கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்.. காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அப்பதான் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி, சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, அவருக்கும் வைஸ்ராய்க்கும் நடந்த கடிதப்போக்குவரத்து வெற்றி பெறவில்லை. இதனால் காந்தி திட்டமிட்டபடி 1943 பிப்ரவரி 10ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவர் உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. பிப்ரவரி 16ந்தேதி அவர் நிலை மோசமாகி விட்டதாக, 6 டாக்டர்கள் கொண்ட குழு அறிவித்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, பாராளுமன்றத்தில் பலர் வற்புறுத்தினர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசின் போக்கைக் கண்டித்து, வைஸ்ராயின் நிர்வாக சபையில் இருந்து சர்.எச்.பி. மோடி, சர்.என்.ஆர்.சர்க்கார், எம்.எஸ்.ஆனே ஆகிய மூவரும் ராஜினாமா செய்தனர். பிப்ரவரி 18ந்தேதி பேசும் சக்தியை காந்தி இழந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தனர். காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் அனைத்திந்திய தலைவர்கள் மாநாடு நடந்தது. அதில் ராஜாஜி, தேஜ் பகதூர் சாப்ரூ, ஜெயகர், புலாபாய் தேசாய் உள்பட 20க்கு மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாத்மாவை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இந்த வேண்டுகோளை வைஸ்ராய் நிராகரித்தார். காந்தியை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். “காந்தியை கைது செய்தது மாபெரும் தவறு. அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” என்று இங்கிலாந்து நாட்டுப் பேரறிஞர் பெர்னாட்ஷா அறிக்கை விடுத்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. காந்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். தமது மனோதிடத்தால், 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மார்ச் 3ந்தேதி வெற்றிகரமாக முடித்தார். தண்ணீர் கலந்த ஆரஞ்சு பழரசத்தை கஸ்தூரி பாய் கொடுக்க, அதை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதே சமயம் காவலில் இருந்த கஸ்தூரிபாய்க்கு 1943 டிசம்பர் கடைசியில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உடல் நலிந்து, படுத்த படுக்கையில் வீழ்ந்தார். அவரை விடுதலை செய்யும்படி, லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார். கஸ்தூரிபாயின் உடல் நிலை மோசம் அடைந்தது. மனிதாபிமானத்தை மதித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்க பிரிட்டிஷார் மறுத்ததுடன், “கஸ்தூரிபாய் இப்போது இருக்கும் இடம் அவருக்குப் பாதுகாப்பானது” என்று கூறியது. 1944 பிப்ரவரி மாதத்தில், தன் முடிவு நெருங்கி விட்டதை கஸ்தூரிபாய் உணர்ந்து கொண்டார். தன் பேரன், பேத்திகளைக் காண விரும்பினார். அவருடைய இறுதி விருப்பப்படி பேரன் பேத்திகள், நெருங்கிய உறவினர்கள் ஆகாகான் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1944ம் ஆண்டு இதே பிப்ரவரி 22ந்தேதி இரவு 7.35 மணிக்கு, கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம் கஸ்தூரிபாய் காலமானார்.அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். 