பகுதி – 7
மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை
(பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி – 7
நான்காம் நாள் காலை எழுந்து விரைவாக குளித்து முடித்துவிட்டு 7.45 மணிக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம்.
அப்போது என் தங்கை அந்த போன் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்டார்.
நான் காலையில் எழுந்தவுடன் கூட பலமுறை அந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பார்த்தேன் யாரும் எடுக்கவில்லை என்று சொன்னேன்.
அதற்கு என் தங்கை மீண்டும் இப்போது முயற்சி செய்து பாருங்களேன் என்று சொன்னார்.
சரி என்று அங்கு உணவை உட்கொண்டிருந்த நேரத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தேன்.
உடனே ஒரு நபர் அந்த காலை அட்டென்ட் செய்து ஹலோ என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஆங்கிலத்தில் அவரிடத்தில் பேசினேன். நான் கோரல் ஐலேண்டில் இந்த போனை தவறவிட்டு விட்டேன் என்று சொன்னேன்.
ஆனால் அவர் தாய்லாந்து மொழியில் என்னிடத்தில் பேசினார்.
உடனே ஒன் மினிட் ஒன் மினிட் ப்ளீஸ் என்று சொல்லிக் கொண்டு விரைவாக ஓடி ரிசப்ஷனில் இருந்த பெண்மணி இடம் கொடுத்தேன்.
அவரிடம் இது பற்றி நேற்றே நான் கூறியிருந்தேன்.
எனவே அவர் அந்த தொலைபேசியில் பேசியவரிடம் தாய்லாந்து மொழியில் பேசிக்கொண்டே
உங்களது தொலைபேசி கோரல் ஐலாண்டில் இருக்கக்கூடிய போலீஸ் அவுட்போஸ்டில் இருக்கிறதாம் என்று சொன்னார்.
நான் சொன்னேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் நாங்கள் இங்கு இருந்து பேங்க்காக் புறப்பட்டு செல்ல போகிறோம். அதற்குள் அந்த தொலைபேசியை யார் மூலமாவது இங்கே கொண்டு வந்து என்னிடத்தில் கொடுக்க முடியுமா என்று கேளுங்கள். அதற்கான செலவு தொகையை நானே கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆனால் மறுமணையில் பேசியவர் அப்படி எல்லாம் கொண்டு வந்து கொடுக்க முடியாது நீங்கள் இங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு
எந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற முகவரியையும் சொன்னாராம்.
ரிசப்ஷனிஸ்ட் அதை ஒரு பேப்பரில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார்.
அதில் அவர்களது லேண்ட் லைன் தொலைபேசி எண்ணும் இருந்தது.
என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை எங்களுக்கு.
இங்கிருந்து துறைமுகம் செல்ல வேண்டும் துறைமுகத்திலிருந்து படகு மூலமாக கோரல் ஐலேண்ட் செல்ல வேண்டும். அங்கே போய் அந்த தொலைபேசியை வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கிருந்து படகு மூலம் துறைமுக பகுதிக்கு வர வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் எங்களுக்கு இருப்பது ஒரு மணி நேரம் மட்டுமே. ஐயோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நினைத்தேன்.
உடனே பாதி உட்கொண்டிருந்த காலை உணவை அப்படியே விட்டுவிட்டு Grab app மூலம் டாக்ஸி புக் செய்தேன்.
அவர்களிடம் என் அறையையும் காலி செய்து பொருட்களை எல்லாம் வருகின்ற வாகனத்தில் ஏற்றி எடுத்துக்கொண்டு நீங்கள் துறைமுகப் பகுதிக்கு வந்து விடுங்கள்.
அதற்குள் நான் கோரல் ஐலேண்ட் சென்று அந்த தொலைபேசியை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக டாக்ஸியில் ஏறி துறைமுகப் பகுதிக்கு வந்தேன்.
துறைமுக பகுதியில் ஏற்கனவே எங்களை கோரல் தீவுக்கு அழைத்துச் சென்ற அந்த ஸ்பீட் போட் பூத்திற்கு வந்து விஷயத்தை சொல்லி கோரல் ஐலேண்ட் சென்று திரும்பி வரவேண்டும் என்று சொன்னேன்.
அவர்கள் எங்களிடத்தில் அப்படி வசதி இல்லை நீங்கள் அதோ தெரிகிறதே அந்த பூத்தில் போய் கேளுங்கள் என்று என்னை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பினார்கள்.
ஓட்டமும் நடையுமாக அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த பூத்துக்கு சென்று விஷயத்தைச் சொன்னேன்.
அங்கிருக்கும் நபர் தனியாக ஒரு போட்டில் கோரல் ஐலேண்ட் சென்று வருவதற்கு 2000 தாய் பாட்டு ஆகும் என்று சொன்னார்
அது மிகவும் அதிகம் என நான் நினைத்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அப்பொழுது அங்கிருந்த நபர் ஒருவர் ரெகுலர் போட் பஸ் இருக்கிறது என்று சொல்லி ஒரு இடத்தை காண்பித்தார்.
