சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு அறிவிப்பிற்கான காரணம்..!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகித்தார். இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதில் அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் மட்டுமே அஸ்வின் விளையாடினார். அதிலும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி (3-வது போட்டி) டிராவில் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அறிவித்தார். இது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.
சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரிய அவர் ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்நிலையில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் அல்லது சிட்னி போட்டியில் அஸ்வின் விளையாடுவதற்கான சூழல் இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பை அவசரத்தால் ஓய்வு பெற்று அஸ்வின் தவற விட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். அதனாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
“தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அஸ்வின் பாதியில் இப்படி முடிவெடுத்தது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. சிட்னி அல்லது மெல்போர்னில் அஸ்வின் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனெனில் அங்கே ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால் அவருடைய முடிவை நாம் மதிக்க வேண்டும். நன்கு சிந்தித்து கவனத்துடன்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். பெரிய பவுலரான அவருக்கு நான் சல்யூட் செய்கிறேன். மேட்ச் வின்னிங் பவுலரான அவர் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அவருடைய வருங்காலத்திற்கு வாழ்த்துகள்.
எனக்கு கிடைத்த தகவல் படி இந்தியா அடுத்ததாக 2025 அக்டோபரில்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உண்மையில் இவ்வளவு சாதனைகளை செய்துள்ள நீங்கள் இங்கிலாந்து தொடரில் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு கூட வாய்ப்புள்ளது.
மேலும் தன்னுடைய இடத்தில் இனிமேல் வாஷிங்டன் சுந்தருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அஸ்வின் கருதுகிறார். இங்கிலாந்தில் 2 ஸ்பின்னர்கள் மட்டுமே இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இது போன்ற விஷயங்கள்தான் அஸ்வின் மனதில் ஓய்வு முடிவை எடுக்க வைத்திருக்கலாம். ஆனால் இது அவருக்கு எளிதாக இருந்திருக்காது என்று என்னால் சொல்ல முடியும்” என கூறினார்.