இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 13)

இன்று உலக வானொலி நாள்

2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´ எனப்படுபவர். ´கம்பியற்ற தகவல்தொடர்பு முறை´ மற்றும் ´மார்க்கோனி விதி´ ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ´மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்´, ´வானொலி´ மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்து விட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது. முன்னதாக ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார். இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடி வாராங்க.

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மறைந்த நாள்:

நாஞ்சில் நன்னாட்டினரான செய்கு தம்பிப் பாவலர் சதாவதானி, தமிழ்ப் பெரும்புலவர், கலைக்டல். வடலூர் வள்ளலாரின் அருட்பாவை மருட்பாவென்று மறுத்தோரை எதிர்த்து “அருட்பா அருட்பாவே” என்று நிலை நாட்டியவர். சிறாப் புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கேட்டாற்றுப்பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் “சதாவதானம்” என்னும் கலையில் சிறந்து விளங்கியவர். செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் முகம்மதியர். சதாவதானக் கலையில் வல்லவராக விளங்கினார். ஒரே நேரத்தில் 100 செயல்களைச் செய்வதுதான் சதாவதானம். பொதுவாக ஒரே நேரத்தில எட்டு செயல்களைச் செய்யும் அஷ்டாவதானக் கலையே கடுமையானது. எனவே சதாவதானக் கலையில் வல்லவராக இருப்பது மிக அபூர்வம். செய்கு தம்பி பாவலரின் சதாவதானம் அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்டது. முதுகில் விழுந்து கொண்டிருக்கும் மல்லிகைப்பூ, தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் மணிநாதம் போன்றவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உள் மனத்தில் எண்ணிக் கொண்டே வருவார் பாவலர். எப்போது நிறுத்தி எண்ணிக்கை குறித்துக் கேட்டாலும் பதில் சொல்வார். தவிர கூட்டத்தில் யாராவது வெண்பாவிற்கு ஈற்றடி கொடுப்பார்கள். தளை தட்டாமல் கொடுக்கப்பட்ட ஈற்றடியில் வெண்பா யாத்துச் சொல்வதும் மூன்று அவதாரத்தில் ஒன்று. ஒருமுறை சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஓர் அன்பர் பாவலரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். துருக்கனுக்கு ராமன் துணை என்பதுதான் ஈற்றடி. செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் துருக்கர். முகம்மதிய மதத்தைச் சார்ந்த அவர் இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைத்துக் காத்திருந்தனர். பாவலர் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமபிரானது தம்பிகளான ‘பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற கடைசி அடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. குறும்பு செய்ய நினைத்தவர் முகத்திலும் அரும்பியது மகிழ்ச்சியும் நிறைவும் கலந்த புன்முறுவல். கொக்கிவிட்ட சங்கிலிபோற் கூண்டெழுந்து நும்மடியார் சொக்கிவிட்ட நல்லருட்கே தோய்ந்து நின்றாரை யோநா னுக்கிவிட்ட நெஞ்கினான யுள்ளுடைந்த மெய்ம்மடங்கிக் கக்கிவிட்ட தம்பலொத்தேன் கல்வத்து நாயகமே. துட்டென்றால் வாயைத்திறந்து துடிதுடித் தெழுந்து கொட்டென்று கேட்டுநிற்குங் கோளர் கட்கோ – இட்டென்றும் வற்றாத் தனம்படைத்த வள்ளல்சி தக்காதி பொற்றா மரைக்கோ புகழ்.”