மீண்டும் ஓட்டம் தான்
அங்கே சென்றால் ஏற்கனவே எனக்கு முன்பாக சுமார் இருபது பேர் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.
உடனே நானும் 100 தாய் பாட் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தேன்.
அடுத்த பத்து நிமிடத்தில் போட் வந்து விட்டது.
அந்த போட்டில் ஏறி பயணம் செய்தேன்.
இது போட் பஸ் என்பதால் முன்பு சென்ற படகைவிட அதிவேகமாகவே சென்றது.
மீண்டும் கடலில் ஒரு speed boat சவாரிக்கு வாய்ப்பு. எனக்கு கடல் பயணம் என்றாலே மிகவும் பிடிக்கும்.
ஆனால் அப்போது இருந்த மன நிலையில் மனதில் மகிழ்ச்சி இல்லை.
குறித்த நேரத்தில் திரும்பி வர முடியுமா என்ற பயம் தான் இருந்தது. ஆனாலும் கோரல் தீவை நெருங்கும்போது அந்த இயற்கை அழகை வீடியோ எடுத்துக்கொண்டேன்.
சரியாக 35 நிமிடத்தில் என்னை கோரல் ஐலாண்டில் இறக்கி விட்டார்கள்.
இறங்கியவுடன் ஓட்டமாக ஓடி கரையில் இருந்த ஒரு சிலரிடம் இங்கே போலீஸ் அவுட் போஸ்ட் எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.
அதில் ஒருவர் இந்த மலையின் மீது ஏறி நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் இறங்கினால் போலீஸ் அவுட் போஸ்ட் வரும் என்று சொன்னார்.
என்னடா இது கன்னித்தீவு சிந்துபாத் கதையாகி விட்டதே என்று நினைத்தேன்.
அவர் என்ன விஷயம் என்று என்னிடம் கேட்டார்.
நான் ஆங்கிலத்தில் எனது தொலைபேசி காணாமல் போனதை சொன்னேன்.
அவரும் அதை புரிந்து கொண்டு உடனே தன்னுடைய அலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு செய்தார். அவரது தொலைபேசிக்கு ஒரு போட்டோ வந்தது.
அவர் அதை என்னிடம் காண்பித்து இதுதான் உங்களுடைய காணாமல் போன தொலைபேசியா என்று கேட்டார்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி ஆமாம் இதுதான் என்னுடைய காணாமல் போன தொலைபேசி என்று பதில் சொன்னேன்.
தான் பைக் டாக்ஸி ஓட்டுகிறவர் தான் என்றும் அங்கு கொண்டு போய் விடுவதற்கு 150 தாய் பாட் ஆகும் என்றும் சொன்னார்.
நல்லதாய் போச்சுடா என மனதில் நினைத்துக் கொண்டு உடனே சரி என்று சொல்லி அவருக்கு பின்னால் ஏறி அமர்ந்தேன்.
அவர் வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் வழியாக மலை மீது வாகனத்தை ஓட்டினார்.
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ என்று பாட தோன்றியது.
போன தொலைச்சுப்புட்டு இப்போ லோல் படுற நேரத்துல உனக்கு பாட்டு வேற கேக்குதா என்று எங்கிருந்தோ பரமு சொல்வது காதில் விழுந்தது. அதனால் எனக்கு பாட்டு வரவில்லை.
இந்த மலையின் மீது இருந்து கடல் பகுதியை பார்க்க ஒரு view point இருந்தது. இங்கிருந்து பார்க்கும்பொழுது இயற்கை மிகவும் அழகாக இருந்தது.
அதனை
முழுமையாக ரசிக்கும் நிலையில் என் மனம் இல்லை. என்றாலும் ஒரு க்ளிக் செய்து கொண்டேன்.
விரைவாகவே அவர் என்னை போலீஸ் அவுட் போஸ்டில் கொண்டு போய் இறக்கினார்.
அங்கே சற்று உயரமான இடத்தில் சிசிடிவி டவர் இருந்தது.
அங்கே கீழே இருக்கும் போலீஸ்காரரிடம் அவர் தாய்லாந்து மொழியில் விசாரித்தார்.
அவர்கள் படியேறி மேலே அலுவலகத்திற்கு செல்லுமாறு சொன்னார்கள்.
உடனே அதிவேகமாக ஓடிப் படியேறி அலுவலகத்திற்ககுள் நுழைந்தேன்.
என்னுடன் அந்த பைக் டாக்ஸி ஓட்டுபவரும் வந்திருந்ததால்
அவர் தாய்லாந்து மொழியில் மப்டியில் இருந்த ஒரு போலீஸ்காரரிடம் விசாரித்தார்.
அவர் உடனே எனது போனை எடுத்துக் கொண்டு வந்து இதுதான் உங்கள் போனா என்று கேட்டார்.
நான் ஆமாம் என்று சொன்னவுடன் எனது பயோமெட்ரிக்கை பயன்படுத்தி அந்த தொலைபேசியை ஆன் செய்யும்படி கேட்டார்.