62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன் சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின் பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை. கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி, இறுதிச்சடங்குகளை செய்தார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அமரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம் 22 பிப்ரவரி 1958. மௌலானா அபுல்கலாம் ஆசாத்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையைஎதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். இந்தியாவில் அனைத்து சமூகத்துக்கும் கல்வி கிடைக்க கல்வித்துறையில் சரியான அடித்தளமிட்டார். நாட்டு மக்களின் மீது அன்பு கொண்டு,அவர்களின் கல்வி அறிவை உயர்த்திட கல்வித்துறையில் இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. புது டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மௌலானா ஆசாத் என்ற இவரது பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
1946 – சோவியத்துக்கான அமெரிக்கத் தூதுக்குழுவின் துணைத்தலைவர் ஜார்ஜ் கென்னன், மாஸ்கோவிலிருந்து, சோவியத்தின் அணுகுமுறைகள் குறித்து, ‘நீளத் தந்தி’ என்று குறிப்பிடப்படும், சுமார் எட்டாயிரம் சொற்கள் (படத்தில் உள்ளதுபோல 19 பக்கங்கள்!)கொண்ட மிகநீண்ட தந்தியை அனுப்பின நாள் அவ்வளவு பெரிய செய்தியைத் தந்தியாக அனுப்பி சிரமத்தை ஏற்படுத்துவதற்கு மன்னிப்பும் கோரியிருந்த அவர், செய்தியின் அவசரம் கருதி தந்தியாக அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் உலகப்போரில், நாஜி ஜெர்மெனியை வீழ்த்துவதில் மிக முக்கிய கூட்டணி நாடாக இருந்த சோவியத்தின் உறவை அமெரிக்கா முக்கியமானதாகக் கருதினாலும், சோவியத்தின் அரசாட்சி முறையை ஏற்க முடியாத நிலையில் இருந்தது. உலகப் போரில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்களுக்கு உதவி என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றை சோவியத் ஒன்றியம் ஏன் ஆதரிக்கவில்லை என்று, சோவியத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் அமெரிக்கா விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கத்தான் அந்த நீண்ட தந்தியை கென்னன் அனுப்பினார். முதலாளித்துவத்துடனான ஒரு முடிவற்ற போரில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் சோவியத், இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளக்கூடிய ஆனால், கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்களையே முதலாளித்துவவாதிகளைவிடப் பெரிய எதிரிகளாகக் கருதுவதாக அவர் அத்தந்தியில் குறிப்பிட்டிருந்தார். முதலாளித்துவமும், சோவியத்தும் அமைதியான முறையில் நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது என்று சோவியத் கருதுவதாகக் குறிப்பிட்ட கென்னன், சோவியத்தின் கம்யூனிசத்துடனான உறவே அமெரிக்க வெளியுறவு அதுவரை கண்டிராத மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த தந்தியை அடிப்படையாகக் கொண்டே, சோவியத் ஒன்றியத்துடனான அமெரிக்க உறவுகள் என்ற (ரகசிய) கொள்கை அறிக்கையை க்ளார்க் க்ளிஃபோர்ட், ஜார்ஜ் எஸ்லி ஆகியோர், குடியரசுத்தலைவர் உத்தரவின்படி, அவ்வாண்டு செப்டம்பரில் உருவாக்கினர். இந்தத் தந்தியிலிருந்த பல செய்திகளுடன், 1947 ஜூலையில் அமெரிக்காவின் அந்நிய விவகாரங்கள் இதழில், மிஸ்ட்டர் எக்ஸ் என்ற பெயரில் கென்னன் எழுதிய கட்டுரை, மிஸ்ட்டர் எக்ஸ் கட்டுரை என்றே குறிப்பிடப்படுகிறது. எதிர்மறைப் பிரச்சாரங்களையே சோவியத் கொண்டிருப்பதால், மேற்கத்திய உலகம் ஒன்றிணைந்தால் சோவியத் பலவீனமாகிவிடும் என்று கூறிய இந்தத் தந்தியின், முதல் இரண்டு அத்தியாயங்களே, சோவியத்துடனான பனிப்போர்க்கால அமெரிக்கக் கொள்கைகளின் அடிப்படையாக அமைந்தன.
