2025 ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் தல தோனி. இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற கிரிக்கெட் போட்டிகளைவிட ஐபிஎல் போட்டிகள் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 18 வது சீசனானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், அனைத்து அணிகளும் தற்போது இந்த தொடருக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இம்முறை தோனிக்காக ஐபிஎல் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பயிற்சிகள் மேற்கொள்ள சென்னை வந்தடைந்தார் தல தோனி. தோனி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சென்னை வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.