உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். இதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கைவளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்தவழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல்,அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம்பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.23ல் உலகபுத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது “வீட்டை அலங்கரிக்க புத்தகங்களைவிட, அழகான பொருள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்பார், ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர். ஆம், உண்மைதான். புத்தகங்கள் வீட்டை மட்டும் அலங்கரிப்பதில்லை; மனிதனின் அறிவு வளர்ச்சியையும் அலங்கரிப்பவை புரட்சியாளர் பகத்சிங்கோ, தான் சாகும்வரை படித்துக்கொண்டிருந்தார். “சாகப்போகிறோம் என்றாகிவிட்டது… இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று அவரிடம் கேட்டதற்கு, “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்”என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார் பகத்சிங். ‘மூலதன’த்தைக் கொடுத்த கார்ல் மார்க்ஸ்! தான் தேடிய புத்தகம் பல மைல் தொலைவில் இருப்பதை அறிந்து, அங்குசென்று அதை வாங்கிப் படித்தவர் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதேபோல கார்ல் மார்க்ஸ், புத்தக அறைகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால்தான், அவரால் உலகுக்கு ‘மூலதன’த்தைக் கொடுக்க முடிந்தது. நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி என்று பெயர்பெற்ற ஏ.பி.ஜே.அப்துல் கலாமும் மிகப்பெரும் புத்தக வாசிப்பாளராகவே மறையும்வரை இருந்தார். இப்படிப் பலரும் புத்தகங்களுக்குள் ஆழ்ந்திருந்ததால்தான், அவர்கள் அனைவரும் உலகம் வியக்குமளவுக்கு அறிஞர்கள் ஆக முடிந்தது. சுவர்களிலும், எலும்புகளிலும், துணிகளிலும், களிமண்களிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த எழுத்துகள் இன்று, அறிவியல் முன்னேற்றத்தால் புத்தகங்கள் மூலமாகவும், கணினி மூலமாகவும் வளர்ந்திருக்கிறது. ஆனாலும் ‘மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே’.புத்தகம் படிப்பது சிலரின் பொழுதுபோக்காக இருந்தாலும், பலரின் முழு நேர வேலையாகவும் உள்ளது. இச்சூழலில் வாசிப்பு பற்றி அறிஞர்கள் கூறிய சில தத்துவங்கள் புத்தகம் வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால், வாசிக்காதவன் ஒரே வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறான். – George R.R.Martin எவ்வளவு வாசிக்கிறாயோ, அவ்வளவு தெரிந்துக்கொள்வாய். எவ்வளவு கற்றுக்கொள்கிறாயோ, அவ்வளவு பயணம் செய்வாய். – Dr. Seuss புத்தகமில்லாத அறை என்பது, உயிரில்லாத உடலுக்கு சமம். – Marcus Tullicus Cicero புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட. – Charles W. Eliot பிரதிபலிக்காமல் படிப்பது என்பது, சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகாததற்கு சமம். – Edmund Burke உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதேபோல் மூளைக்கு படிப்பது. – Joseph Addison புத்தகங்கள் – நீங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் கனவுகள். – Neil Gaiman புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. சிறந்த ஒருவருக்கு மட்டுமே அந்த புத்தகத்தின் அட்டையில் “ இது உங்களின் வாழ்க்கையையே மாற்றும்” என்று எழுதியிருக்கும். – Helen Exley ஒரு புத்தக்கத்தை படிப்பது என்பது ஒரே ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது போல். – Diane Duane ஆணோ? பெண்ணோ? யாராக இருந்தாலும், புத்தகத்தை விரும்பாதவர்கள், முட்டாள்களே. – Jane Austen ஒரு நல்ல புத்தகம் கிடைப்பது, எனது வாழ்வின் ஒரு சிறப்பான நிகழ்வு.- Stendhal புத்தகம் என்பது நம் ஆன்மாவின் கண்ணாடி. – Virginia Woolf வாசிப்பது என்பது உட்கார்ந்த இடத்திலேயே பல இடங்களுக்குப் போக வைக்கும் ஒரு மாயாஜாலம். – Mason Cooley புத்தகத்தை எரிப்பது ஒரு கொடூரம் என்றால், அதனைப் படிக்காதது அதைவிட மிகப்பெரிய கொடூரமாகும். – Joseph Brodsky புத்தகத்தைப் போல ஒரு விசுவாசமான நண்பன் இல்லை. – Ernest Hemingway