நீதிக்கட்சி முன்னனி தலைவர்களுள் ஒருவரான “WPA சௌந்தரபாண்டியன்’ நாடார் காலமான தினம். வூத்தம்பட்டி புன்னைவன அய்யா சௌந்தரபாண்டியன் (15 செப்டம்பர் 1893 – 22 பிப்ரவரி 1953) நாடார் மகாஜன சங்கத்தின் முன்னணிப் பிரமுகராக இருந்தார், மேலும் 1920 ஆம் ஆண்டு PT ராஜன் பரிந்துரையின் பேரில் சென்னை சட்டமன்றத்தின் முதல் நாடார் உறுப்பினரானார். நாடார் குடும்பம் முன்பு ஆதரவளித்தது மற்றும் பி.டி.ராஜனின் தேர்தல் வெற்றிக்காக உழைத்தார். அவர் பெரியார் ஈ.வி.ராமசாமி நிறுவிய சுயமரியாதை இயக்கத்துடன் நாடார் சமூகத்தை இணைக்கும் முயற்சிக்காக அறியப்படுகிறார் . நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னராக அறியப்பட்டார் . கொடைக்கானல் அருகே எஸ்டேட் வைத்திருக்கும் ஒரு முக்கிய காபி தோட்டக்காரர் குடும்பத்தில் இருந்து வந்தவர் . 1920 முதல் 1930 வரை நாடார்களின் முக்கிய தலைவராக இருந்தார். நாடார் 1920 முதல் 1937 வரை மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராக பணியாற்றினார். அவர் நீதிக்கட்சி மற்றும் சபையில் நாடார் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் . அவர் 1928 முதல் 1930 வரை ராம்நாடு மாவட்ட வாரியத்தின் தலைவராகவும், 1943 முதல் 1947 வரை மதுரா மாவட்ட வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பெரியாரின் சித்தாந்தங்களைத் தூண்டி, சுயமரியாதைத் திருமணங்களுக்கும் , சாதிகளுக்கு இடையேயான உணவுக்கும் நாடார்களை வலியுறுத்தினார் . 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக பெரியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937-40 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அவர் நிதியுதவி அளித்தார். போராட்டத்தின் மக்கள் ஆதரவை ஒப்புக்கொண்டு, அப்போதைய மதராஸின் கவர்னர் லார்ட் எர்ஸ்கின், ஜூலை 1938 இல் வைஸ்ராய் லின்லித்கோவுக்கு எழுதினார் , “இந்தி கட்டாயம் இந்த மாகாணத்தில் பெரும் பிரச்சனைக்குக் காரணமாக உள்ளது மற்றும் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானது. பொப்பிலி ராஜாவின் நீதிக்கட்சி அரசாங்கம் (1932-36) அதன் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக மாகாணம் முழுவதும் பிரபலமடைந்தது. 1930களின் நடுப்பகுதியில், சௌந்தரபாண்டியனின் தனிப்பட்ட கவர்ச்சி இருந்தபோதிலும், நீதிக்கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. மேலும், சி.ராஜகோபாலாச்சாரியின் இந்திய தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1939 ஆம் ஆண்டின் கோயில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீடு சட்டம் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே.காமராஜின் எழுச்சி போன்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்நாடார் சமூகத்தின் அணிகளுக்குள் சௌந்தரபாண்டியன் நாடார் அரசியல் வீழ்ச்சியைத் தூண்டியது. 1940 களின் முற்பகுதியில் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆன நேரத்தில், பெரும்பாலான நாடார் சமூகத் தலைவர்கள் இந்திய தேசிய காங்கிரஸுக்கு தங்கள் விசுவாசத்தை மாற்றி, இந்திய சுதந்திர இயக்கத்தை ஆதரித்தனர் . சென்னையின் முக்கிய ஷாப்பிங் நகரமான தி.