சுபான்ஷு சுக்லா – இன்று மாலை தரையிறங்குகிறார்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார்.

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர்.

விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும்.

இந்த நிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருந்த நேரத்தைவிட 10 நிமிடம் தாமதமாகும். விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.40 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழையும். அப்போது அதன் வேகம் மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும்.

இதையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 2.53 மணியளவில் டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய ‘டுரோக்’ பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கும். இது விண்கலத்தை 156 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 53 கிலோ மீட்டர் வேகமாகக் குறைக்கும். பின்னர், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து, டிராகனின் வேகத்தை 7 கிலோ மீட்டராக குறையும். பகல் 3 மணிக்கு டிராகன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரையிறங்கிய 10 நிமிடங்களுக்குள், ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடையும். பின்னர் விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து செல்வார்கள். பின்னர் 4 பேரும் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு சுபான்ஷு சுக்லாவின் இந்த வெற்றிகரமாக திரும்புதல் ஒரு பெருமையான தருணமாகும். சுக்லாவின் பணி இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என்று நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!