ஆங்கில மொழி தினம் கொண்டாடப்படுகிறது. பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுத் தகவல் துறையால் (United Nations Department of Global Communications) 2010 ஆம் ஆண்டு இந்த நாள் நிறுவப்பட்டது. ஏப்ரல் 23 ஏன்? வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் மற்றும் இறந்த தினம் ஏப்ரல் 23 ஆகும். ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுவதால், அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்த நாள் ஆங்கில மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நோக்கம் ஆங்கில மொழி தினத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு: ஆங்கில மொழியின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல். ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளையும் சமமாக மதித்து கொண்டாடுதல் (அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ்). கொண்டாட்டங்கள் இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன: ஆங்கில இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள். ஆங்கில மொழி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் திரையிடல். ஆங்கிலப் பாடல் மற்றும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகள். ஆங்கில மொழி கற்றல் தொடர்பான பயிலரங்குகள். சமூக ஊடகங்களில் ஆங்கில மொழி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள். எனவே, ஆங்கில மொழியின் சிறப்பை உணர்ந்து கொண்டாடுவதற்கும், பன்மொழிக் கலாச்சாரத்தை மதிப்பதற்கும் இந்த ஆங்கில மொழி தினம் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த/ இறந்த தினம் இன்று உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு ‘ழ’ என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் இந்த தினத்தில்தான் . ஷேக்ஸ்பியரின் பொன்மொழிகள் காலத்தால் அழியாதவை. அவற்றில் சில இங்கே: “இருப்பதோ இறப்பதோ, எது மேலானது என்று எண்ணிப் பார்ப்பதே துன்பம்.” (ஹேம்லெட்) “அன்பின் பாதை ஒருபோதும் மென்மையாக இருந்ததில்லை.” (மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்) “உலகம் ஒரு நாடக மேடை, நாம் அனைவரும் அதில் நடிகர்கள்.” (நீ விரும்பியபடி) “சிலர் புகழுடன் பிறக்கிறார்கள், சிலர் புகழை அடைகிறார்கள், சிலர் மீது புகழ் திணிக்கப்படுகிறது.” (பன்னிரண்டாவது இரவு) “சுருக்கமாக இருங்கள், ஏனெனில் அறிவின் ஆன்மா சுருக்கமே.” (ஹேம்லெட்) “கோழைத்தனத்தில் மரணங்கள் பலமுறை நிகழ்கின்றன; வீரன் ஒருபோதும் தனது மரணத்தை ஒரு முறைக்கு மேல் சுவைப்பதில்லை.” (ஜூலியஸ் சீசர்) “கேட்கத் துணிந்தால், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளாது.” (ஜூலியஸ் சீசர்) “நம் சந்தேகங்களே நம்மைத் தோற்கடிக்கின்றன, முயற்சி செய்ய பயப்படுவதால் நாம் இழக்க நேரிடும் நல்ல விஷயங்களை இழக்கிறோம்.” (மெஷர் ஃபார் மெஷர்) “நேர்மையான ஏழை மனிதன் பொய்யான பணக்காரனை விட உயர்ந்தவன்.” (ஒத்தெல்லோ) “காலம் அனைத்தையும் விழுங்கும்.” (ட்ரோய்லஸ் மற்றும் கிரெசிடா)
இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) காலமான நாள் இயற்கையின் அழகையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் தனது கவிதைகளில் அற்புதமாகப் பதிவு செய்தவர் அவர். எளிய சொற்களால் வலிமையான கருத்துக்களை வெளிப்படுத்தும் அவரது கவிதைத் திறமை என்றும் போற்றப்படும். அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது சில பொன்மொழிகள் இங்கே: “இயற்கை ஒருபோதும் துரோகம் செய்வதில்லை இதயத்தை நேசிக்கும் ஆன்மாவை.” “எங்கள் பிறப்பு ஒரு தூக்கம் மற்றும் மறத்தல்: ஆன்மா, நம்முடன் உயர்கிறது, ஒரு நட்சத்திரம், எங்கிருந்தோ வந்துள்ளது, தூரத்திலிருந்து.” “சிறந்த வாழ்க்கை என்பது அமைதியான மனநிலையில், அமைதியான தூண்டுதல்களால் வழிநடத்தப்படும் ஒன்று.” “கவிதை என்பது அமைதியில் மீட்டெடுக்கப்பட்ட உணர்ச்சியின் தன்னிச்சையான வழிதல்.” “ஒவ்வொரு மலரும் பூமியின் புன்னகை.” வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் தலைமுறை தலைமுறையாக வாசகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இயற்கையின் மீதான அவரது காதல், மனிதனின் உள்ளார்ந்த உணர்வுகள் பற்றிய அவரது ஆழமான புரிதல் ஆகியவை அவரது படைப்புகளில் என்றும் எதிரொலிக்கும். அவரது இழப்பு ஆங்கில இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகும், ஆனால் அவரது கவிதைகள் மூலம் அவர் என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.
எழுத்தாளர் செர்வான்ட்டிஸ் நினைவு தினம். கடந்த நானூறு ஆண்டுகளாக மேலைநாட்டு இலக்கியப் படைப்பாளிகளைப் பாதித்து வருகிறது டான் குயிக்ஸாட் என்ற இந்த ஸ்பானிஷ் மொழி நாவல். இதன் ஆசிரியர் செர்வான்ட்டிஸ்; இவரும் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தவர்கள். இருவருமே ஒரே நாளில் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. செர்வான்ட்டிஸ் பல நாடகங்களை எழுதினார். ஆனால் அவருக்குப் பணமோ, புகழோ கிடைக்கவில்லை. மாறாக ஷேக்ஸ்பியர் எண்ணற்ற நாடகங்களை எழுதிப் பணமும், புகழும் பெற்றார். செர்வான்ட்டிஸ் தனது டான் குயிக்ஸாட் நாவலினால் மட்டுமே புகழ் பெற்றார். இறுதிவரை செர்வான்ட்டிஸ் வறுமையில் வாடினார். பல்வேறு காரணங் களுக்காக அவர் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்ட நாள் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரிட்டிஸாரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். 1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது. 6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.1640 முதல் தற்காலம் வரை இக்கோட்டையின் உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். ஆந்தை ரிப்போர்ட்டர் டைரியில் உள்ள அடிசினல் ரிப்போர்ட் இவை தவிர இக்கோட்டையில் மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன. 1.புனித மேரி கிறித்தவ ஆலயம்
- கிளைவ் மாளிகை
3.கோட்டை அருங்காட்சியம் ஜார்ஜ் டவுன் (George Town) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.வரைபடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையும் ஜார்ஜ் டவுனும் நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டுவிரைவாக வளரத் தொடங்கியது.முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த சென்னக் கேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிசுவரசுவாமி கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் தங்கச்சாலைக்கு இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே பட்டணம் கோவில் என புகழ்பெற்றிருந்தன புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும். கி. பி. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது கிளைவ் மாளிகை (Clive House) என்பது சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடமாகும்.இந்தக் கட்டடம் முன்னாளில் சேமியர் சுல்தான் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. இதனை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கி.பி. 1753 இல் ஆர்க்காட்டு வீரர் எனப்பட்ட இராபர்ட் கிளைவ் இங்கு வசித்தார். அப்போது இக்கட்டடம் அட்மிரல் மாளிகை என அழைக்கப்பட்டது. பின் இது புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் நகர மாளிகையாக மாறியது. கி.