நகர் பாண்டி பஜார் , சௌந்தரபாண்டியன் நாடார் பெயரால் அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பஜார் நுழைவாயிலில் தலைவரின் சிலை அமைக்கப்பட்டு, சமீபகாலமாக, சௌந்தரபாண்டியன் அங்காடி என பஜாரின் பெயர் குறிப்பிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டது. இந்த வெண்கலச் சிலை நாகப்பா ஜெகநாதனால் செதுக்கப்பட்டு, திரு சிவந்தி ஆதித்தனார் முன்னிலையில் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அவர் தனது சொந்த ஊரான காயாமொழியில் நாடார் சமுதாயத்தினருக்காக பள்ளிகள் போன்றவற்றை அமைப்பதிலும் தீவிரமாக இருந்தார். அவர் ‘நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னன்’ என்றும் குறிப்பிடப்படுகிறார் சுயமரியாதை இயக்கம் தொடர்பான பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில். பட்டிவீரன்பட்டியில் காபி கூட்டுறவு க்யூரிங் பணிகளை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார் . இவரது சந்ததியினர் பட்டிவீரன்பட்டியில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
1944 – இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மெனியால் கைப்பற்றப்பட்டிருந்த நெதர்லாந்தில், நிஜ்மெகென், அர்ன்ஹெம், என்ஷீட், டெவெண்ட்டர் ஆகிய நகரங்களை அமெரிக்க விமானப்படை தவறுதலாகத் தாக்கியதில் ஏராளமான பொதுமக்கள் பலியாயின நாள் பிப்ரவரி 22. நிஜ்மெகெனில் 800, என்ஷீல்டில் 141 பொதுமக்கள் பலியானதாக அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டது. நெதர்லாந்தைக் கைப்பற்ற ஜெர்மெனி நடத்திய ரோட்டர்டாம் தாக்குதலில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கைக்கு இது இணையானது. உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகம். காலநிலை, தகவல்தொடர்பில் சிக்கல் ஆகியவற்றால், தவறுதலாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக நேச நாடுகள் அறிவித்தாலும், உண்மையில், ‘வாய்ப்புள்ள இலக்குகள்’ என்ற அடிப்படையில் தெரிந்தே தாக்கப்பட்டதாக ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர். விமானப்படையின் தாக்குதலின்போது, தாக்க வேண்டிய இலக்குகள் முதன்மை, இரண்டாம்நிலை இலக்குகள் என்று வகைப்படுத்தப்படுவதுடன், அவற்றைத் தாக்கமுடியாமற்போகும்போது, எதிரி நாட்டில் தாக்கமுடிந்த இடங்களை, ‘வாய்ப்புள்ள இலக்குகள்’ என்று குறிப்பிட்டு தாக்குவார்கள். ஜெர்மன் விமானப்படைக்கு அதிகச் சேதத்தை விளைவிப்பதற்காக 1944 ஃபிப்ரவரி 20-25இல் நடத்தப்பட்ட பிக் வீக் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அக்காலத்தில் குண்டுகளுடன் தரையிறங்குவது ஆபத்தானது என்பதால், எடுத்துச் சென்ற குண்டுகளனைத்தையும் வீசிவிடவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருந்ததாலும், 25 தாக்குதல்களை நிகழ்த்திய விமானிகளுக்கு விடுப்பு வழங்கப்படும் என்பதாலும், தெரிந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாம். (லண்டனிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருந்த நாடுகடந்த டச்சு அரசின் அனுமதியாடுதான் தாக்குதல் நடததப்பட்டிருந்தது என்று நாஸிகள் பிரச்சாரம் செய்து, நெதர்லாந்து மக்களின் ஆதரவைப்பெற முயற்சித்தது தனிக்கதை!) தாக்குதல் நடத்தியது நட்பு நாடு என்பதால், இதைப்பற்றிய (கண்டன) உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டாம் என்று இப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. போரில் பலியான வீரர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு நினைவுநாள்கூட கடைப்பிடிக்கப்படவில்லை. 