துளிர் விடியல்
பூமிதேடும் புதுவிடியல் பூக்கள் மலரப்புலர்கிறது
இருள்கிழிக்கும் ஒளிப்பிழம்பு கிழக்கினிலே எழுகிறது
கடலைக் கடைந்தெடுக்கும் அலைகளின் சத்தங்கள்
காற்றினூடே கலந்துவந்து காதிலேதோ சொல்கிறது
நீலவானம் கன்னம்சிவக்க
உதயசூரியன் உயரவெழ மேகக்கூட்டம் பவனிவருகுது
புதுவிடியல் பூமிநிறைக்க
வண்டினத்தின் நாதகீதத்தால்
பூக்களுக்கும் காதலூறிட
மெல்லிதழ்கள் விரித்திங்கு
தேனிதயம் திறந்துகொண்டன
ஆறறிவுகள் அருண்டுபார்க்குது
அடுத்தபக்கம் புரண்டுகொள்ளுது
எழுந்துவருகின்ற விடியலழைக்க
இன்னுமென்ன எழுந்துகொள்கவே!
இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