பி. 1800 முதல் இதில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன. கோட்டை அருங்காட்சியகம் தமிழகத்தின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள ஓர் கட்டடம் ஆகும். கி.பி. 1795 இல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் கி. பி. 1948 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் கிடைத்த பழம்பொருட்கள், பலவகைப் பீரங்கிகள், ஆயுதங்கள், ஆங்கிலேயரும் பிற சில ஐரோப்பியரும் வெளியிட்ட நாணயங்கள், காரன்வாலிஸ் பிரபுவின் பெரிய பளிங்குச் சிலை, இங்கிலாந்து நாட்டின் அரசர்கள், அரசிகள், புனித ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய ஆளுநர்கள், ஆர்க்காட்டு நவாபுகள் ஆகியோரது பெரிய கண்கவர் உருவ ஓவியங்கள், இராபர்ட் கிளைவ் எழுதிய கடிதங்கள், பிரெஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய விளக்குகள், பீங்கான் பாத்திரங்கள், பிரெஞ்சுத் தலைவர்களின் படங்கள், மைசூரை ஆட்சி புரிந்த உடையார்களின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பம், சித்திரம் முதலியவை காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஐந்து நாட்களுக்குமுன் தொடங்கப்பட்ட, யுஎஸ்எஸ் யுனைட்டட் ஸ்டேட்ஸ் என்ற போர்க்கப்பலின் கட்டுமானம் ரத்து செய்யப்பட்டு, அட்மிரல்களின் புரட்சியேற்படக் காரணமான நாள் இது புரட்சி என்று குறிப்பிடப்பட்டாலும், மொட்டைக் கடிதம்(அனானிமஸ் டாக்குமெண்ட்!) ஒன்றும், அதன்மீதான விசாரணையும்தான்! விடுதலைப்போர் முடிந்தபோது, பெரும் கடனிலிருந்த அமெரிக்கா, தனது ராணுவமான புரட்சிப்படை, கடற்படையாகச் செயல்பட்ட 1775இல் தொடங்கப்பட்ட அணி ஆகியவற்றைக் கலைத்து, கப்பல்களையும் விற்றுவிட்டது. தொல்குடியினருடனான(செவ்விந்தியர்கள்) எல்லை மோதல்களைச் சமாளிக்க 1784இல் ராணுவம் தொடங்கப்பட்டாலும், கடற்படை தேவையில்லையென்றே கருதிய அமெரிக்காவின் வணிகக் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையிட்டதாலேயே 1794இல் கடற்படையை தொடங்கப்பட்டது. 1800களின் இறுதிவரை, எல்லைகளை விரிவாக்குவதைத்தவிர வேறு போர்களில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதால் ராணுவமே முக்கியமானதாக இருந்தது. ஸ்பெயினிடமிருந்து அமெரிக்காவுக்குக்கிடைத்த குடியேற்றமான ஃபிலிப்பைன்சுக்காகப் போரிட, அமெரிக்கக் கண்டத்தைவிட்டு முதன்முறையாக வெளியேறியபோது, கடற்படையின் முக்கியத்துவம் உயரத்தொடங்கியது. விமானங்கள் போர்களில் பங்கேற்கத் தொடங்கியபோது, ராணுவத்தின் பிரிவாகவே இருந்தன. நீண்ட தொலைவுக்குப் பறக்க முடியாத அக்கால விமானங்களும், விமானந்தாங்கிக் கப்பலின் வருகையும், அவற்றை கடற்படையிலும் இடம்பெறச் செய்தன. ஆனால், விமானங்களின் திறனை இரண்டாம் உலகப்போர் வெளிப்படுத்தியது. உலகப்போருக்காக குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களின்படி மேற்கொள்ளப்பட்ட, ராணுவம், கடற்படையுடன் சம முக்கியத்துவம்கொண்டதாக தனியாக விமானப்படை, மூன்றிற்கும் ராணுவம் சாராத(சிவிலியன்) நிர்வாகிகள் ஆகிய முயற்சிகளை கடற்படையின் உயர்-அலுவலர்களால் ஏற்க முடியவில்லை. கடற்படையே முதன்மையானதாக இருக்கவேண்டுமென்று வாதிட்ட அவர்கள், எதிரிகளின் கடல் வணிக வழிகளை முடக்குவதையே முக்கிய தாக்குதல் நடைமுறையாகக் கருதினார்கள். ஆனால், முதன்மை எதிரியாகக் கருதப்பட்ட சோவியத், யூரேஷிய(ஐரோப்பா-ஆசியா) நாடாக இருந்ததால், அமெரிக்காவைப் போன்று வணிகத்திற்குக் கடலைச் சார்ந்திருக்கவில்லை. அப்படியான நிலையில்தான், அணுக்குண்டுகள் உள்ளிட்டவற்றை வீசும் 24 மிகப்பெரிய போர் விமானங்கள், 100 முறை தாக்குதல் நடத்துமளவுக்கு குண்டுகள், எரிபொருள் ஆகியவற்றைச் சுமக்கும் திறனுடன் இந்தக் கப்பலைக்கட்ட அனுமதிபெற்றுத் தொடங்கியும்விட்டனர். இத்தகைய 5 கப்பல்களைச் சேர்ப்பதன்மூலம், கடற்படையின் முக்கியத்துவம் உயரும் என்று