தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் சிறப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவற்றை சொல்லலாம். சமீபத்தில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் வகையில், 50 மின் ஆட்டோக்களை மகளிர் தினத்தன்று வழங்கினார். நாளைய தினம் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு மின் ஆட்டோக்களை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சென்னையில் நடந்த நிகழ்வில் பச்சை கொடி காட்டி மின் ஆட்டோக்களை தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆண்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் பெண்களையும் சென்றடைய வேண்டும் என்று திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னெடுப்பில் 50 மின் ஆட்டோக்களை சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு இன்றைய தினம் (மார்ச் 13) நாம் வழங்கினோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பல்வேறு பொருட்களோடு வலம் வரவுள்ள இந்த மின் ஆட்டோக்கள், நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த சகோதரிகளின் வாழ்வாதாரத்துக்கு துணை நிற்க இருக்கிறது. குறிப்பாக சுய உதவிக்குழுக்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவற்றை சந்தைப்படுத்த மின் ஆட்டோக்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மின் ஆட்டோக்களை வழங்க உரிய பயிற்சியை அளித்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.