பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. .
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.
மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை – ராணுவ பெண் அதிகாரிகள் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கர்னல் சோபியா குரேஷி அளித்த விளக்கத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதில் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முரிட்கேவும் அடங்கும். எந்த பாகிஸ்தான் இராணுவ நிலையையும் குறிவைக்கவில்லை, இதுவரை பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஹிஸ்புல் முஜாஹிதீனின் மிகப்பெரிய முகாம்களில் ஒன்றாகும். இது கதுவா, ஜம்மு பகுதியில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகும். பதான்கோட் விமானப்படை தள முகாம் மீதான தாக்குதலை இந்த முகாம் திட்டமிட்டு இயக்கியது” என்று கூறினார்.
இதனிடையே கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடையே உரையாற்றும் போது, பாகிஸ்தானுக்குள் 12-18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா முகாம் உட்பட அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன… பொதுமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும், பொதுமக்கள் உயிர் இழப்பதையும் தவிர்க்க இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன” என்று கூறுகினார்.
