சர்வதேச சைகை மொழிகள் தினமின்று! உலகில் 7. 2 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர்.இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிபடுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. நாம் அனைவருமே பல்வேறு சூழல்களில் தகவல் தொடர்பை எளிமையாக்க மற்றும் ஒலி மாசைக் குறைக்க உடல் மொழி மற்றும் சைகைகளைப் பயன்படுத்துவது நிதர்சனம். ஆகவே, இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும் வண்ணம் நாம் சைகை மொழியை ‘இணைப்பு மொழி’யாக்கி பயன் பெறலாம்.மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக வளாகத்தில் ”சாத்தியங்களின் அருங்காட்சியகம்” (Museum of Possibilities) அமைத்து நாட்டிற்கே உதாரணமாக விளங்கும் தமிழகம் இதையும் முயன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்தவும், உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும். உள்ளடக்குதல் பிறருக்காக செய்யப்படும் முயற்சியாக இல்லாமல் பிறருடன் இணைந்து செய்யப்பட்டால் மட்டுமே அதன் இலக்கை அடைய முடியும். இதனை சின்னவர் துமுவாக பொறுப்பேற்ற பிறக்காவது மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழு கருத்தில் கொண்டு தமிழ், ஆங்கிலத்துடன் சைகை மொழியையும் இணைத்து மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இந்திய-பாகிஸ்தான் போர், முடிவுக்கு வந்தது இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த இந்தப் போர் 17 நாட்கள் நீடித்தது. அதாவது 1965ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடந்தது. காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானை புரட்டி எடுத்து விரட்டியது. செப்டம்பர் 23 ம் தேதி இப்போர் முடிவுற்றகாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இப்போரில் தான் வெற்றி பெற்றதாக பாகிஸ்தானும் சொல்லிக் கொள்கிறது.
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) நினைவு தினம். தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ‘மனம்’ என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான இவரையே சாரும். உள்மனம் (unconscious mind) பற்றிய கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறை, மனநல பாதிப்புகளைப் பாதிக்கப்பட்டவருடன் பேசியே குணப்படுத்தும் உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைமுறை போன்றவற்றை நிறுவியவர் அவர். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து ஆற்றல் என அழுத்தமாகப் பதிவு செய்தவர் பிராய்ட் செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி – மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள், ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினார். கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘உணர்வுகளைக் கனவுகள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன. கனவுகள் ஒழுங்கற்றவை. உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’ என்றார். தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல. அது தொடர்ந்து மாறுவது என்பார். அதை உயிரோட்டமுள்ள உளவியல் (Dynamic Psychology) என்ற பெயரில் முன்வைத் தார். இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
சுவாமி தயானந்தர் நினைவு நாளின்று சுவாமி தயானந்தர் காவிரிக் கரையில் பிறந்து இமாலயத்தின் கங்கைக் கரையில் தவமியற்றிவர். பாரத பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலகம் முழுதும் பரவச் செய்தவர். அவருடைய பிறந்தநாளே இந்திய நாட்டின் விடுதலை நாளாகவும் அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆம்.. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபாலய்யர்-வாலாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக 15.8.1930 ல் பிறந்தார். பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் நடராஜன். தன் எட்டாவது வயதில் தந்தையை இழந்தார். விவசாய வருமானத்தில் தன் நான்கு மகன்களையும் வளர்த்தார் இவரது தாய். தினமும் காயத்ரி ஜபமும், வெள்ளிக்கிழமைகளில் சரஸ்வதி பூஜையும் தவறாது செய்து வந்தார். எஸ்.எஸ்.எல் .சி வரை படித்தார். சென்னை வந்து தட்டெழுத்தும் சுருக்கெழுதும் பயின்றார். பின் ‘தார்மிக ஹிந்து’ பத்திரிகையில் பணியைத் தொடங்கினார். இந்திய விமானப் படையில் சில காலம் பணிபுரிந்தார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘லென்ஸ்’ (Lens) செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பத்திரிகைத் துறையின் நுணுக்கங்களைக் கற்றார். பின்னர் ‘வோகர்ட் பிரதர்ஸ்’ என்ற நிறுவனத்தில் தட்டச்சர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். 1953-ம் ஆண்டு உபநிடத உண்மைகளால் ஈர்க்கப்பட்டு சின்மயானந்தரின் புத்தகப் பதிப்புப் பணிகளைத் திறம்பட செய்தார். வேதம் மற்றும் சம்ஸ்கிருதம் இரண்டையும் பண்டிதர்களிடம் முறைப்படி பயின்றார். ‘சின்மயா மிஷன்’ தோன்றியபின், அதன் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். இதனால் சின்மயா மிஷனில் காரியதரிசி பதவி இவரைத் தேடி வந்தது. 