40 ஆண்டுகள் கழித்து 1984இல்தான் முதன்முறையாக நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டதுடன், 1994இல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்தான், தாக்குதலில் உயிர்தப்பியவர்கள், நேரில் பார்த்தவர்கள் கருத்துக்கூறவும் முதன்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. 2010இலிருந்து நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
1909 – பெரும் வெள்ளைக் கப்பல் அணி என்றழைக்கப்பட்ட, அமெரிக்கக் கப்பற்படையின் உலகைச்சுற்றிய பயணத்தை நிறைவு செய்து கப்பல்கள் மீண்டும் அமெரிக்கா வந்தடைந்த நாள் பிப்ரவரி 22. 1907 டிசம்பர் 16 அன்று புறப்பட்ட இந்தப் பயணத்தில் 16 போர்க்கப்பல்கள், ஏராளமான துணைக் கப்பல்கள் ஆகியவற்றில், சுமார் 14 ஆயிரம் கடற்படையினர் பயணித்தனர். சுமார் 80 ஆயிரம் கி.மீ. பயணித்து, ஏராளமான நாடுகளுக்கும் துறைமுகங்களுக்கும் சென்ற இந்தக் கப்பலணி, பல்வேறு நாட்டு மன்னர்களின் பிறந்தநாள், அந்தந்த நாடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்கள், மரியாதை நிமித்தமான அணிவகுப்புகள் என்று எண்ணற்ற நிகழ்வுகளில் பங்கேற்றது. இன்றிருப்பதுபோல, பெரியண்ணன் நிலையையெல்லாம் அமெரிக்கா எட்டியிராத காலம் அது. உலகின் பலம் வாய்ந்த நாடாக இங்கிலாந்தும், அதைத் தொடர்ந்து ஃப்ரான்ஸ் முதலான நாடுகளும்தான் அன்று இருந்தன. கடல்கடந்து இருந்த தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பகுதிகளைக் காப்பதற்காகக் கடற்படையை வலுப்படுத்துவது அவசியம் என்று உணர்ந்து 1880இல் கடற்படையை அமைக்கத் தொடங்கிய அமெரிக்காவிடம், சுமார் 90 சிறிய போர்க்கப்பல்கள் இருந்தன. மரத்தாலான இக்கப்பல்கள் காலாவதியாகிக் கொண்டிருந்த நிலையில், 1900களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட உலோகத்தாலான புதிய கப்பல்கள்தான் இப்பயணத்தை மேற்கொண்டன. பல்வேறு நாடுகளுடனும் நல்லுறவை உருவாக்கும் பயணமாக இது மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறிக்கொண்டது. உண்மையில், ராணுவரீதியாகத் தங்கள் பலத்தையும், கடற்பரப்பில் தாங்கள் பலம் பெற்றுவருவதையும் காட்டி, மற்ற நாடுகளை கவனமாக இருக்குமாறு (அதாவது அமெரிக்காவிடம் வாலாட்டவேண்டாமென்று!) எச்சரிக்கவே இந்தப் பயணத்தை மேற்கொள்ளுமாறு, அதிபர் தியோடார் ரூஸ்வெல்ட் பணித்தார். போர்க்காலமல்லாத அமைதிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டும் பயணம் என்பதைக் காட்ட, அனைத்துக் கப்பல்களுக்கும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. அதனாலேயே, பெரும் வெள்ளைக் கப்பல் அணி என்ற பெயர் ஏற்பட்டது. இந்தப் பயணம் அமெரிக்கக் கடற்படைக்கு சிறந்த அனுபவமாக அமைந்ததுடன், கப்பல்களிலும், ஆயுதங்களிலும் குறைகளைக் களைந்து மேம்படுத்திக்கொள்ளவும் உதவியது.
