இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 11)

தேசிய தொழில் நுட்ப தினமின்று இப்போது வாழும் ரியாலிட்டி உலகிற்கும், விர்ச்சுவல் உலகிற்கும் உள்ள வேறுபாட்டையே மறக்கடிக்கும் அளவுக்கு வளர்ந்துக் கொண்டே போகும் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அங்கீகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் இன்று, அதாவது மே 11ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மே 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம்: தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் காரணமாக உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது. எங்கெங்கெல்லாம் பயன்படுகிறது தொழில்நுட்பம்? டெய்லி வேலைக்குச் செல்லும் ஒரு புள்ளையாண்டானை எடுத்துக்காட்டாக கொள்வோம். மார்னிங் மொபைலில் அலாரம் அடித்து கண் விழிப்பது முதல், பேஸ்புக்-வாட்சப்பில் ஸ்டேட்டஸ் ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் அப்டேட் பார்ப்து, அயர்ன் செய்வது, ஹீட்டர் போட்டு குளிப்பது, தண்ணீர் இல்லையென்றால் மோட்டார் போடுவது, மின்னடுப்பில் குக் செய்து, சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது, வேலைக்கு நேரமாகிவிட்டதால் பைக்கில் வேகமாகச் செல்வது மற்றும் அலுவலகத்தில் நுழைந்தவுடன் பிங்கர் பிரிண்ட் மூலம் அட்டெண்டன்ஸ் போடுவது மட்டுமல்லாமல், அலுவலகத்தில் கணினியின் முன் நாள் முழுவதும் வேலைசெய்வது, இடையிடையே ஆன்லைனில் புதிய கேஜெட்ஸ் நிலவரம் பார்ப்பது, சாட்டிங் செய்வது வரை இன்னும் எக்கச்சக்கமான இடங்களில் தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆக “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு”- இது வேண்டுமானால் பழமொழியாக இருந்தாலும், இந்த காலத்திற்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. மனிதனின் வாழ்க்கையை எளிமையாக, விரைவாக, துல்லியமாக நடத்துவதற்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாம், நாம் வாழும் நிஜ உலகில் நேரத்தையும், எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் மாய உலகிற்கு மெல்ல மெல்ல நம்மைநாமே அறியாமல் அடிமையாகி வருகிறோம். சில பலர் தங்கள் இன்ஷியலைக் கூட கூகுளில் சர்ச் செய்து தேடும் மனநிலைக்கு போய்விட்டது நிஜம் எனவே, நம் அனைவராலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இயலாவிட்டாலும், இருக்கும் தொழில்நுட்பங்களை நுட்பத்துடன், அளவுடன், ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியேற்போம்!

டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்ட தினம் . இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். டயமண்ட் சூத்திரா (Diamond Sutra, Sanskrit: Vajracchedikā Prajñāpāramitā Sūtra) என்பது மகாயான பௌத்த மதத்தின் முக்கியமான சூத்திரங்களில் ஒன்றாகும். இது உலகின் மிகப் பழமையான, தேதியிடப்பட்ட முழுமையான அச்சு நூலாகக் கருதப்படுகிறது. இந்த நூல் சீனாவில் கி.பி. 