நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், அவர்களுக்கு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.

இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் நாளான நாளை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தேர்வு பணிகளில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துதல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2, 3 நாட்கள் இடைவெளி உள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு மே 19-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!