12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று, தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஒருவித அச்சத்துடன் இருப்பர். இந்த நிலையில், சென்னை கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர்களின் வீட்டிற்கு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்றார்.
அவர் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். பொதுத்தேர்வு குறித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீங்கி, தேர்வில் கவனச் சிதறல் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்த இறையன்பு, தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விரும்பும் பட்டப்படிப்பை தொடர்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இச்சந்திப்புகள் மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்தார்கள்.