மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலை மறந்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் 2 ஆட்டங்களில் கண்ட தோவ்லியால் துவண்டு போய் இருக்கும் ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை மோதி இருக்கின்றன. இதில் சென்னை 16 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 13 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
டெல்லி-ஐதராபாத் மோதல்
முன்னதாக மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.
ஐதராபாத் அணியின் அதிரடியை தடுப்பதை பொறுத்தே டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.