அவர்கள் கருதினாலும், பொருளாதார நெருக்கடியைப் பின்தொடர்ந்து வந்துவிட்ட உலகப்போர், அமெரிக்காவில் கடுமையான நிதிநெருக்கடியை உருவாக்கியிருந்தது. போர்க்காலத்தில், அமெரிக்காவின் ஜிடிபியைப்போல 119% மடங்காக உயர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புச் செலவினம் போருக்குப்பின் 10இல் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுவிட்டதால், இந்தக் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சினமுற்ற கடற்படை அலுவலர்கள், நிறுத்தப்பட்டதில் ஊழல் என்று எழுதிய மொட்டைக்கடிதமே இந்தப் புரட்சி என்பதுடன், விசாரணைக்குப்பின் பல அலுவலர்களின்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்திய திரைப்பட முன்னோடி சத்யஜித் ராய் மறைந்த நாளின்று இந்தியத் திரையுலக மேதை எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி, உலகளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கியவர் சத்யஜித் ரே. சுமார் முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய ரே-யின் எல்லா திரைப்படங்களும் உலக அரங்கில் பரிசும், பாராட்டும் பெற்றது மட்டுமல்லாமல், தனக்கென்று தனி முத்திரையைப் பெற்றதோடு, இந்தியத் திரைப்படங்களுக்கு கௌரவத்தையும் தேடித் தந்தது எனலாம். கலை சார்ந்த, மனித இயல்புகள் சார்ந்த அற்புதமான காட்சியமைப்புகளுடன் உருவான அவருடைய எல்லாப் படைப்புகளும் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன.
லீலாவதி நினைவு தினம் இன்று. லீலாவதி ( 27 செப்டம்பர் 1957 – 23 , ஏப்ரல் 1997), மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர். மதுரை மாநகரில் கைத்தறி தொழிலை பிராதனமாகச் சார்ந்திருக்கும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-இந்திரா தம்பதியரின் மூன்றாவது புதல்வியாக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று பிறந்தார். அவர் 10வது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். பெற்றோர் நிச்சயித்தபடி அவருக்கும் குப்புசாமிக்கும் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியென்று திருமணம் நடைபெற்றது. குப்புசாமி – லீலாவதி தம்பதியினருக்கு கலாவதி, துர்கா, டான்யா என்ற மூன்று மகள்கள் பிறந்தனர் . வில்லாபுரத்தில் 32 ஒட்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரே ஒரு அறையில் ஐவரைக்கொண்ட இந்தக் குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவில் நெசவுத்தறி, அதைச்சுற்றிப் பெட்டி படுக்கை அங்கேயே அடுப்பை வைத்து சமையல், இரவில் தறிக்கு கீழேயே உறக்கம் என்ற நிலையில் அவரது குடும்பம் இருந்தது. சங்கத்தின் செயலூக்கமுள்ள குப்புசாமி, தனது மனைவி லீலாவதிக்கு படிப்படியாக அரசியல் உணர்வு ஏற்படுத்தினார். 1987ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், பின்னர் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதர் சங்கக் கைநெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில துணைத் தலைவரானார்; மாவட்டப் பொருளாளரானார்; மாநிலக்குழு உறுப்பினரானார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலின் போதுதான் முதன்முறையாக பெண்களுக்கென்று மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சிக்கான 72 வட்டங்களில் 24 வட்டங்கள் பெண்களுக்கென்று நிச்சயிக்கப்பட்டன. வில்லாபுரமும் இத்தகைய வட்டங்களில் ஒன்று. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தார். தனது வார்டில், (வில்லாபுரம்) மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று (Borewell) நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர். இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சுமார் 10 கி.மீ. தூரம் கடந்து இரவு ஏழு மணியளவில் மூலக்கரை இடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்ட லீலாவதியின் உடலுக்கு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பி. மோகன் தீ மூட்டினார். முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையில் இருந்த லீலாவதி கொலைக் குற்றவாளிகளில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