இத்தாலியக் கடல் பயணி, கண்டுபிடிப்பாளர் அமெரிகோ வெஸ்புகி (Amerigo Vespucci) இறந்த தினம் l இத்தாலியின் புளோ ரன்ஸ் நகரில் (1454) பிறந்தவர். அங்கு சம யத் துறவியாக இருந்த தன் சித்தப்பா விடம் கல்வி கற்றார். உயர் கல்வி கற்க இவரது சகோதரர்கள் பைசா பல்கலைக் கழகத்துக்குச் சென்றனர். இவரோ வியாபாரம் செய்ய முடிவெடுத்தார். மெடிசி புளோரன்ஸ் வர்த்தக நிறுவனத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். முதலாளியின் நம்பிக்கை, அன்புக்குப் பாத்திரமானார். 1492-ல் காடிஸ் (ஸ்பெயின்) நகரில் உள்ள கிளை அலுவலகத்தின் ஏஜென்ட்டாக அனுப்பப்பட்டார். l தனது உலகப் புகழ்பெற்ற சாகசக் கடல் பயணத்தை முடித்துவிட்டு வந்திருந்த கொலம்பஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அவற்றை எல்லாம் நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. l அந்த சமயத்தில், கிழக்கிந்தியத் தீவுகளுக்கு 12 கப்பல்கள் வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்த இத்தாலியக் கடல் வணிகர் ஒருவர் திடீரென இறந்துபோக, அந்த வணிக வாய்ப்பு வெஸ்புகிக்கு கிடைத்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து பல வணிக வாய்ப்புகள் கிடைத்தன. l போர்ச்சுகல் நாட்டு மன்னரின் அழைப்பை ஏற்று, 1499 முதல் 1502 வரை அட்லான்டிக் கடல் பகுதியில் செல்லும் கப்பல்களில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். l 1501-ல் இவரது மூன்றாவது கடற்பயணத்தின்போது தென் அமெரிக்காவின் தற்போதைய நகரங்களான ரியோ டி ஜெனிரோ, ரியோ டி லா பிளாட்டா ஆகியவை கண்டறியப்பட்டன. அதே பயணத்தில் ஒரு புதிய உலகத்தை (தென் அமெரிக்கா) கண்டறிந்ததாக ஒரு கடிதத்தில் வெஸ்புகி கூறியிருந்தார். l தனது பயண அனுபவங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார். தனது பெயரை அமெரிக்கஸ் வெஸ்புசியஸ் (Americus Vespucius) என்று லத்தீன் மொழி உச்சரிப்பிலேயே பயன்படுத்தினார். இவர் மொத்தம் 4 முறை கடற்பயணம் மேற்கொண்டார். 6 முறை கடற்பயணம் சென்றதாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன. l 1507-ல் ஜெர்மனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் வால்ட்ஸீமுல்லர் உலக வரைபடத்தை உருவாக்கினார். அதில், வெஸ்புகி கண்டறிந்த கண்டத்துக்கு ‘அமெரிக்கஸ்’ என அவரது பெயரையே சூட்டினார். l உலகம் முழுவதும் மாலுமிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழிமுறைப்படுத்தவும், நவீனமயமாக்கவும் கடற்பயண வழிகாட்டிப் பள்ளி தொடங்கும் பொறுப்பை வெஸ்புகியிடம் வழங்கினார் போர்ச்சுகல் மன்னர். l குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கி, தனது ஆர்வத்தாலும் உழைப்பாலும் பல கடற்பயணங்களை மேற்கொண்டு, பல புதிய இடங்களைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்ற வெஸ்புகி 58 வயதில் (1512) மறைந்தார்.