1826ஆம் ஆண்டு இதே நாளில் தான் குடிப்பழக்கத்தைப் பாதுகாப்பான அளவில் கட்டுப்படுத்தும் நோக்குடைய, அமெரிக்கன் டெம்ப்பரன்ஸ் சொசைட்டி (ஏடிஎஸ்) தொடங்கப்பட்ட நாள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேற்கத்திய பண்பாட்டில், குறிப்பாகப் பிற நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களில், மருந்தாகவும், மகிழ்வூட்டும் பானமாகவும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவருக்கும் தவிர்க்கவியலாத ஒன்றாக மது ஆகியிருந்தது.மது அருந்துவது சமூகத்தால் ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், போதையால் நிதானமிழக்குமளவுக்குக் குடிப்பது ஏற்கப்பட்டதாக இல்லை. அப்படி நிதானமிழந்த போதை காணப்பட்டாலும், அது சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, பெரும் எந்திரங்களை இயக்க, போதையால் நிதானமிழக்காத தொழிலாளர்களின் தேவையேற்பட்டது, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுகுறித்த பார்வையை மாறச்செய்தது. அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ், புளிக்க வைக்கப்பட்ட மது உடலுக்கு நலம் பயத்தாலும், வடித்தெடுக்கப் பட்ட மது(சாராயம்) கேடு மட்டுமே பயக்கும் என்று கண்டுபிடித்தார். நோய்கள், இறப்புகள், குற்றங்கள், தற்கொலைகள் ஆகியவற்றுக்கும் குடிப்பழக்கத்திற்குமுள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், மதுவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த தேவாலயங்களை வேண்டினாலும், அது கண்டுகொள்ளப்படவில்லை. இக்காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட ‘ஜின் ஈர்ப்பு’, விவாதப்பொருளானது. சுத்தமான குடிநீர், பால் ஆகியவற்றின் தட்டுப்பாடு, காஃபி, டீ ஆகியவற்றின் அதிக விலை, மதுவை மறுத்தல் அவமதிப்பாகப் பார்க்கப்பட்டது ஆகியவை, அமெரிக்க உணவில் மதுவைத் தவிர்க்க இயலாததாகவே வைத்திருந்தாலும், மக்கள் அளவாகவே குடித்ததால் பிரச்சினையாக இல்லை.1820களில்தான் அளவு கடந்த குடிப்பழக்கம் என்பது அமெரிக்காவில் பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியது. ஏற்கெனவே, மெத்தடிச திருச்சபையயைத் தொடங்கிய ஜான் வெஸ்லி, 1743இல் அத்தியாவசியமான தேவைகள் தவிர்த்து, மதுவை விற்கவோ, வாங்கவோ, அருந்தவோ கூடாது என்று இங்கிலாந்தில் பிரச்சாரம் செய்யத்தொடங்கியிருந்தார்.அதைப்போன்றே, அளவான மதுவை வலியுறுத்த அமெரிக்காவிலும் ஏடிஎஸ் தொடங்கப்பட்டது. தொடங்கிய பத்தாண்டுகளில் 8,000 கிளைகள் உருவாகி, 12.5 லட்சம் உறுப்பினர்கள், வடித்தெடுக்கப்பட்ட மதுவை அருந்துவதில்லை என்று உறுதியேற்றனர். பின்னர் முழு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டாலும் அது அமெரிக்காவில் வெற்றியடையவில்லை.