868 மே 11 அன்று அச்சிடப்பட்டது. இந்தக் கட்டுரை டயமண்ட் சூத்திராவின் முக்கியத்துவம், வரலாறு, கண்டுபிடிப்பு மற்றும் அதன் பண்பாட்டு தாக்கம் குறித்து விரிவாக விளக்குகிறது. டயமண்ட் சூத்திராவின் பின்னணி தோற்றம்: டயமண்ட் சூத்திரா, மகாயான பௌத்தத்தின் “பிரஜ்ஞாபாரமிதா” (Perfection of Wisdom) வகையைச் சேர்ந்த ஒரு சூத்திரமாகும். இது முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, கி.பி. 401 இல் புகழ்பெற்ற பௌத்த பிக்கு குமாரஜீவாவால் சீன மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. பொருள்: இந்த சூத்திரம் புத்தருக்கும் அவரது மூத்த சீடரான சுபூதிக்கும் இடையிலான உரையாடலைக் கொண்டுள்ளது. இது உலகின் மாயைகளை வெட்டி, உண்மையான ஞானத்தை அடையும் வழியை விளக்குகிறது. “வஜ்ரம்” (வைரம்) என்ற பெயர், மாயைகளை வெட்டும் ஆற்றலைக் குறிக்கிறது. நீளம்: இது ஒப்பீட்டளவில் குறுகிய நூலாகும், சுமார் 6,000 வார்த்தைகளைக் கொண்டது, மேலும் இதை சுமார் 40 நிமிடங்களில் ஓதலாம். அச்சு மற்றும் உருவாக்கம் அச்சு முறை: டயமண்ட் சூத்திரா மரத்தாலான அச்சுத் தொகுதிகள் (woodblock printing) மூலம் அச்சிடப்பட்டது. இது ஏழு மஞ்சள் நிறத் தாள்களைக் கொண்டு ஒட்டப்பட்டு, சுமார் 5 மீட்டர் (16 அடி) நீளமுள்ள சுருள் வடிவில் உருவாக்கப்பட்டது. முன்னுரை ஓவியம்: இதன் முதல் பகுதியில் புத்தர் சுபூதிக்கு போதனை செய்யும் காட்சியைக் காட்டும் மர அச்சு ஓவியம் உள்ளது. இது உலகின் மிகப் பழமையான தேதியிடப்பட்ட மர அச்சு ஓவியமாகக் கருதப்படுகிறது. கோலோஃபோன் (Colophon): சுருளின் இறுதியில் உள்ள கோலோஃபோன், இந்த நூல் வாங் ஜீ (Wang Jie) என்பவரால் தனது பெற்றோருக்காக “எல்லோருக்கும் இலவசமாக விநியோகிக்க” அச்சிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. இது மே 11, 868 என்ற தேதியை உறுதிப்படுத்துகிறது. பொது விநியோகம்: இந்த சூத்திரம் “பொது உபயோகத்திற்காக” அர்ப்பணிக்கப்பட்ட முதல் அறியப்பட்ட படைப்பாகும், இது ஒரு வகையில் நவீன பொது உரிமை (public domain) கருத்துக்கு முன்னோடியாக அமைகிறது. கண்டுபிடிப்பு இடம்: டயமண்ட் சூத்திரா, சீனாவின் வடமேற்கில் உள்ள டன்ஹுவாங் (Dunhuang) நகருக்கு அருகிலுள்ள மோகாவோ குகைகளில் (Caves of the Thousand Buddhas) 1900 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகைகள் பௌத்த மதத்தின் முக்கியமான மையமாக இருந்தன. கண்டுபிடிப்பாளர்: தாவோயிஸ்ட் பிக்கு வாங் யுவான்லு (Wang Yuanlu), மோகாவோ குகைகளைப் பராமரித்து வந்தபோது, மறைந்திருந்த ஒரு குகையில் (Cave 17) 40,000-க்கும் மேற்பட்ட சுருள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைக் கண்டார். இவற்றில் டயமண்ட் சூத்திராவும் அடங்கும். வெளியேற்றம்: 1907 இல், பிரிட்டிஷ்-ஹங்கேரிய தொல்பொருள் ஆய்வாளர் மார்க் ஆரல் ஸ்டெய்ன் (Sir Marc Aurel Stein) இந்த சுருளை வாங் யுவான்லுவிடமிருந்து வாங்கி இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றார். இது தற்போது பிரிட்டிஷ் நூலகத்தில் (British Library) பாதுகாக்கப்படுகிறது.

லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பெர்சிவல் ஜோன் பெல்லிங்கம் என்பவனால் கொல்லப்பட்டார். ஸ்பென்சர் பெர்சிவல்: பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்தார். நெப்போலியன் போர்களின் போது பிரிட்டனின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்களை சமாளித்து வந்தார். ஜான் பெல்லிங்கம்: ஒரு ஆங்கிலோ-ரஷிய வணிகர். ரஷ்யாவில் சிறைவைக்கப்பட்டதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான்.நீதிக்காக மன்றாடியும், எந்த நிவாரணமும் பெறாததால் பழிவாங்கும் நோக்கில் பிரதமரை சுட்டுக் கொன்றான். நிகழ்வு: மே 11, 1812, திங்கட்கிழமை, பெர்சிவல் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது பெல்லிங்கம் துப்பாக்கியால் சுட்டான். இதயத்தில் குண்டுபட்டு பெர்சிவல் உடனடியாக மரணமடைந்தார். பெல்லிங்கம் அங்கேயே கைது செய்யப்பட்டு, விரைவான விசாரணைக்குப் பிறகு மே 18, 1812-ல் தூக்கிலிடப்பட்டான். வரலாற்று முக்கியத்துவம்: பிரிட்டனின் பிரதம மந்திரி என்பதால் இந்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்தது. இந்த கொலையால் அரசியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன. கூடுதல் தகவல்கள்: பெல்லிங்கம் மனநல பிரச்சினைகள் இருந்ததாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த நிகழ்வு 19-ஆம் நூற்றாண்டின் முக்கியமான அரசியல் கொலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி யின் போது, இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரிட்டிஷாரிடமிருந்து கைப்பற்றினர். இந்த நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. முக்கிய தகவல்கள்: கிளர்ச்சியின் தொடக்கம்: மார்ச் 29, 1857-ல் பாரக்பூர் மற்றும் மே 10, 1857-ல் மீரட்டில் சிப்பாய்கள் கிளர்ச்சி தொடங்கினர். மே 11, 1857-ல் தில்லி கைப்பற்றப்பட்டது. தில்லியின் மீதான கட்டுப்பாடு: பகதூர் ஷா ஜஃபர் (Mughal Emperor Bahadur Shah Zafar II)-ஐ கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் சிம்மாசனத்திற்கு மீண்டும் அழைத்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகள் தில்லியை விட்டு விரட்டப்பட்டனர். பிரிட்டிஷ் பதிலடி: செப்டம்பர் 1857-ல் பிரிட்டிஷ் படைகள் மீண்டும் தில்லியை முற்றுகையிட்டன. செப்டம்பர் 20, 1857-ல் பிரிட்டிஷாரால் தில்லி மீண்டும் கைப்பற்றப்பட்டது. விளைவுகள்: 1857 கிளர்ச்சி தோல்வியடைந்தாலும், இது இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்தது. 1858-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து, நேரடியாக பிரிட்டிஷ் கிரௌன் ஆட்சி தொடங்கியது. குறிப்பிடத்தக்க நபர்கள்: மங்கள் பாண்டே (மீரட் கிளர்ச்சித் தலைவர்). ராணி லட்சுமி பாய் (ஜான்சி). தந்தியா தோபே போன்றவர்கள் இந்த கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த நிகழ்வு இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜான் காட்பரி (John Cadbury) – காலமான தினம். காட்பரி (Cadbury) எனப்படும் உலகப் பிரபல சாக்லேட் நிறுவனத்தின் நிறுவனர். 1824-ல் பர்மிங்காமில் ஒரு காபி மற்றும் தேயிலை கடையாக தொடங்கி, பின்னர் சாக்லேட் உற்பத்தியில் கவனம் செலுத்தினார். குவேக்கர்கள் (Quakers) சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், மது மற்றும் புகையிலைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். சமூகப் பணி: தொழிலாளர் நலன், குழந்தைத் தொழில் ஒழிப்பு போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். போர்ன்வில்லே (Bournville) என்ற தொழிலாளர் குடியிருப்பை உருவாக்கினார், இது இன்றும் மாதிரிக் கிராமமாக கருதப்படுகிறது. இறப்பு: மே 11, 1889, 87 வயதில் காலமானார். மரபு: அவரது நிறுவனம் இன்று மாண்டெலேஸ் (Mondelez) இன்டர்நேஷனலால் நிர்வகிக்கப்படுகிறது. டெய்ரி மில்க், கிரேம் எக் போன்ற பிரபலமான சாக்லேட்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. ஜான் காட்பரி ஒரு தொழிலதிபர் மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். அவரது கொள்கைகள் இன்றும் காட்பரி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டங்களில் தொடர்கின்றன.

