உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகல்..!

 உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகல்..!

அமெரிக்காவின் 47-வது அதிபராக நேற்று டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் பதவியேற்பதற்கு முன் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை அதிபராக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

டொனால்டு டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதனை தொடர்ந்து அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும் என்றும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள உலக சுகாதார மையம் தவறிவிட்டதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல்வேறு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...