தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து 2025-26 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக உட்பட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். மேலும், சபாநாயகர் மீது அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடைபெறுகிறது.