டிரம்ப் அறிவிப்பு: ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதம். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளர்.
