கோவில்கள் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
திருப்பதியில் இன்று இரண்டாவது சர்வதேச கோவில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியது. உலகின் மிகப்பெரிய கோவில்கள் மாநாடு இதுவாகும். கோவில்களின் மகா கும்பமேளா என அழைக்கப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்க, உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கோவில்களின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். தலைமை விருந்தினராக மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 1,581 கோவில்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 100க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன.
நிதி மேலாண்மை, கூட்டக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நெறிமுறைகள், கோவில் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற கோவில் நிர்வாகத்தின் அத்தியாவசிய அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உரைகள், குழு விவாதங்கள் இடம்பெறுகின்றன.