1258 – பாக்தாத் நகரம், மங்கோலியர்களால் கைப்பற்றி, அழிக்கப்பட்ட நாள் இத்துடன், இஸ்லாமியப் பொற்காலம் முடிவுற்றதாக பொதுவாக ஏற்கப்படுகிறது. இஸ்லாமியப் பொற்காலம் என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டில்தான் உருவானது. அனைவரும் ஏற்கிற வரையறை இல்லாத இது, அப்பாசிய கஃலீஃப் ஹாருன் அல்-ரஷீத் ஆட்சிக்காலமான கி.பி.786(-809)இல் தொடங்கியதாகப் பெரும்பாலும் சொல்லப்டுகிறது. இக்காலகட்டத்தில், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, அறிவியல், கணிதம் உள்ளிட்ட துறைகளிலும் இந்தக் கலீஃபகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது. உலகம் முழுவதுமிருந்த இஸ்லாமிய அறிஞர்களும், பல்துறை விற்பன்னர்களும் பாக்தாத்துக்கு அழைத்துவரப்பட்டு, அதுவரை உருவாகியிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அரபி, பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இப் பணிகளுக்கு, இஸ்லாமியப் பேரரசு ஏராளமாக நிதியளித்தது. இங்கிலாந்தின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் ஆராய்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கிய நிதியைப் போல இரண்டு மடங்கை இந்த கலீஃபகம் இதற்காக அளித்ததாம்! கிரேக்க, இந்திய, பாரசீக, சீன, எகிப்திய, ஃபீனிஷிய நாகரிகங்கள் உள்ளிட்ட பண்டைய நாகரிகங்களின் அறிவுச் செல்வங்கள், இந்த இஸ்லாமிய மொழிபெயர்ப்பு நடவடிக்கையால்தான் பாதுகாக்கப்பட்டன என்றும், இது நடைபெற்றிருக்காவிட்டால், பிற்கால சமூகங்களுக்கு அவற்றில் பல கிடைக்காமலே போயிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு தொகுக்கப்பட்டவற்றைக்கொண்டு பாக்தாத்தில் அறிவு இல்லம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நூலகமும், இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டாலும், அவற்றில் சுமார் 4 லட்சம் கையெழுத்துப் படிகளை நாசிர் அல்-தின் அல்-துசி என்ற அறிஞர்தான் பாதுகாத்தார். உமையாத் கலீஃபகம் வீழ்த்தப்பட்டு, அப்பாசித் கலீஃபகம் 750இல் உருவானபின், புதிய தலைநகராக 762இல் பாக்தாத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டு, 768இல் முடிக்கப்பட்டது. சற்றேறக்குறைய 5 நூற்றாண்டுகள் தலைநகரமாக இருந்த நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் இது உலகின் மிகப்பெரிய நகரமாகியிருந்தது. அறுபதாயிரம் வீரர்களால் பாதுகாகப்பட்டிருந்த பாக்தாத் நகரை 1258 ஜனவரி 29இல் முற்றுகையிட்ட, ஹூலாகு கான் தலைமையிலான மங்கோலியப் படைகளிடம் 13 நாட்களில்(ஃபிப்ரவரி 10இல்), பாக்தாத் சரணடைந்தது. மூன்று நாட்கள் கழித்து இதே பிப் 13இல் பாக்தாத் நகருக்குள் நுழைந்த மங்கோலியப் படைகளால், 8 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அறிவு இல்லத்திலிருந்த (எழுதப்பட்ட) நூல்களை டைக்ரிஸ் நதியில் இப்படைகள் வீசியதால், எழுதப்பட்ட மை கரைந்து, நதியே கரிய நிறத்தில் ஓடியதாம்!

விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) நினைவு தினம் இன்று. பிரபல வக்கீலாக இருந்தவர் நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர்.ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார். கொஞ்சம் அட்சினல் இன்ஃபர்மேசன்: அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்து வைக்க அவர் அழைத்ததும் பக்தவத்சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

