத்து காண்பித்தார்கள்.

சரி நுழைவு கட்டணம் கூட இல்லாமல் எதற்காக இதையெல்லாம் காண்பிக்கிறார்கள் என்று புரியாமல் அடுத்த பகுதிக்குள் நுழைந்தோம்.
அங்கே பார்த்தால் எங்களுடன் வந்த பெண்’ இவையெல்லாம் விற்பனைக்கு இருக்கிறது’ என்று சொல்ல அங்குள்ள விற்பனைப் பெண்கள் எங்களுக்கு பல்வேறு வகையான ரத்தின கற்கள் வைரக் கற்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்களை காண்பித்தார்கள்.

அங்கு தயாரிக்கப்படும் ரத்தின கற்கள் உலகத்தரம் வாய்ந்த நூறு சதவீதம் உண்மையான உத்தரவாதம் கொண்டவை என்றும் தெரிவித்தனர்.

அவர் காட்டிய சில ஆபரணங்களில் சிவப்பு ரத்தினக்கல் பதித்த ஒரு சிறிய டாலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
அதில் வைர கற்களும் பதிக்கப்பட்டு இருந்தது.
ஒரு சிறிய டார்ச் லைட் போன்ற கருவியின் மூலம் அந்த ரத்தின கற்களுக்குள் ஒளியை பாய்ச்சி அதன் கீழே ஒரு வெள்ளை தாளில் அதனுடைய ஒளிக்கீற்றை காண்பித்தார்.
‘ஒரிஜினல் கற்களில் மட்டும் இது போன்ற ஒளி வரும்’ என்றும் சொன்னார்.
( பொறுப்பு துறப்பு : இது எந்த அளவுற்கு உண்மை கன்று எனக்குத் தெரியாது) அதையும் நான் கிளிக் செய்து கொண்டேன்.
அமெரிக்கா செல்லும்போது என் மகளுக்கு பிறந்தநாளில் பரிசாக வழங்கலாம் என்று விலையை கேட்டால் 81,500 தாய் பாட்டு என்றார்கள்.
அப்படியானால் நமது ரூபாய் மதிப்பில் 2,28, 000 ஆயிரம் ஆகும்.
அதற்கு நான் செலுத்தும் வரியில் இருந்து ஆறு சதவிகிதம் தொகையை எனக்கு டாக்ஸ் ரீபண்ட் செய்வார்கள் என்றும் அதை நான் இந்தியா திரும்பிச் செல்லும் போது விமான நிலையத்தில் டேக்ஸ் ரீபண்ட் கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் என்னிடத்தில் அந்த அளவிற்கு தாய் பாட் நாணயம் இல்லை.
எனவே அந்த பெண்மணியிடம் ‘எனது இந்திய கிரெடிட் கார்டு அங்கே ஏற்றுக் கொள்வார்களா’ என்று கேட்டேன்.
‘அது விசா காட் என்றால் ஏற்றுக் கொள்வோம் ‘என்று சொன்னார்.

எனவே எனது கிரெடிட் கார்டை கொடுத்து அந்த சிவப்பு ரத்தினம் மற்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த டாலரை வாங்கிக் கொண்டேன்.
அதற்கான பில்லும் டேக்ஸ் ரீபண்ட் படிவமும் வாழ்நாள் உத்தரவாத சான்றும் அளித்தார்கள்.
என் தங்கை முத்துக்கள் உள்ள பேன்ஸி வளையல்கள் மற்றும் தோடு ஆகியவற்றை ஆறாயிரம் தாய் பாட்டுக்கு வாங்கினார்.
வாங்கிக் கொண்டு வெளியே வந்ததும் அந்த ஓட்டுனர் பெண்மணி எங்களை வாகனத்தில் அமரச் செய்துவிட்டு அந்த ஜெம்ஸ் கேலரி உள்ளே சென்று வந்தார்.
விற்பனையில் அவருக்கு கமிஷன் வழங்கப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

மீண்டும் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு பேங்க்காக் நகரை நோக்கி சென்றது.
பேங்க்காக் நகருக்கு இன்னும் ஒரு மணி நேர தூரம் இருக்கும்போது எங்களுக்கு பசி அதிகமாகிவிட்டது.

எனவே அந்த ஓட்டுனர் பெண்மணியிடம் ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்தி மதிய உணவை உட்கொண்டு விட்டு செல்லலாம் என்று சொன்னேன்.
அதற்கு அவரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
சிறிது தூரம் சென்றவுடன் ஒரு ரெஸ்ட் ஏரியாவில் வாகனத்தை நிறுத்தினார்.
அங்கு கழிவறைக்கு செல்வதற்காக அவர் இறங்கவே நாங்களும் கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.
ஆனால் அவர் வழியில் எந்த ஓட்டலிலும் வாகனத்தை நிறுத்தவில்லை.

