வக்பு திருத்த சட்டம்:சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்..!

புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.

வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கை கடந்த 15-ந் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு குறித்த விசாரணைக்காக 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, மனுதாரர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 3 பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும். சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்பு போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. வக்பு, கோர்ட், பத்திரம், பயனீட்டாளர்களில் யார் அறிவிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது என்று வாதிட்டார்.

இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில் சிபல், ‘இந்த வழக்கை தனித்தனியாக ஒவ்வொரு பிரிவாகவும் விசாரிக்க முடியாது. வக்பு சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லீம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோவில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை.

நான் மசூதிகள் குறித்து பேசுகிறேன். ஒரு மத நிறுவனத்திற்கு அரசு நிதியளிக்க முடியாது. வக்பு சொத்துக்களை எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகையில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வக்பு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வக்பு என்பது அல்லா அல்லது கடவுளுக்காக கொடுக்கப்படுவது. அவ்வாறு கடவுளுக்கு கொடுக்கப்படுவதை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.

ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. பழங்கால ஒரு அமைப்பை அதன் தன்மையை இழக்க செய்திடும். மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது. வக்பு சொத்து பதிவு செய்யப்படாவிட்டால், வழக்குத் தொடர முடியாது என்பது அரசியலமைப்பு பிரிவு 14ஐ மீறும் செயலாகும். இந்த சட்டத்தின் மூலம் ஒரு சமூகத்தின் சொத்துகளை அரசு கையகப்படுத்துகிறது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், முந்தைய 1995 வக்பு சட்டத்தின் விதிகளை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை. மேலும் இந்த விவகாரம் ஒரு அரசியல் சாசனம் தொடர்பானது. வழக்கு வலுவானதாக இல்லாத பட்சத்தில் தேவையில்லாமல் கோர்ட்டு தலையிடுவதில்லை. வக்பு போர்டு சொத்து தொடர்பாக அவுரங்காபாத்தில் பல்வேறு சர்ச்சை சொத்துக்கள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!