1995 – மிக இரகசியமாக வகைப்படுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ‘கொரோனா’ திட்டம் பற்றிய தகவல்கள், வெளியிடத்தக்கவையாக மாற்றப்பட்ட நாள் சோவியத் ஒன்றியம், சீனா உள்ளிட்ட பகுதிகளைக் கண்காணிப்பதற்கென்றே தனியான இரகசிய செயற்கைக்கோள்களை அமெரிக்கா ஏவிய திட்டம்தான் கொரோனா திட்டம் என்று பெயரிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ், 1959 ஜூனிலிருந்து, 1972 மே வரை அமெரிக்கா உளவு பார்த்தது. இதற்காகவே கேஎச்-1,2,3 என்ற வரிசையில் பெயர்கள் சூட்டப்பட்ட 8 வகைகளைச் சேர்ந்த 144 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. கேஎச் என்பது சாவித்துளை(கீ ஹோல்) என்பதன் சுருக்கம். அடுத்தவர் வீட்டுக்குள் சாவித்துளை வழியாக எட்டிப் பார்ப்பது என்ற பொருளுடன், தெரிந்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதற்கு முன்பே 1955இலிருந்து, யு-2 என்ற உளவு விமானத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா உளவு பார்த்துக்கொண்டிருந்தது. அப்படி உளவு பார்த்த விமானத்தை 1960இல் சோவியத் சுட்டு வீழ்த்தி, விமானியும் பிடிபட்டவுடன், அது காலநிலையை அறியும் விமானம் என்று அமெரிக்கா பதிலளித்தது. ஆனால், அந்த விமானம் சேதமின்றிக் கிடைத்திருந்ததுடன், அதிலிருந்த சக்திவாய்ந்த கேமெராவும் சோவியத்திடம் சிக்கிய பின்னணியில், விமானிக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கியது சோவியத். 1962இல் ஒரு கைதிகள் பரிமாற்றத்தின்போது அந்த விமானி அமெரிக்காவுக்குத் திரும்பினார். இந்தப் பின்னணியில்தான் இந்த கொரோனா திட்டம் உருவாக்கப்பட்டு, அறிவியல் ஆய்வு என்று வெளியுலகிற்குச் சொல்லப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள்கள், படமெடுத்து ஃபிலிம்களை திருப்பியனுப்பும். பாராச்சூட்மூலம் மிதக்கும் அவற்றை விமானத்திலிருந்து பிடித்துக்கொள்வார்கள். அவ்வாறு (144இல்) 102 முறை வெற்றிகரமாகத் திரும்பிய ஃபிலிம்களில், 194 கோடி ச.கி.மீ. பரப்பை அமெரிக்கா படமெடுத்திருந்தது. ஏறத்தாழ 85 கோடி டாலர்கள்(ரூபாயில் ஆறாயிரம் கோடிக்கும் அதிகம்!) செலவிடப்பட்ட இத்திட்டம் பற்றிய தகவல்கள், எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்டவற்றை, வெளியிடத் தக்கவையாக அமெரிக்கா 1995இல் மாற்றியது. இத்திட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உண்மையில் குறிப்பிடத்தக்க பலன்கள் எதையும் அமெரிக்காவுக்கு அளித்திராத நிலையில், வெளியிடப்பட்ட படங்களை ஆய்வு செய்து, பண்டைய நாகரிகங்களின் வாழ்விடங்கள், மட்பாண்டங்கள் செய்த இடங்கள், தொன்மையான சின்னங்கள் முதலியவற்றை ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் கண்டறிந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வில், இப்படங்களைக்கொண்டு மெசபடோமியப் பகுதியின், அறியப்படாத பயணத் தடங்கள் கண்டறியப்பட்டன. கொரோனாவிற்குப்பின் செயல்படுத்தப்பட்ட சாமோஸ் திட்டம், படமெடுக்கப்பட்ட ஃபிலிமை செயற்கைக்கோளிலேயே தானியங்கி முறையில் அச்சிட்டு, படத்தை மின்னணு முறையில் புவிக்கு அனுப்பினாலும், கொரோனா அளவுக்கு அதிகப்படங்களை அது எடுக்கவில்லை.
நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்க்டன் பர்த் டே டுடே அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார். ஆதரவு, செல்வாக்கு இருந்தாலும் 3-வது முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப் பட்டுள்ளது அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவரது பிறந்தநாள் விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பிரபல கதை ஒன்று இன்றும் அமெரிக்காவில் பிரபலம். வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்திருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையை சொன்னே பார்த்தியா… அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது. செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசினதுல எனக்குப் பெரிய சந்தோஷம்…” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார்.