ஜுவான் கிரிஸ் (Juan Gris) – ஸ்பானிஷ் கியூபிசம் கலைஞர் நினைவு நாள் அடிப்படை விவரங்கள்: முழு பெயர்: ஜோஸ் விக்டோரியானோ கோன்சாலெஸ் (José Victoriano González) பிறந்த நாள்: மார்ச் 23, 1887 (மாட்ரிட், ஸ்பெயின்) இறந்த நாள்: மே 11, 1927 (பாரிஸ், பிரான்ஸ், வயது 40) கலைப் பங்களிப்புகள்: கியூபிசம் இயக்கம்: பிகாசோ (Picasso), ப்ராக் (Braque) ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய கியூபிசக் கலைஞர். ஒழுங்கான வடிவியல் கூறுகள், துல்லியம் மற்றும் வண்ணக் கலவையில் சிறந்து விளங்கினார். பிரபலமான படைப்புகள்: The Sunblind (1914) Portrait of Picasso (1912) Still Life with Checked Tablecloth (1915) தனித்துவமான பாணி: “Synthetic Cubism” (தொகுப்புக் கியூபிசம்) பாணியை மேம்படுத்தினார். காகிதக் கத்தரிக்கோல்கள் (collage), வர்ணங்கள் மற்றும் வடிவியல் அமைப்புகளை ஒருங்கிணைத்தார். இறப்பு மற்றும் மரபு: 1927-ல் மே 11-ல் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். பிகாசோவுடனான நட்பு, கியூபிசத்தில் அவரது தாக்கம் கலை உலகில் இன்றும் நினைவுகூரப்படுகிறது. ஜுவான் கிரிஸ் ஒரு குறுகிய வாழ்க்கையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்திய கலைஞர். அவரது படைப்புகள் பாரிஸின் Centre Pompidou, NYC-யின் MoMA போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கேரள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகின் முதல்கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகித்த கவுரியம்மா நினைவு நாள் இன்று .இவர் முதன்முதலாக இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு தலைமையிலான கம்யூனிஸ்டு அமைச்சரவையில் பங்கெடுத்தார். 1957 இல் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார். 10 தடவை மாநிலத்தில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சுமார் 50 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றி உள்ளார். சிபிஎம் கட்சியிலிருந்து விலகிய பின்னரும் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலும் இடம்பெற்று அமைச்சராக பதவி வகித்தவர். போராட்டங்களையே வாழ்க்கையாக கொண்டு பெண் குலத்துக்கு பெருமை சேர்த்த கேரளத்தின் ஜான்சிராணி தோழர் கே.ஆர்.கவுரியம்மா.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள் இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்; சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும் உண்மையை உணர இயலாது. உண்மை, பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த ஜேகே அவர்கள் , தியோசபிகல் சொசைட்டி விட்டு விலகினார்.. அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி வந்தார் ஆக கிருஷ்ணமூர்த்தி என்ன சொன்னார்? அவர் எதையுமே சொல்லவில்லை என்று சொல்லலாம். எதையும் சொல்ல வில்லை. எதையும் கற்றுத்தரவில்லை. எந்தத் தத்துவத்தையும் கண்டுபிடிக்கவோ நிறுவவோ இல்லை. பிறகு எப்படி அவர் முக்கியமான தத்துவ ஞானியாகப் பார்க்கப்படுகிறார்? கிருஷ்ணமூர்த்தி தெளிவாகப் பார்க்கச் சொன்னார். அதையும் அவர் கற்றுத்தருவதில்லை. பார்க்க உதவினார். எல்லா ஞானிகளையும் மார்க்கதரிசிகளையும் போலவே அவரும் மனித துக்கத்தைப் பற்றிப் பேசினாறார். துயரம், அவலம், பகைமை, பொறாமை, வன்முறை, நிம்மதியின்மை, துரோகம், மதம், சேவை, கள்ளத்தனம், அதிகாரம், மோசடி, தியாகம், உன்னதம் என எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். அவரிடம் வருபவர்கள் தங்கள் கேள்விகளையும் குறைகளையும் பகிர்ந்துகொண்டார்கள். அவர் உரைகளிலும் உரையாடல்களிலும் இவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். ஆனால், எந்தத் தீர்வையும் அவர் தந்ததில்லை. இவற்றையெல்லாம் நாம் அணுகும் விதத்திலேயே பிரச்சினை இருக்கிறது என்றார். நமக்கு உவப்பற்ற விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் அணுகுமுறையில் பிரச்சினை இருக்கிறது என்றார். என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் என்ன இருக்க வேண்டும் என்பதையே பார்த்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருப்பதன் விபரீதத்தை அடையாளம் காட்டினார். மோதல்கள் பற்றிப் பேசினார். வெவ்வேறு மனிதர் களுக்கிடையிலும் இனக் குழுக்களுக்கிடையிலும் சமூகங்களுக் கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் இருக்கும் மோதல்கள் பற்றி மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மோதல்கள் பற்றியும் பேசினார். நாம் எதிர்மறையானது என்று நினைக்கும் ஒன்றின் இருப்பைப் போக்குவதாலோ அதை மாற்றுவதாலோ இந்த மோதல் இல்லாமல் ஆகிவிடாது எகிறார். மாறாக, இத்தகைய முயற்சியால் அந்த மோதல் அதிகரிக்கவே செய்யும் என்கிறார். மாற்ற வேண்டும் என்ற முயற்சியே மோதலுக்கு வழிவகுக்கும் அல்லது மோதலை அதிகரிக்கும் என்றார் ஜித்து.