நானும் உடனே அந்த தொலைபேசியை ஆன் செய்து காண்பித்தேன்.
அப்போது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது.
எனவே என்னிடத்தில் ஒரு ரெஜிஸ்டரில் என்னுடைய தொலைபேசி எண்ணை குறித்து கையொப்பமிட சொன்னார்.
நான் கையொப்பமிட்ட உடன் அவர் போனை என்னிடத்தில் கொடுத்து விட்டு அவரது தொலைபேசியில் இருந்து போனை ஒப்படைப்பது போன்ற ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். எங்களுடன் அங்கு மப்டியில் இருந்த மற்றொரு பெண் போலிசும் படத்தில் இணைந்து கொண்டார்.
உடனே நானும் என்னுடைய தொலைபேசியை கொடுத்து அவர்களை போட்டோ எடுக்க சொன்னேன்.
தாய்லாந்து போலீசை மனதார வாழ்த்தி விட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு படியில் ஓடி வந்து இறங்கினேன்.
அந்த பைக் டாக்ஸி ஓட்டுனர் திரும்பவும் அங்கே கொண்டு போய் விடுவதற்கு மீண்டும் 150 தாய் பாட் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
சந்தோஷமாக சரி என்று ஒப்புக்கொண்டு அவர் பின்னால் அமர்ந்து கொண்டேன்.
அப்போது எனது தங்கை என்னுடைய அலைபேசி எண்ணை கார் டிரைவருக்கு கொடுத்து அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு கால் வந்தது.
பேசியவர் ஒரு பெண்மணி.
அவர்கள் துறைமுகப் பகுதியில் காத்திருப்பதாக சொன்னார்கள்.
நான் வர குறைந்த பட்சம் இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும். எனவே தயவு செய்து காத்திருங்கள். அதற்காக நான் தங்களுக்கு தனியாக கட்டணம் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.
சரி என்று ஒப்புக்கொண்ட அந்த ஓட்டுனர் பெண்மணியுடன் தங்கையும் தங்கையின் கணவரும் அங்கேயே காத்திருந்தார்கள்.

பைக் டாக்ஸி ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு மீண்டும் மலை ஏறி இறங்கி அந்த போட் பஸ் புறப்படக்கூடிய இடத்தில் என்ன இறக்கி விட்டார்.
அவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு கூடுதலாக 50 தாய் பாட்டுடன் சேர்த்து 350 தாய் பாட்டை அவருக்கு கொடுத்துவிட்டு
ஒரே ஓட்டமாய் ஓடி சென்று டிக்கெட் வாங்கினேன்.
அப்போதும் அங்கே பத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்தார்கள்.
அடுத்த ஐந்து நிமிடத்திலேயே போட் வந்து விட்டது.
போட் அதிவேகத்திலேயே என்னை துறை முகப்பகுதியில் வந்து இறக்கி விட்டது.
அங்குள்ள பாலம் வழியாக சாலைக்கு வந்து சேர அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் இருக்கும்.
எனவே மீண்டும் வேகமாக ஓடி சாலை பகுதிக்கு வந்தேன். அங்கே எனக்காக அந்த வாகனம் காத்துக் கொண்டிருந்தது.
ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டு கொண்டேன்.
எங்கள் மூவருக்குமே ஒரே மகிழ்ச்சி
பைபிளில் காணாமல் போன அந்த வெள்ளி காசை கண்டுபிடித்த பெண்மணி எப்படி அட்டை வீட்டாரை அழைத்து மகிழ்ச்சி அடைந்தாரோ அதேபோன்று ஒரு மகிழ்ச்சியில்
மனதார இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.
அந்த போனை போலிஸில் ஒப்படைத்த அந்த நபரை மனதார வாழ்த்தி அவருக்காக இறைவனுக்கு நன்றி கூறினேன்.
நான் முன்னிருக்கையில் அந்த ஓட்டுனர் பெண்மணிக்கு அருகில் அமர்ந்து கொண்டேன்.
தங்கையும் அவரது கணவரும் பின் இருக்கையில் தாராளமாக அமர்ந்து கொண்டார்கள்.
அந்த ஓட்டுனர் பெண்மணி நன்றாக ஆங்கிலம் பேசினார்.
அவரும் மிக ஆர்வமாக அந்த போன் கிடைத்தது பற்றிய கதையை கேட்டு தெரிந்து கொண்டு ஓ சூப்பர் என்றார்.
700 தாய் பாட் செலவில் எனது போன் மீண்டும் கிடைத்துவிட்டது. இப்போது அனைலருக்கும் மகிழ்ச்சி தானே.
ஓடி ஓடி நானும் இன்று மிகவும் களைத்து போய் விட்டேன்.
இந்தப் பகுதியும் சற்று நீண்டு விட்டதால் நீங்களும் கலைத்து போய் இருப்பீர்கள்.
(தொடரும் )

