அன்னையர் தினம்
ஆம்.. அன்னையர் தினம் (Mother’s Day) ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2ஆம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. எந்தவொரு குடும்பத்திலும் முக்கிய உறுப்பினராக இருக்கும் அன்னையரின் அர்பணிப்புகளும், தியாகங்களும் போற்றத்தக்கவை. இதனை நினைவுக்கூறும் விதமாகவே அன்னையர் தினம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது

“அம்மா” – இந்த ஒரு சொல் உள்ளடக்கிய உணர்வுகளுக்கு எல்லையே இல்லை. அன்பு, பொறுமை, தியாகம், நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட இந்த வார்த்தை, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஜீவனின் இதயத்தில் தனி இடம் பிடிக்கிறது. அணுதினமும் நம் கோபத்தை எதிர்கொள்பவர்கள் அம்மாக்களே. ஏனென்றால், அவர்கள் நமக்கு எளிமையான இலக்காக இருப்பவர்கள். எதிர்த்துப் பேச முடிந்தும் அமைதியை கையாள்பவர்கள். நமக்காக எதையும் பொறுத்துக் கொள்பவர்கள். அதனால்தான், அம்மா என்றால் கிச்சனை தாண்டி நாம் பெரிதாக எதுவும் யோசிப்பதில்லை. கிச்சனில் கருகுவது அம்மாக்களின் ஆசையும் கனவும்கூடத்தான் என்று நாம் புரிந்துகொள்வதே இல்லை. அம்மா என்ற உறவை ரொமான்டிஸைஸ் செய்து, அவள் உழைப்பையும் அன்பையும் சுரண்டிச் சுரண்டியே இந்த உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது இன்றுவரை. அம்மா, சக மனுஷி… சக உயிர். அப்படி என்றாவது நினைத்திருக்கிறோமா, நடத்தியிருக்கிறோமா அவளை?
அம்மாக்களின் மீது உரிமை, அன்பு என்ற பெயர்களில் நடத்தப்படும் வன்முறை குறித்து எப்போதாவது நினைத்து வருந்தி இருக்கிறோமா? வாய்ப்பில்லைதானே?
`இன்னைக்கு இட்லியா… எனக்கு வேண்டாம்…’ என்று முரண்டுபிடிக்கும் அந்த ஒற்றை ஆளுக்கு, `சரி வா…’ என்று தோசை கிடைக்கும். `ரசம்தான் வேண்டும்…’ என்பவர்களுக்கு 15 நிமிடங்கள் அடுப்பில் ரசம் கொதிக்கும். நம் வீட்டில் மாவு இருக்கும், அரிசி இருக்கும், பால் இருக்கும்… ஆனால், அது அம்மாக்களுக்கு மட்டுமேயான உணவாக மாற வேண்டுமென்றால், ஒருபோதும் அடுப்பில் ஏறாது என்பதே நிதர்சனம். நமக்காகப் பார்த்துப் பார்த்து சின்னச் சின்ன விஷயங்களையும் செய்யும் அம்மாக்களின் தேவைகள் பற்றியோ, ஆசைகள் பற்றியோ நாம் எப்போதும் பெரிதும் யோசித்திருக்கக்கூட மாட்டோம். எல்லாரும் சாப்பிடும்வரை பொறுமையாகக் காத்திருக்கும் அம்மாவுக்கு, கடைசியாக சாப்பாடு இல்லையென்றாலும், அதுவொரு பொருட்டாகக்கூட நமக்கு இருக்காது. ஏனென்றால், அம்மாக்கள் சாப்பிட்டார்களா என்பதை நம்மில் பலர் கேட்பதே இல்லை.
எல்லோர் தட்டிலும் மீதமான பொருளை அம்மா வழித்துச் சாப்பிடும்போதும், நமக்கு எப்போதும் குற்ற உணர்வு இருந்திருக்கவே இருந்திருக்காது. ஏனென்றால், அவள்தான் அம்மா எனப் பழகிப்போயிருக்கிறோம். அம்மாக்கள் என்றால் அன்பு, விட்டுக்கொடுத்தல், தேவைகள் அற்றவள் என்ற இலக்கணமெல்லாம் எங்கிருந்து தொடங்கியிருக்கும்?
பட்டுப் பாவாடையில் அண்ணன் தம்பிகளுடன் ஒரு மிட்டாய்க்காகச் சரிக்கு சமமாக நின்று சண்டைபோட்ட சிறுமிகள், தாங்கள் அம்மா ஆனதும், எப்படி மிகப்பெரிய மாற்றத்தை எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள்..? தாய்மை அடைந்தால் பால் சுரப்பதுபோல, அன்பும் விட்டுக்கொடுத்தலும் இயற்கையாக சுரந்துவிடுமா என்ன?
இதை எல்லாம் பேசி, அலசிய பின்னர் தமிழ்நாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட அம்மாக்களிடம் ஆந்தை ரிப்போர்ட்டர் நடத்திய சர்வே, இந்த அற்புதமான பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் ஆசைகள், சவால்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த அறிக்கை, அம்மாக்களின் அளவற்ற அன்பை மேலும் நேசிக்கவும், அவர்களைப் புரிந்து கொள்ளவும் இது ஒரு அன்பு அழைப்பு.
