ஆபரேஷன் சிந்தூர்: உலக நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு இன்று பயணம்..!

கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, பாஜக எம்.பி.க்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் ‘இந்தியா’ கூட்டணியையும் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த அனுராக் தாக்குர், அபராஜிதா சாரங்கி, மணீஷ் திவாரி, அமர்சிங், அசாதுதின் ஒவைசி, ராஜீவ் பிரதாப் ரூடி, சமிக் பட்டாச்சார்யா, பிரிஜ் லால், சர்பராஸ் அகமது, பிரியங்கா சதுர்வேதி, விக்ரம்ஜித் சவ்னி, சஸ்மித் பத்ரா, புவனேஸ்வர் கலிடா உள்ளிட்ட எம்.பி.க்கள் இக்குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். அந்த குழுக்களில் திறமையான தூதரக அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு குழுவும் 4 அல்லது 5 நாடுகளுக்கு செல்லும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி சொல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் 9 பேர் கொண்ட முதல் எம்.பி.க்கள் குழு நேற்று தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த குழு ஜப்பான், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவின் நிலைபாடு குறித்து விளக்கம் அளிக்கிறது.

இந்த நிலையில் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது. இந்த குழு அங்கிருந்து ஸ்பெயின், கிரீஸ், லாத்வியா, சுலோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. கனிமொழி எம்.பி. இடம் பெற்ற இந்த குழு பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 2-ந்தேதி நாடு திரும்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!