இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 31)

1995 ஆம் ஆண்டு இதே ஜூலை 31 அன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதல் மக்களுக்கான செல்போன் சேவை தொடங்கப்பட்டது. இதில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம், மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவுடன் முதல் செல்போன் அழைப்பை மேற்கொண்டு சேவையைத் தொடங்கி வைத்தார். இந்திய-ஆஸ்திரேலிய கூட்டு நிறுவனமான மோதி-டெல்ஸ்ரா இந்தச் சேவையை வழங்கியது. இருப்பினும், இந்தச் சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைய காலகட்டத்தில் தொலைபேசி கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்தன. வெளிச்செல்லும் (Outgoing) மற்றும் வரும் அழைப்புகளுக்கு (Incoming) ஒரு நிமிடத்திற்கு ரூ. 8.40 நிர்ணயிக்கப்பட்டது. பிஸியான நேரங்களில் (Peak Hours) இது நிமிடத்திற்கு ரூ. 16.80 ஆக வசூலிக்கப்பட்டது. பண மதிப்பு சற்று அதிகமாக இருந்த அக்காலத்தில், இந்த செல்போன் பில் மிக செலவுமிக்கதாகவே கருதப்பட்டது. செல்போன் வைத்திருப்பது என்பது மிகவும் வசதி படைத்தவர்களுக்கான ஒரு ஆடம்பரப் பொருளாகவே பார்க்கப்பட்டது.

உத்தம் சிங்.. இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை ‘வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது.. ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று நம்மூர் இந்திய இளைஞன், உத்தம்சிங் பதம் செய்தான்… சொன்னபடியே பல வழிகளில் முயன்று சரியாக 21 ஆண்டுகள் போராடி இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங். … அப்பேர்ப்பட்டவர் 1940- ஆம் ஆண்டு இதே ஜூலை 31 அன்று பென்டோன்வில் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

