புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர்.
இதையடுத்து அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு ரங்கசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து முதல்-மந்திரி ரங்கசாமி நேற்று முன்தினம் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார்.

இந்தநிலையில் 5-வது முறையாக புதுவை மாநில முதல்-மந்திரியாக ரங்கசாமி இன்று (புதன்கிழமை) காலை 9.45 மணிக்கு பதவியேற்க உள்ளார். இதற்கான விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முதல்-மந்திரி ரங்கசாமியை தொடர்ந்து பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி யேற்க உள்ளனர்.
இந்த பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவுக் காக கவர்னர் மாளிகையில் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்றது. விழாவில் பா.ஜனதா தேசிய தலைவர் நிதின்நபின், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா,மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, டாக்டர் நாராயணசாமி ஆகியோரும் அமைச்சராக பதவியேற்பார்கள் என்று முதலில் தகவல் வெளியானது. இது தொடர்பாக முதல்-மந்திரி ரங்கசாமியிடம் கேட்டபோது அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பில் குழப்பம் நீடித்து வருகிறது.
பிற என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என தெரிகிறது. இந்த தாமதத்தை பயன்படுத்தி, அமைச்சரவையில் இடம்பெற என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புதிய அமைச்சர்கள் பட்டியல் மற்றும் முதலில் கையெத்திட உள்ள திடடங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