தில்லையாடி வள்ளியம்மை பர்த் டே டுடே நாகை டிஸ்ட்ரிக் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி -ங்கற ஊரைச் சேர்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோரது டாட்டர்தான் தில்லையாடி வள்ளியம்மை. இவருடைய பேரண்ட்ஸ் தென்னாப்பிரிக்காவுக்கு கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக சென்று ஜோகன்ஸ்பர்க் நகரில் வேலை பார்த்தபோ அங்கு தில்லையாடி வள்ளியம்மை இதே பிப் 22ல் பிறந்தார். கொஞ்சம் வளர்ந்த நிலையிலே தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மையும் கலந்து கொண்டு போராடினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போ அவருக்கு வயசு ஜஸ்ட் 16. போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அதனால் மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை விரைவிலேயே நோய்தாக்குதலுக்கு ஆளானார். அவரது உடல் நிலையைக் கண்ட ஆங்கில அதிகாரிகள், அபராதம் செலுத்திவிட்டு வெளியே போகுமாறு கூறினார்கள். அதை ஏற்க வள்ளியம்மை மறுத்துவிட்டார். ‘அபராதம் செலுத்துவது போராட்டக்காரர்களின் குணமல்ல. போராட்டம் வெற்றி பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இறுதியில் 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு பலகீனமான நிலையில் விடுவிக்கப்பட்ட வள்ளியம்மை வீட்டுக்கு வந்த பத்தே நாளில் மரணம் அடைந்தார். தன்னலம் கருதாமல் போராடிய இளம் மங்கை வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாக பாதித்தது. ”பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் உயிரை தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” என காந்தி பாராட்டினார்.
உலக சிந்தனை தினம்; வரலாற்றில் இன்று , world thinking day. 1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டி மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்? பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் ஆகும்.எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர். ஐ.நா. அங்கீகரித்த நிலையில் 1932-ஆம் ஆண்டில் இருந்து சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகெங்கிலும் இருந்து நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்து அதன் படி செயல்படுத்தி வர்றாங்க. “சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு” என்னும் மலேசியப் பழமொழிக்கேற்ப ஒரு நல்ல சிந்தனை ஒளியைப்போலவே நிறைய விளக்குகளை ஒளிரச் செய்யும். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஐசக் நியூட்டனின் சிந்தனை புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஆணிவேராய் இருந்தது. புவியீர்ப்பு விசை உண்டென்றால் அவ்விசையிலிருந்து விடுபட்டால் நாம் விண்ணில் எளிதாகப் பறக்க முடியும் என்ற அடுத்த சிந்தனை உருவாகியது. விடுபடு திசைவேகத்தின் மூலம் உலகப் பரப்பிலிருந்து பறந்து நிலவிலே காலடி வைத்தான் மனிதன். அச்சிந்தனையை மெருகேற்றியதால் இன்று செயற்கைகோள்களை அனுப்பி மண்ணிலிருக்கும் நாமனைவரும் அலைபேசிகளால் ஒன்றிணைந்தோம். சிறிய பிரச்சினைகளை பெரிய சுமையாகச் சுமப்பவர்கள் ஆரோக்கியமற்ற சிந்தனையாளர்கள். ஆயிரம் பிரச்சினைகளையும் “இதுவும் கடந்து போகும்” என்று நினைப்பவர்கள் ஆரோக்கியமான சிந்தனையாளர்கள். பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுபவர்கள் உலகளாவிய சிந்தனையாளர்கள். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கேற்ப நற்சிந்தனை நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. சிந்தனைகளை கவனியுங்கள்; அவை வார்த்தைகளாக மாறும்; வார்த்தைகளை கவனியுங்கள்; அவை செயல்களாக மாறும்; செயல்களை கவனியுங்கள்; அவை பழக்கமாக மாறும்; பழக்கங்களை கவனியுங்கள்; அவை பண்பாக மாறும்; பண்பினை கவனியுங்கள்; அதுவே வாழ்க்கையாகும். இதை எல்லாம் சிந்திக்கவே இத்தினமா(க்)கும்