தீரன் சின்ன மலை தூக்கில் இட்டு கொலை செய்யப்பட்ட நாள் …! இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகிய வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பல வீரர்கள் பிறந்த வீர பூமி நம் தமிழ்நாடு. அவர்களுள் மிக மிக முக்கியமானவர் தீர்த்தகிரி என்ற பெயர் கொண்ட தீரன் சின்னமலை அவர்கள். கட்டபொம்மனை போல வெள்ளையர்களுக்கு அடிபணியாது இறுதி வரை எதிர்த்து மரணம் அடைந்தவர் சின்னமலை. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் இந்த தீரன் சின்னமலை. ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் மிக மிக வல்லவர். ஜூலை 31 தீரன் சின்னமலையின் இறந்தநாள்… இந்நாளில் அவரின் வரலாற்றை படித்து இந்திய விடுதலை போரில் அவரின் தியாகத்தை நினைவு கூர்வோம். கொங்குப்பகுதியில் வசூலித்த வரிகள், தானியங்கள், கல்நடைகளுடன் 1782ல் மைசூர் புலி ஹைதர் அலியின் திவான் முகமது அலி வருகின்றான், தீர்த்தகிரி என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் தலைமையில் ஒரு இளைஞர் படை வழிமறித்து நிற்கின்றது. “யார் நீ?” திவானின் அதிகாரக் கேள்வி எழுகிறது. “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று உரிமைக்குரல் நீள்கிறது. “இது மைசூருக்கு கட்டுப்பட்ட ஆட்சி” என்கிறார் திவான். இங்கு எங்களாட்சி தவிர வேறு எந்த ஆட்சியும் செல்லாது என்று தீர்த்தகிரி தீர்மானமா பதில் தருகிறான். தொடர்ந்து வரிப்பொருட்களை பறித்து உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர் தீர்த்தகிரியின் படையினர். வரிகளையும், அதிகாரத்தையும் திவான் இழந்து அவமானத்தைச் சுமந்து சென்றான். வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றான். தனது படைகளை திரட்டினான். தீர்த்தகிரி பாளையத்தின் மீது படையெடுத்து வந்தான். தகவல் அறிந்த தீர்த்த கிரி தனது பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் திவானின் படையை வழிமறித்து எதிர் கொண்டான்.பாளையங்களை தாண்டியும் தீர்த்தகிரியின் கீர்த்தி பரவியது. தோல்வி அடைந்த திவான் மைசூருக்கு சென்று பெரும் படையுடன் திரும்ப நினைத்தான். ஆனால், அதற்குள் 1782ல் ஹைதர் அலி மரணம் அடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அரியனை ஏறிய திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க விரிவான அணியை உருவாக்கினான்.கொங்கு நாட்டு தீர்த்த கிரிக்கும் அழைப்பு விடுத்தான். அண்டைய மன்னனின் ஆட்சியை ஏற்காத தீர்த்தகிரி அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடத்தயங்குவானா?தானும் இரு தம்பிகளுடனும், தனது நம்பிக்கைக்குரிய வீரர்கள் கருப்பன், வேலப்பருடனும், திப்புசுல்தானின் ஆங்கிலேய எதிர்ப்பு அணியில் இணைந்தான். 1000 பேர்கள் கொண்ட தீர்த்தகிரியின் படைக்கு திப்புவின் நண்பர்கள் பிரெஞ்சு தளபதிகள் பயிற்சி அளித்தனர். முறையான படைத்தளபதியாக உயர்ந்தான் தீர்த்தகிரி. இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார் தீர்த்தகிரி. புலவர் பெருமக்களை ஆதரித்தார்.சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சமயங்களை சேர்ந்தவர்களும் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.தீர்த்தகிரி தனது படைபலத்தை பெருக்கி ஒடா நிலையில் கோட்டையை கட்டி முடித்தான். அங்கேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய துவங்கினான். பிரிட்டிஷாருக்கு, சேலமும், மலபாரும், மைசூரும் தங்கள் வசம் உள்ளபோது இடையில் உள்ள கொங்குப்பகுதி அவர்கள் வசம் இல்லாதது இடைஞ்சலாக இருந்தது. தீர்த்தகிரிக்கு தூது அனுப்பி அவர்களுடன் இணைந்து வரிசெலுத்திட கோரினர். தீர்த்தகிரி தீர்க்கமாக மறுத்தான். எதிர்விளைவுகள் என்னவாக இருந்தாலும் சந்திக்க தயாரானான். மண்டியிட மறுத்த தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்தான் தீர்த்தகிரி, நொய்யல் ஆற்றில் தனது படைகளுடன் காத்திருந்து வெள்ளையர் படையை எதிர்கொண்டு சிதறடித்தான். கேப்டன் மக்கீஸ் கானின் தலைதுண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட ஆங்கிலேயர்கள் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802இல் குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் தீர்த்த கிரியின் படையுடன் மோதியது. தீர்த்தகிரி என்ற அந்த தீரன்சின்னமலையின் தனிதிறமைவாய்ந்த வீரத்தை யுத்தகளத்தில் நேரில் கண்டான். தனது படைகளுடன் சமாளிக்க முடியாமல் பின்வாங்கினான். எப்படியும் தீரன் சின்னமலையை வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் வெள்ளையர்கள் பெரும் பீரங்கிபடைகளை அனுப்பினர். அதே வேலப்பன் மூலமாக தகவல் அறிந்த தீரன் சின்னமலை பின்வாங்கி பதுங்கிடத்திட்டமிட்டான். கருப்பனையும்ன் மற்றவர்களையும் ஒரு பகுதியில் மறைந்திருக்க உத்தரவிட்டு, தான் இரு சகோதரர்களுடன் மற்றும் நல்லப்பன் என்ற சமையல்காரனுடன் பழனி கருமலை காட்டில் பதுங்கினான்.ஒடாநிலை வந்து சேர்ந்த பீரங்கிப் படை கோட்டை காலியாக இருந்ததை கண்டு ஏமாந்தது. கோட்டையில் சோதனையிட்டதில் வேலப்பன் அனுப்பிய தகவல் குறிப்புகள் கண்டெடுத்து அதிர்ந்தனர்.அந்த இடத்திலேயே வேலப்பனை சுட்டு பழிதீர்த்து கொண்டனர். எப்படியும் தீரன் சின்னமலையை பிடிப்பதில் தீவிரம் காட்டினர். தேடினர். பல அறிவிப்புகளை செய்தனர். மாவீரர்கள் வாழ்வில் காட்டிக்கொடுப்பம்வர்களுக்கு பஞ்சம் எது? ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைகளுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்ட சமையல்காரன் நல்லப்பன் என்பவன் தீரனை காட்டிக்கொடுகக் துணிந்தான். உணவிற்காக வந்த தீரன் சின்னமலையையும், அவர்களது தம்பிகளையும் “நயமாக‘’ பேசி ஆயுதங்களை வெளியில் வைத்து, உள்ளே உணவருந்த அழைத்துச் சென்றான். காத்திருந்த கயவர்கள் இவர்களை கைது செய்தனர். விசாரணைகள் நடந்தது, ஆங்கில ஆட்சியை ஏற்கவேண்டும் என்றனர். மண்டியிடுவதைவிட மரணமே மேலானது என முடிவெடுத்தான். விளைவு தூக்குத் தண்டனை 1805 ஜூலை 31 சங்ககிரியில் சாலையோர புளியமரத்தில் தீரன் சின்னமலை, அவரது சகோதரர் கருப்பன் ஆகியோரை தூக்கிலிட்டனர். வெள்ளையர் காலத்தில் புளியமரங்கள் புளி கொடுப்பதைவிட விடுதலைப் போராட்ட வீரர்களின் உயிரெடுக்கவே அதிகமாக பயன்பட்டுள்ளது. தீர்த்த கிரியாக பிறந்து தனது வீரத்தால் பெரும் கீர்த்திகளைப்பெற்று தீரன்சின்னமலையக இன்றும் வலம்வந்து கொண்டிருக்கிறான்.

உலக ரேஞ்சர் தினம் பணியின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வனப்பாதுகாவலர் எனப்படும் ரேஞ்சர்களை நினைவுகூரும் விதமாகவும், இயற்கை பொக்கிஷங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க ரேஞ்சர்கள் செய்யும் பணிகளைக் கொண்டாடும் விதமாகவும் ஜூலை 31 ஆம் தேதி உலக ரேஞ்சர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளிலாவது ரேஞ்சர்ஸ் செய்யும் துணிச்சலையும் தியாகத்தையும் பற்றி ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!