1912 – ஒருவரின் மறைவுக்காக சில நிமிடம் மவுனம் கடைப்பிடிப்பது, உலகிலேயே முதன்முறையாக போர்ச்சுகீசிய ஆட்சிமன்றத்தில் செய்யப்பட்ட நாள் பிரேசிலிய அயலுறவின் தந்தை எனப்படும், பிரேசிலின் வெளியுறவு அமைச்சரான ஜோஸ் பரானோஸ், ஃபிப்ரவரி 10இல் இறந்ததற்காக, ஃபிப்ரவரி 13இல் கூடிய ஆட்சி மன்றம் 10 நிமிடங்கள் மவுனம் கடைப்பிடித்தது. பேராசிரியர், புவியியலாளர், வரலாற்றாசிரியர் உள்ளிட்ட பன்முகம் கொண்ட இவர், போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து, விடுதலைபெற்ற பிரேசில், குடியரசாவதற்குச் சில நாட்கள் முன்னதாக, பேரரசர் இரண்டாம் பெட்ரோ வழங்கிய ‘ரியோ ப்ராங்க்கோவின் பிரபு’ என்ற பட்டத்தாலேயே அறியப்படுகிறார். அவ்வாண்டிலேயே, ஏப்ரலில் டைட்டானிக் கப்பல் மூழ்கி, சுமார் 1,500 பேர் உயிரிழந்தபோது, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த மவுனம் கடைப்பிடிப்பது பரவியது. தென்ஆஃப்ரிக்காவின், கேப்டவுன் நகர மேயரான ஹாரி ஹேண்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், அவர் மகன் ரெஜினால்ட் ஹேண்ட்ஸ், முதல் உலகப்போரில் பங்கேற்று, 1918 ஏப்ரல் 20இல் ஃப்ரான்சில் போர்முனையில் பலியானதைத் தொடர்ந்து, போரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1918 மே 14லிருந்து, ஆண்டு முழுவதும், நண்பகல் பீரங்கி ஒலிப்பைத் தொடர்ந்த இரண்டு நிமிடங்களுக்கு மவுனம் கடைப்பிடிக்க உத்தரவிட்டார். இது 1919 ஜனவரி 17டன் நின்றுபோனாலும், மீண்டும் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. நண்பகல் பீரங்கி ஒலிப்பு என்பது, டச்சுக் காரர்களிடமிருந்து கேப்டவுனை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபின், நண்பகல் 12 மணிக்கு, நேரத்தைக் குறிப்பதற்காக (மணி, சங்கு போன்று) 1806இலிருந்து பீரங்கியை ஒருமுறை வெடிக்கும் நடைமுறையாகும். இது இன்றுவரை(விடுமுறை நாட்கள் தவிர்த்து) தொடர்கிறது. மூன்று நிமிடங்கள் கடைப்பிடிக்க மேயர் உத்தரவிட்டிருந்தது, மே 13இல் முயற்சிக்கப்பட்டபோது, நீண்ட நேரமாகத் தோன்றியதால், இரண்டு நிமிடங்களாக மாற்றப்பட்டது. அதே சமயம் 1916இலிருந்தே, கேப்டவுனின் சில தேவாலயங்கள் அவ்வப்போது, இந்த மவுனம் கடைப்பிடிப்பதைச் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. 1918இல் முதல் உலகப்போரின் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நேரமான நவம்பர் 11, காலை 11 மணிக்கு, இரண்டு நிமிட மவுனம் கடைப்பிடிப்பது, 1919இலிருந்து இங்கிலாந்திலும், காமன்வெல்த் நாடுகளிலும் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30, இந்தியாவில் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு, காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மவுனம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய பெண்கள் தினம் இன்று(National Women’s Day)( 13 பிப்ரவரி ) இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவின் பிறந்தநாளான இன்றைய தினத்தை இந்தியாவில் தேசிய பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம்

ஜான் ஹன்டர் எனும் இணையற்ற மருத்துவ வல்லுநர் பிறந்த தினம் இன்று(1728). இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் சகோதரரால் அனாடமியில் ஆர்வம் கொண்டார் . இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது . தூக்கில் தொங்கவிடப்பட்ட பிணங்கள் கிடைத்தால் உண்டு . அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள் செய்வார்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு பிணத்திற்கே பல பேர் காத்திருப்பார்கள் இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம்.பார்த்தார்.பிணங்களை கல்லறையில் இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். . அப்படித்தான் உணவுச்செரிமான மண்டலத்தை பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார் . இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கை பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே இன்னொருவருக்கு பொருத்துவார்கள் ; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய காலத்தில்,எவ்வளவு சீக்கிரமாகவும், பிரெஷ்ஷாகவும் பற்கள் பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் என சொன்னார் . பல்லாயிரகணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம் செய்து பாடம் பண்ணி வைத்தார்.அதுவே வருங்காலத்தில் மிகப்பெரும் அருங்காட்சியகம் ஆனது.போர்க்களத்தில் வீரர்களை காயங்களில் இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம் ; அதற்காக காயம் பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள் அம்முறை தவறென்று சொல்லி அதனால் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் என சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை மாற்றினார். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன . கொனேரியா மற்றும் சிபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்தவறாக நம்பிய இவர்,சிபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில் செலுத்திக்கொண்டார் ;இவர் நேரம் கொனேரியா கிருமியும் கூட ஊசியில் உட்கார்ந்து இருந்திருக்கிறது.இரு நோயால் அவதிப்பட்ட பொழுதும் உண்மையை நிறுவி விட்டதாக பூரித்தார் .சீக்கிரமே மரணமடைந்தார் . அறிவியல் அறுவை சிகிச்சையின் நிறுவனர் என கருதப்படுகிறார் இவர் மனிதகுல உய்வுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஹண்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *