உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல் நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இதனை தொடர்ந்து காவல் துறை சார்பில் 27 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13.54 கோடி ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 60 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