முதல் யூட்யூப் வீடியோ பதிவேற்றப்பட்ட தினம் இன்று. ஜாவேத் கரீம் என்பவர் “நான் மிருகக் காட்சிசாலையில்” (“Me at the zoo”) என்ற 18 வினாடி நீளமான முதல் யூடியூப் வீடியோவை இந்த நாளில்தான் பதிவேற்றினார். அது ஒரு சிறிய வீடியோவாக இருந்தாலும், இணையத்தில் வீடியோக்களைப் பகிர்வதற்கான ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது. இன்று யூடியூப் உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய தளமாக வளர்ந்துள்ளது. பலருக்கு இது பொழுதுபோக்கு, கல்வி, மற்றும் தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. முதல் யூடியூப் வீடியோ பதிவேற்றப்பட்ட இந்த நாளை நினைவுகூர்வது, இணையத்தின் வளர்ச்சியையும், நாம் இன்று பயன்படுத்தும் டிஜிட்டல் உலகத்தின் பரிணாமத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
இசைக்குயில் எஸ்.ஜானகி 86ஆவது பர்த் டே டுடே! தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகி அம்மாவை கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடி வாறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.அவர் இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது என்ற பீடிகையுடன் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி:. ஆந்திர டிஸ்டிரிகில் இருக்கும் பள்ளப்பட்டி வில்லேஜில் பிறந்தவர் ஜானகி. அப்பா ஸ்கூல் டீச்சர். அதனால்தானோ என்னவோ ஜானகிக்குக் எஜூகேசனில் ரொம்ப இண்டரஸ்ட் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். தக்கனூண்டு வயசிலிருந்தே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். ‘இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்’ என அவரது அப்பா சொல்லி புட்டார். படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார். இவரது திறமையையும் பாடும், ஆர்வத்தையும் பார்த்து, எட்டாவது வயசில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், ‘நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை’ என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பிப்புட்டாருன்னா பார்த்துகளேன். அதையே பலமா பிடிச்சிண்டு மெட்ராஸூக்கு ஷிப்ட் ஆன நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் வேலை கிடைச்சு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. 1957-ம் வருசம், ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை இன்னிக்கும் மத்த சிங்கர்ஸ் பாட பயப்படுவாஹ. அவ்வளவு கஷ்டமான பாடலை இளம் வயதிலேயே இஷ்டப்பட்டு பாடி அசத்தியவர் இந்த ஜானகி. அதே ஏ வி எம்-மில் இருக்கும் போதே தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார். தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தபோதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது (கட்டிங் கண்ணையா) புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். குறிப்பா மச்சானப் பார்த்தீங்களா-வும் அன்னகிளியே உன்ன தேடுதே-வும் இன்னிக்கும் மாஸ்டர் பீஸ். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசைடமைப்பில் எஸ்.ஜானகி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார். சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார். பின்னாளில் 1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், ‘இதே ஆண்டில் ‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என கூறி நெகிழவைத்தவர். எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். ‘ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம்.
