பள்ளி திறக்க 16 நாட்கள் உள்ளதால் சேர்க்கையை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை 1.8 லட்சத்தை தாண்டியுள்ளது. நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கன்வாடி மையங்களில் படித்து முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
