நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறுகையில், “காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடாரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது”.
காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மிகவும் சுறுசுறுப்பான டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றில் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான கட்டமைப்புகளை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.