பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!

பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது. முன்னதாக இன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கும் தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். இதன்படி பழனி வரக்கூடிய திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பாதயாத்திரையில் வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியபடி ஆடியும், பாட்டு பாடியும் பக்தர்கள் வந்தனர். பழனி வந்த பின்பு சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து திருஆவினன்குடி, பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசலை கட்டுப்படுத்த அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதன்படி கோவில் செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு நினைவரங்கம், யானைப்பாதை வழியாக சென்றனர். கோவிலில் தரிசனம் முடிந்த பின்பு படிப்பாதை வழியாக கீழே இறங்கினர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அடிவாரத்தில் இருந்து பகுதி, பகுதியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையே பழனிக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.

பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை இன்னும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் அனைத்து துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக பழனிக்கு வரும் பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திருச்சி, திண்டுக்கல், தேனி, கோவை, ஈரோடு, மதுரை என அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் காரணமாக நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட பஸ்நிலையத்தில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டது. எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட பஸ்நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், ஊட்டி பகுதிக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டது. பழனி வ.உ.சி. பஸ்நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கோவை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் இயங்கின.

பழனியில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் உதவி மையங்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் தனியார் அமைப்பினர் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாத சிகிச்சை அளித்தனர். அதன்படி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாத மசாஜ், சளி, காய்ச்சல் இருமலுக்கு இயற்கை மருந்துகளும் வழங்கப்பட்டது.

பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக சாலை நெடுகிலும் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்கள் வழங்கப்பட்டன. பழனி தைப்பூச திருவிழாவையொட்டி கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!