நாளைய உலகம் இளைஞர்கள் கையில்தான் என்று பெருமையாக சொல்லும் தினம்தான் இன்றைய தினம்…ஆம் …இன்றைக்கு சர்வதேச இளைஞர்கள் தினம்….. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவு பூர்வமாகவும் பயன்படுத்தலாம். ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவது தான் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் காடுகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த யானைகளை நாம் இப்போது கோவில்களிலும், சர்கஸிலும் தான் காணமுடிகிறது. இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலகத்தில் மிகப்பெரிய பாலூட்டி இனம் யானை ஆகும். யானைகளில் மூன்று சிற்றினங்கள் உள்ளன அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள். இந்தியாவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் கிடையாது, ஆசியாவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் உண்டு. இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது. ஆண் யானையை களிறு என்றும், பெண் யானையை பிடி என்றும் அழைக்கின்றனர். பெண் யானைகளின் கர்ப்ப காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோ கிராம் எடையையும் கொண்டிருக்கும். யானையின் தோல் சுமார் 3 செ.மீட்டர் தடிமனாக இருக்கும். யானைகளால் மனிதர்களின் குரலை வைத்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும். யானை பற்றிய 10 வரிகள்: இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே யானைகள் உறங்குகின்றன. மற்ற நேரத்தில் காடுகளை உலாவி வருகின்றன. விலங்குகளில் அதிக அளவு நியாபகத்திறனை கொண்டுள்ள விலங்கினம் யானை. யானை இறந்துவிட்டால் மற்ற யானைகள் இறந்த யானையை அடக்கம் செய்கின்றன. அதே போல் யானைக்கு உடம்பு சரி இல்லையெனில் மற்ற யானைகள் தொற்று உள்ள யானையை கவனித்து கொள்கின்றன. யானைகள் மற்ற விலங்குகளை போல அடித்து கொள்ளாமல் ஒற்றுமையாக வாழக்கூடியவை. யானையால் துள்ளி குதிக்க முடியாது. மன அழுத்தம் போன்ற நோய்கள் யானைக்கும் உள்ளது. யானையின் இரண்டு தந்தமும் சம அளவில் இருக்காது. யானையின் தும்பிக்கை 40,000 தசைகளால் ஆனது. இவற்றின் தந்தங்கள் நல்ல விலைக்கு போவதால் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. யானையின் பற்கள் ஐந்து கிலோ எடை கொண்டது. யானை இனத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செப்டம்பர் 2-ம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இவைகள் நீர் நிலைகளை கண்டால் சிறு குழந்தைகளை போல விளையாடி மகிழ்கின்றன. சரக்குகள் மற்றும் பெட்டிகளை இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்தபட்டன. இவைகள் பிறக்கும் போது பார்வை திறன் அற்றவையாக உள்ளது. அளவில் பெரியதாக இருக்கும் யானைக்கு எறும்பு, தேனீக்கள் எதிரியாக உள்ளது. இந்தோனேஷிய தீயணைப்பு துறையில் யானைகள் தீயை அணைப்பதற்கு பயன்படுகிறது. யானை எத்தனை வருடத்திற்கு ஒரு முறை குட்டி போடும்? நான்கு வருடங்களுக்கு ஒரு முறை குட்டி போடும். யானைகளுக்கு பிடிக்காத நிறம் எது? சிவப்பு நிறம் பிடிக்காது.
தேசிய நூலகர் தினம் நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணி. அதற்கு ஒரு நிரந்தர வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமை. அந்தப் பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். 1948-ல் இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது. இந்திய நூலகத்துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்புமுறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்புமுறை எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. அதோடு, நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய செயல்களுக்காக எஸ்.ஆர். ரங்கநாதன் ‘இந்திய நூலகத் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12-ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சிறந்த நூலகர்களுக்கு ‘நல் நூலகர்’ விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது.
கறுப்பழகி கிளியோபாட்ரா மரணித்த நாளின்று எகிப்தை ஆண்ட பன்னிரண்டாம் தொலமிக்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாய் பெயர் இஸிஸ் எனக் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் முடிசூட இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், அவரது சசோதரருக்கு 10 வயது எனத் தெரிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது. அமைச்சர்களும், வணிகர்களும் தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட தொலமியை உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள் ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிந்தாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிட்டாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் (சகோதரர்) நடந்த சண்டையில் சீசர் கணவனை கொன்று விடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் சிசேரியன் எனக் கூறப்படுகிறது. நெடுநாள் கழித்து ரோமாபுரிக்கு சென்ற சீசர் தனது நண்பன் புருட்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நடைபெற்றது. கணவர் துணையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதரனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி- கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார். சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொலை செய்யப்பட்டார். ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப் பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுகிறார்கள். கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்கிறார்கள். கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன. கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், ஜோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது. அடிசினல் தகவல் தினம் பாலில் குளிப்பவள், கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள், உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள் என்ற கருத்தும் உண்டு.