1957-ம் ஆண்டு ‘தியாகி’ (Thiyagi) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஆன்மிகக் கட்டுரைகளை எழுதும்போது ஆத்ம ஞானம் குறித்த பல விஷயங்களை அறிந்துகொண்டார். பகவத் கீதை புத்தகத்தை நான்கு தொகுதிகளில் பதிப்பிக்கும் பணியை திறம்பட முடித்தார். ஆந்திர மாநிலம் குடிவாடாவில் வசித்த ஸ்வாமி ப்ரணவானந்தரிடம் வேதாந்த ரகசியங்களை விரிவாகக் கற்றார். 1962-ம் ஆண்டு சிவராத்திரி தினத்தில் முறைப்படி சந்நியாசம் ஏற்றுக்கொண்டார். சந்நியாச ஆசிரமத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் ‘ஸ்வாமி தயானந்த சரஸ்வதி’. 1632 – ம் ஆண்டு ‘தபோவன் பிரசாத்’ பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார். பின், ரிஷிகேஷ் சென்று சிறு குடிலில் ஆன்மிக சாதனைகளைத் தொடர்ந்தார். சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் உபநிடதங்களின் முடிவாகிய ப்ரஹ்ம சூத்திரமும் பயின்றார். ஆன்மிக சாதகர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களைக் கற்பித்தார். 1967 – ம் ஆண்டு இமயமலையின் அடிவாரத்தில், கங்கைக் கரையில் சொந்தமாக ஓர் ஆஸ்ரமம் நிறுவினார். 1982 – ம் ஆண்டு ‘ஆர்ஷ வித்யா பீடம்’ என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். இங்கு நீண்ட காலமாக வேதாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கும் பரவி இருக்கும் சுவாமிஜியின் சீடர்கள் இங்கு வந்து ஆன்மிக முகாம்களை நடத்துகிறார்கள். அயல் நாடுகளுக்கும் சென்று வேதாந்த கருத்துகளைப் பரப்பி ஆஸ்ரமங்களை நிறுவினார். இவர் வெளியிட்ட ‘வீடு தோறும் கீதை’ புத்தகத்தை உலகம் முழுவதும் பல மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பிப் படிக்கின்றனர். இவர் துவக்கிய, ‘Aim For Seva ” அமைப்பு இந்தியா முழுவதும் கல்வி மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செய்கிறது. தான் பிறந்த மஞ்சக்குடி கிராமத்தில் கல்வி அறக்கட்டளை நிறுவி பள்ளி மற்றும் கல்லூரியை ஆரம்பித்து முன்னோடி கிராமமாக மேம்படுத்தினார். ஸ்வாமிஜி மிகவும் எளிமையானவர். அனைவரையும் சமமாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். சிக்கலான வேதாந்த விஷயங்களைக்கூட மிகவும் எளிமையாகவும் கதைபோலவும் நகைச்சுவை கலந்து சொல்லி விளங்க வைத்தவர். குறிப்பாக, வேதாந்தக் கருத்துகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பிரத்தியேகமான கவனமும் அக்கறையும் கொண்டிருந்தார். ”இன்றைய இளைஞர்கள் நம்மைவிடவும் மிகுந்த புத்திசாலிகள். எதையும் கற்றுக் கொள்வதில் துடிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே குறை பொறுப்பு இல்லாததுதான். நாம் முதலில் அவர்களுடைய பொறுப்புணர்வை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். இது சற்று சவாலான பணிதான். ஆனால், நாம் சிரத்தை எடுத்து இதைச் செய்துதான் ஆகவேண்டும்.” என்றார் ஸ்வாமிகள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற வேதாந்த உண்மையை உலகெங்கும் ஒலிக்கச் செய்த தயானந்தர், 2015 – ம் ஆண்டு இதே செப்டம்பர் 23 – ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
ஜெய சாமராஜா வோடியார் பகதூர் நினைவு நாள் இவர் மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். இந்திய விடுதலைக்கு முன்னர் இவருடைய சமஸ்தானம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.அதன் பின்னர் இந்திய அரசிடமிருந்து மன்னர் மானியம் பெற்றுவந்தார் . 1971-இல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்புச் சட்டப்படி, அனைத்து 560 சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு மன்னர் மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஜெய சாமராஜா வோடியார் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.
பி.யு.சின்னப்பா நினைவு நாளின்று நம்ம தமிழ் சினி ஃபீல்டில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இணைகளுக்கெல்லாம் முன்னோடி எம்.கே.டி.பாகவதர்-பி.யு.சின்னப்பா. எம்.கே.டி முதல் சூப்பர் ஸ்டார் என்றால், பி.யு.சின்னப்பா முதல் சூப்பர் ஆக்டர். ரெண்டு பேருமே நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு வந்தவய்ங்க. பாகவதருக்கு ‘பவளக்கொடி’ நாடகம் மாஸ்டர் பீஸ் என்றால், பி.யு.சின்னப்பாவுக்கு ‘கோவலன்’ நாடகம். காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் நடத்தப்பட்ட பவளக்கொடி நாடகத்தில் எம்.கே.டி, பி.யு.சின்னப்பா இருவரும் சேர்ந்து நடிச்சிருக்காய்ங்க. பாகவதர் அர்ஜுனன் வேடமேற்க, கிருஷ்ணனாக நடித்தார் பி.யு.சின்னப்பா. பாடல்களில் பாகவதரும் நடிப்பில் பி.யு.சின்னப்பாவும் முத்திரை பதிச்சாய்ங்க.
தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர்,, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான கு.அழகிரிசாமி பிறந்த நாள் அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் “ஆனந்த போதினி’, “பிரசண்ட விகடன்’ ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். “பிரசண்ட விகடனி’ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு “தமிழ்மணி’ என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.”தமிழ்மணி’ வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட “சக்தி’ மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின. “ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை. அழகிரிசாமி 1970-ம் ஆண்டு தனது 47-வது வயதில் மறைந்தார்.