அம்மாக்களின் மனம்: ஒரு ஆழமான பார்வை
இந்த சர்வேயில், குடும்பம், பணி, சமூக ஆதரவு மற்றும் அம்மாக்களின் உணர்வு நிலை குறித்து ஆழமான கேள்விகள் கேட்கப்பட்டன. முடிவுகள், அம்மாக்களின் அன்பு மற்றும் தியாகத்தின் பின்னணியில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
குடும்ப ஆதரவு: இருக்கிறதா, இல்லையா?
47% அம்மாக்கள் குடும்பத்தின் ஆதரவு இருப்பதாகக் கூறினாலும், 43% பேர் அத்தகைய ஆதரவை உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். உணர்வு ரீதியாகவோ, உடல் நலம் சார்ந்தோ கடினமான தருணங்களில், 67% அம்மாக்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர முடியவில்லை என்கின்றனர். இது, குடும்ப உறவுகளில் உள்ள தகவல் தொடர்பு இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.
தனிப்பட்ட நலனில் தடைகள்
62% அம்மாக்கள், குடும்பப் பொறுப்புகளே தங்கள் உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவதற்குத் தடையாக இருப்பதாகக் கூறுகின்றனர். 37% பேர் நேரமின்மையையும், குற்ற உணர்வையும் முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர். அவசர தேவைகளில் கூட, ஆதரவு இல்லாததால் அவர்கள் தனிமையை உணர்கின்றனர்.
அங்கீகாரமும் மதிப்பும்: எவ்வளவு உணரப்படுகிறது?
தங்கள் உணர்வு நிலையை விவரிக்கும்போது, 30% அம்மாக்கள் மட்டுமே தாங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மதிக்கப்படுவதாக உணர்கின்றனர். 40% பேர் வாழ்க்கையில் சமநிலையும் திருப்தியும் இருப்பதாகக் கூறினாலும், 38% பேர் நேசிக்கப்பட்டாலும் களைப்பாகவோ அல்லது அங்கீகரிக்கப்படாதவர்களாகவோ உணர்கின்றனர். இது, அம்மாக்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து, வெறும் “குடும்பத்தின் அம்மா” என்ற பாத்திரத்திற்குள் மட்டுமே பார்க்கப்படுவதை வெளிப்படுத்துகிறது.
மனச்சோர்வும், முடிவில்லா பணிகளும்
51% அம்மாக்கள் மனதளவில் சோர்வாக உணர்கின்றனர். 42% பேர், முடிவில்லாத வேலைப் பட்டியலால் அன்றாடம் சவால்களை எதிர்கொள்கின்றனர். மிக முக்கியமாக, 26% அம்மாக்கள் மட்டுமே தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தனிப்பட்ட நேரம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை, அம்மாக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வளவு குறைவான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அம்மாக்களுக்கு ஒரு அன்பு அழைப்பு
இந்த சர்வே முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகின்றன: அம்மாக்கள் அன்பு, தியாகம், வலிமை ஆகியவற்றின் உருவங்கள் என்றாலும், அவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் ஆதரவு, அங்கீகாரம், தனிப்பட்ட நேரம் தேவை. அவர்களின் மனதில் உள்ள ஆசைகளையும், சோர்வையும் புரிந்து கொள்ளாமல், அவர்களை வெறும் “குடும்பத்தின் தூண்” என்று மட்டும் பார்ப்பது அவர்களின் தனித்தன்மையை மறுப்பதாகும்.
அம்மாக்களை முன்னிலும் அதிகம் நேசிப்போம்
கேளுங்கள்: அம்மாக்களின் உணர்வுகளை, கவலைகளை வெளிப்படையாகப் பகிர அனுமதியுங்கள். ஒரு கேட்கும் காது அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும்.
ஆதரவளியுங்கள்: வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு மணி நேர தனிப்பட்ட நேரத்தையாவது உறுதி செய்யுங்கள்.
அங்கீகரியுங்கள்: “நன்றி அம்மா” என்ற ஒரு வார்த்தை, அவர்களின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் தியாகங்களை, முயற்சிகளைப் பாராட்டுங்கள்.
மதியுங்கள்: அவர்களை ஒரு தனி மனிதராக, அவர்களின் கனவுகள், ஆசைகளுடன் பாருங்கள்.
அம்மாக்கள் எப்போதும் நம்மை நேசிக்கிறார்கள், ஆனால் அவர்களையும் நாம் முன்னிலும் அதிகமாக நேசிக்க வேண்டிய தருணம் இது. இந்த சர்வே, அவர்களின் அன்பின் ஆழத்தையும், அவர்களின் அங்கீகரிக்கப்படாத சுமைகளையும் நமக்கு நினைவூட்டுகிறது.
அன்னை இல்லையென்றால் நாமில்லை என்பதை உணர்ந்து, அன்னையரை மதித்து, போற்றி, பாதுகாப்போம்.
அம்மா, நீங்கள் ஒரு அதிசயம். உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறோம்!