எம் ஜி ஆரை நடிகராக்கிய அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் (Ellis R.Dungan) பிறந்த தினம் இன்று (மே 11). அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலை யில் ஆர்வம் கொண்டிருந்தார். புதிதாக வாங்கிய கேமராவைக் கொண்டு, பள்ளி ஆண்டு இதழுக்காக புகைப்படங்கள் எடுத்தார். அந்த இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தார். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்துக் களங்களிலும் புகுந்து அவற்றையும் ஆர்வத்தோடு கற்றார். பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக ஜொலித்த மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவரும் அங்கு படித்தார். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பி திரைப்படம் தயாரிக்கத் தொடங்கிய அவர், உதவிக்கு தனது கல்லூரி நண்பர் டங்கனை அழைத்தார். இந்தியா வந்த டங்கன், ‘நந்தனார்’ திரைப்படத்தில் நண்பருக்கு உதவியாளராக சேர்ந்தார். அதில் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ.என்.மருதாச்சலம் தனது அடுத்த படத்தை இயக்குமாறு டாண்டனிடம் கேட்டார். அவர் நண்பனை சிபாரிசு செய்ய, 1936-ல் ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநரானார் டங்கன். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர், நடிகராக அறிமுகமான முதல் படம் ‘சதிலீலாவதி’. எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கியவரும் இவரே! தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் தனித் தன்மை கொண்ட, வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். சினிமாவில் நாடக பாணி எதிரொலிப்பதை மாற்றி, நடிகர்களின் முகபாவனை, உடல்மொழிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிக்க வைத்த பெருமை இவரையே சாரும். எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே. ‘இரு சகோதரர்கள்’, ‘அம்பிகாபதி’, ‘சூர்யபுத்திரி’, ‘சகுந்தலா’, ‘மீரா’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கினார். முதன்முதலாக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தினார். கேமரா கோணம், ஒளியமைப்பு ஆகியவற்றில் பல புதுமைகளைக் கையாண்டார். சிம்பாலிக் ஷாட்களை அறிமுகப்படுத்தினார். காதல் காட்சிகளில் எல்லை மீறாத நெருக்கத்தை துணிந்து காட்சிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஆங்கிலப் படங்களையும் இயக்கி முத்திரை பதித்தார். பல ஆங்கில திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். ‘சதி லீலாவதி’யில் தொடங்கிய இவரது சாதனைப் பயணம் 1950 வரை தொடர்ந்தது. பிறகு அமெரிக்கா திரும்பியவர், ‘எல்லிஸ் டங்கன் புரொடக் ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பல அமெரிக்கத் திரைப்படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி னார். தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ‘எ கைடு டு அட்வெஞ்சர்’ என்ற பெயரில் சுயசரிதை வெளியிட்டார். 90-களின் தொடக்கத்தில் தமிழகம் வந்த இவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நிய நாட்டின் மொழி, கலாச்சாரம், மக்களின் ரசனை, எதிர்பார்ப்பு குறித்து தெரிந்துகொண்டு, தனது தன்னிகரற்ற திறனால் சாதனை இயக்குநராக முத்திரை பதித்த எல்லிஸ் ஆர்.டங்கன் 92-வது வயதில் (2001) மறைந்தார்.

சுத்தானந்த பாரதியார் பிறந்த நாள் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது. 1984 ஆம் ஆண்டு தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், “பாரத சக்தி மகாகாவியம்” அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!