சுமார் இரண்டு மணிக்கு கோல்டன் புத்தா கோவிலில் எங்களை இறக்கி
விட்டு அவர் காரை பார்க் செய்துவிட்டு நுழைவு டிக்கெட்டை வாங்கி எங்களிடத்தில் கொடுத்தார்.
டிக்கெட்டை கையில் வாங்கிய நாங்கள் கோவிலுக்கு போகாமல் எதிர்ப்புறம் இருக்கும் உணவு கடைகளுக்கு சென்று சாப்பிட திரும்பினோம்.
உடனே அந்த ஓட்டுனர் பெண்மணி ‘கோவிலுக்குள் போகவில்லையா’ என்று கேட்டார்.
‘எங்களுக்கு பசி அதிகமாக எடுக்கிறது எனவே நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறோம் ‘என்று சொன்னோம்.
அதற்கு அவர்’ ஏற்கனவே ஒரு இந்திய குடும்பத்தை நான் அழைத்து வந்திருக்கிறேன்.
அவர்கள் யாரும் சாப்பிடாமல் தான் கோவிலுக்கு சென்றார்க’ள் என்று சொன்னார்.
அப்போதுதான் புரிந்தது அவர் ஒரு தீவிர புத்த பக்தர் என்றும் அதனால்தான் அவர் வழியில் எங்களை எந்த ஓட்டலிலும் நிறுத்தி உணவு உட்கொள்ள விடாமல் பார்த்துக் கொண்டார் என்பதும்.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாங்கள் சாலையை கடந்து எதிர்புரம் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு அந்த தங்க புத்தர் கோவிலுக்கு வந்தோம். ஓட்டுநர் முகத்தை கடுகடுவென வைத்திருந்தார். கடுகு போட்டால் பொறிந்து விடும் போல் இருந்தது.

பெயருக்கேற்றவாறு தங்க நிறத்தில் செய்த புத்தழ் சிலை அந்தக் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.
ஐந்து நிமிடங்கள் நாங்களும் அமைதியாய் அந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்து விட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
அப்போது ஒரு guide சுற்றலாப் பயணிகள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
உடனே நாங்களும் அங்கு சென்று அவர் சொல்வதைக் கேட்டு பிரமித்துப் போனோம்.

போர் நடைபெற்றபோது, ​​பர்மியப் படைகளிடமிருந்து பாதுகாக்க சிலை ஒரு பிளாஸ்டர் பூச்சுடன் மூடப்பட்டதாம்.
1955 ஆம் ஆண்டில், சிலையை நகர்த்த முயற்சித்தபோது, ​​அது தற்செயலாகக் கீழே விழுந்து பிளாஸ்டர் உடைந்து, கீழே உள்ள திடமான தங்கத்தை வெளிப்படுத்தியதாம்.
பல நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு விலைமதிப்பற்ற புதையலை வெளிப்படுத்தி சிலையின் மகத்தான வரலாற்று மற்றும் கலாச்சார மதிப்பை எடுத்துக்காட்டியதாம்.
3 மீட்டர் உயர சிலை சுமார் 5 மெட்ரிக் டன் எடையும் மற்றும் 80%தூய தங்கத்துடன் கூடிய விலைமதிப்பற்ற புனித நினைவுச்சின்னமாகும் என்றும் தெரிவித்தார்.

அதன் பிறகு ஓட்டுனர் பெண்மணி அருகில் உள்ள மற்றொரு பெரிய வளாகத்திற்கு எங்களை காரில் அழைத்துச் சென்றார்.
அங்கு கட்டிடத்திற்கு வெளியில் ஒரு அழகிய புத்தர் சிலை இருந்தது
மறுபுறத்தில் தாய்லாந்து நாட்டின் மன்னர் மற்றும் அரசியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டிடத்தின் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் இதுவும் புத்தர் கோயிலா என்று கேட்டதற்கு அவர் இது மன்னரின் அரண்மனை என்று தெரிவித்தார்.
அரண்மனைக்கு எதிர்ப்புறம் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு மாட்டுவண்டி இருப்பது போன்ற ஒரு சிலை இருந்தது.
மறபுரம் ஒரு ஜல்லிக்கட்டு காளை ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தது.
விடுவோமா இரண்டு இடத்திலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
அப்போது மணி மாலை 4.45

இத்துடன் இன்றைய பயண நிகழ்வு முடிந்து விட்டது என்று கூறி ஓட்டுனர் பெண்மணி பாங்க்காக்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் அடங்கிய பகுதிக்கு அழைத்து வந்து அங்கே ஏற்கனவே எங்களுக்கு புக் செய்யப்பட்டிருந்த அஸ்பன் சூட் என்னும் நான்கு நட்சத்திர ஹோட்டலில் இறக்கிவிட்டு நாங்கள் செக்கின் செய்யும் வரை அங்கு இருந்துவிட்டு அவர் விடைபெற்றுச் சென்றார்.
அவருக்கு ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு வழக்கமாக கொடுக்கும் டிப்ஸ் உடன் 200 தாய்பாட்டை அதிகமாக கொடுத்து கொடுத்தேன்.
அவரும் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
தங்கைக்கும் தங்கை கணவருக்கும் ஒரு அறையும் எனக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டது.


நல்ல விசாலமான அறை. அறையைத் திறந்த உடன் மேஜை நாற்காலியுடன் ஒரு பகுதி அதற்கு அடுத்த பகுதி பெட்ரூம்
ட்ரெஸ்ஸிங் டேபிள் பாத்ரூம் வசதிகள் உடன் இருந்தது.
பட்டாயாவில் நாங்கள் தங்கிய ஹோட்டலை விட இது மிகவும் நவீன ஓட்டலாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

இரவு உணவை அடுத்த தெருவில் இருந்த தாய் உணவகத்தில் முடித்துக் கொண்டு திரும்பி வந்து அயர்ந்து தூங்கினோம்.

(தொடரும் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!