எமர்ஜென்சி’ படம் ரிலீஸில் சிக்கல்..!

 எமர்ஜென்சி’ படம் ரிலீஸில் சிக்கல்..!

எஸ்ஜிபிசி எதிர்ப்பினால் பஞ்சாபின் பல பகுதிகளில் ‘எமர்ஜென்சி’ படம் திரையிடப்படவில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

‘எமர்ஜென்சி’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல சிக்கல்களை தாண்டி கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படம் நேற்று வெளியானது.

எஸ்ஜிபிசி தலைவர் ஹரிந்தர் சிங் தாமி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எமர்ஜென்சி படத்தை பஞ்சாபில் தடை செய்ய வேண்டுமென கடிதம் எழுதினார். எஸ்ஜிபிசி எதிர்ப்பினால் பஞ்சாபின் பல பகுதிகளில் எமர்ஜென்சி படம் திரையிடப்படவில்லை. பல திரையரங்குகளின் அருகில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இது குறித்து கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில், ” பஞ்சாபில் பல பகுதிகளில் ‘எமர்ஜென்சி’ படத்தை திரையிட அனுமதிக்காதது கலை, கலைஞர்களை முற்றிலும் துன்புறுத்தும் செயலாகும். எனக்கு எல்லா மதங்களின் மீதும் மரியாதை இருக்கிறது. சண்டிகரில் வளர்ந்ததால் நான் சீக்கிய மதத்தை மிக அருகில் இருந்து கவனித்தும் பின்பற்றியும் வந்திருக்கிறேன். இது எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும் எனது படத்தை களங்கப்படுத்தவும் மேற்கொள்ளும் பொய்யான பிரச்சாரம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் கடந்தாண்டு மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வென்றார். சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதால் ‘எமர்ஜென்சி’ படம் வெளியாகக் கூடாதென பலரும் கருத்து தெரிவித்த நிலையில் கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு பேசுபொருளாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...