இன்றைய முக்கிய நிகழ்வுகள் (16.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (16.12.2024)

விஜய் திவாஸ் வெற்றி தினம்

ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தை பாகிஸ்தான் ராணுவம் பிடியில் இருந்து இந்தியா கைப்பற்றியது. இந்த தினத்தை வருடா வருடம் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானுடன் கடந்த 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியை ஆண்டுதோறும் டிச. 16ஆம் தேதி ‘விஜய் திவாஸ் தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் வலிமையை இந்த உலகிற்கு உணர்த்திய நாள். அந்த நாளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக் கென ஒரு தனி மதிப்பு, அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.

கப்பல் தேயிலையைக் கடலில் கொட்டிய போராட்டம் நடைபெற்ற நாள்

773 – பாஸ்டன் தேனீர் விருந்து என்றழைக்கப்படுகிற, கிழக்கிந்தியக் கம்பெனியால் அனுப்பப்பட்ட, ஒரு கப்பல் தேயிலையைக் கடலில் கொட்டிய போராட்டம் நடைபெற்ற நாள் டிசம்பர் 16. ஐரோப்பியர்களுக்கு 17ஆம் நூற்றாண்டில் தேனீர் அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு தேயிலையை இறக்குமதி செய்யும் தனியுரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனி பெற்றிருந்த நிலையில், மற்ற நாடுகளுக்குப் போட்டியாளர்கள் சீனாவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்து வந்தனர். 1767 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் தேயிலைக்கு 25 சதவீத வரியை வசூலித்து வந்த இங்கிலாந்து, அதன்பின் கூடுதல் வரிகளை விதித்தது. டச்சுக் குடியரசு தேயிலைக்கு வரிவிதிக்காததால், அமெரிக்காவிலிருந்த இங்கிலாந்துக் குடியேற்றங்களில், கடத்தப்பட்ட டச்சுத் தேயிலை மிக மலிவாகக் கிடைத்தது. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆண்டுக்கு 4 லட்சம் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது. 1770இல் இந்தியாவில் ஏற்பட்ட வங்கப் பெரும் பஞ்சமும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதிநிலையை மிக மோசமாக்கியதால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவுவதற்காகவே, இங்கிலாந்து அரசு, 1773 மே 10 அன்று தேயிலைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டம், அதற்கு முன்புவரை, மற்ற நிறுவனங்களுக்குத்தான் தேயிலையை விற்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியை, அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு நேரடியாக தேயிலையை விற்க அனுமதித்ததுடன், வரிச் சலுகையும் அளித்தது. தேயிலையின் விலை குறைந்தாலும், ஏற்கெனவே, பாராளுமன்றத்தில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாததால், தங்கள் மீதான வரிவிதிப்பை எதிர்த்து வந்த அமெரிக்க ஆங்கிலேயர்களை, மறைமுகமாக டவுன்ஷெண்ட் வரிகளை ஏற்கச் செய்யும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது. பாஸ்டன் போராட்டத்துக்கு பதிலடியாக ‘கட்டாயச் சட்டங்களை’ இயற்றி, தண்டனை அறிவித்தது இங்கிலாந்து. இதைத் தொடர்ந்து, 1775இல் அமெரிக்க விடுதலைப் போராட்டம் வெடித்தது. குடியேற்றங்களுக்கான வரிவிதிப்புச் சட்டம் 1778 என்பதை இயற்றி, தேயிலை மீதான வரி உட்பட பல வரிகளை இங்கிலாந்து நீக்கினாலும், அதனை அமெரிக்க ஆங்கிலேயர்கள் ஏற்க மறுத்து, 1783 வரை போராடி இங்கிலாந்தின் ஆட்சியை முழுமையாக அகற்றினர்.

நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசர் நினைவு நாள்

வரலாற்றில் இன்று ( டிசம்பர் 16) நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசர் நினைவு நாள். பனகல் மாளிகை பனகல் பூங்கா பெயரினை பார்த்து வருகிறோம். யார் இந்த பனகல்? *பனங்கன்டி ராமராய நிங்கார் என்ற இவர் சென்னை மாகாண முதலமைச்சராக 11.07.1921 முதல் 03.12.1926 வரை பதவி வகித்தார்.

வழக்கறிஞரான பனகல், நிலச்சுவான்தார். 1912 ல் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர், பின்னர் நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டார். நீதிக்கட்சியில் முக்கியமான பொறுப்பு வகித்தார்.

கடலூர் சுப்பராயலுவுக்குப் பின்னர் முதல்வரானார்.

இவரது ஆட்சியிலேதான் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டு கோடிக்கணக்கான கோவில் சொத்துக்கள் அரசின் வசம் நிர்வகிக்கப்பட வகை செய்யப்பட்டது.

அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

*தாழ்த்தப்பட்ட மக்களை இழிவான பெயரில் அழைத்ததை மாற்றி ஆதிதிராவிடர் என்று அழைக்க ஆணையிட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைத்தார்.

சென்னையை விரிவு படுத்தினார். இப்போதுள்ள தியாகராயர் நகர் இவரின் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

இரண்டு முறை முதல்வராக இருந்த இவர் 1926ல் நடந்த தேர்தலில் தோற்றார். சுயராஜ்ய கட்சி ஆட்சியமைக்க மறுத்ததால் கவர்னர் கோஷன் ஆட்சி அமைக்க அழைத்தபோது,சிறுபான்மை அரசமைக்க முடியாது என்று மறுத்தார். இதனால் டாக்டர் சுப்பராயன் முதல்வரானார்.

பழகுவதற்கு ஓர் பனகல் என்று நண்பர்களால் பாராட்டப்பட்டவர்.

பரந்து விரிந்த சென்னை உருவாக காரணமான பனகல் ராஜா நினைவாகவே பனகல் மாளிகை, பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பண்பாளர் பனகல் அரசர் வாழ்க

மும்பை தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் திறக்கப்பட்ட நாள்

1903 – உலகப் புகழ்பெற்ற மும்பை தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் திறக்கப்பட்ட நாள் டிசம்பர் 16. அக்கால பம்பாயின் மிகப்பெரிய ஓட்டல்களில் ஒன்றான வாட்சன்’ஸ் ஓட்டல் வெள்ளையருக்கு மட்டும்தான் என்று கூறி, ஜெம்ஷெட்ஜி டாட்டாவிற்கு அனுமதி மறுத்ததால் அவர் இந்த ஓட்டலைக் கட்டினார் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், அதற்கு ஆதாரங்கள் இல்லை. அத்துடன், இந்த ஓட்டலே வெள்ளையர்கள், அக்கால அரசர்கள் ஆகியோரைத்தான் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தது என்பதால், அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. பம்பாயின் மதிப்பை உணர்த்தும் வகையில் ஒரு விடுதி வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் கூறிய ஆலோசனையின்படி டாட்டா இதைக் கட்டியதாகக் கூறப்படுவதே நம்பக்கூடியதாக உள்ளது. சீத்தாராம் கண்டேராவ் வைத்யா, டி.என்.மிர்சா என்ற இந்தியக் கட்டிடக்கலை வல்லுனர்களே இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தனர். வைத்யா இறந்துவிட்டதால் டபிள்யூ.ஏ.சேம்பர்ஸ் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதைக் கட்டும் பணியைச் செய்தாலும், கட்டிடத்தின் குவிமாடத்தைப் பெரிதாக்கியதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரரான கான்சாகேப் ருத்தோன்ஜி, இக்கட்டிடத்தின் நடுவிலமைந்துள்ள புகழ்பெற்ற மிதக்கும் படிக்கட்டை வடிவமைத்தார். (படியைத் தாங்கும் அமைப்புகள் அதிகம் வெளியில் தெரியாமல் அமைக்கப்படுபவை மிதக்கும் படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.) அறைகள் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கவேண்டும் என்ற டாட்டா விருப்பத்தின்படி கட்டப்பட்டதால், இக்கட்டிடம் நகருக்கு எதிர்ப்புறமாகத் தவறுதலாகக் கட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதுண்டு! 604 அறைகள் கொண்ட இவ்விடுதியைக் கட்ட இன்றைய மதிப்பில் சுமார் ரூ.285 கோடி செலவானது. மின்சாரம், அமெரிக்க மின்விசிறிகள், நீராவியால் இயங்கிய ஜெர்மானிய லிஃப்ட், துருக்கிய குளியல் தொட்டிகள், ஆங்கிலேய சமையல்காரர்கள், நாள் முழுவதும் இயங்கும் உணவகம், குளிரூட்டப்பட்ட நடன-கூட்ட அரங்கு, டிஸ்க்கொதே ஆகியவற்றை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்திய விடுதி இதுதான். பம்பாயில் உரிமம் பெற்ற மது பார் தொடங்கிய முதல் விடுதியும் இதுதான். இது கட்டப்பட்டு 21 ஆண்டுகள் கழித்துத்தான், இதனருகில் இந்தியா கேட் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது இது மருத்துவமனையாகச் செயல்பட்டது. இதன் விரிவாக்கமாக அருகிலுள்ள டவர் என்பதை 1973இல் கட்டிய டாட்டா குழுமம், அதன்பின்னரே விடுதித் தொழிலில் கவனம் செலுத்தத்தொடங்கி, இன்று இந்தியாவில் 84ம், பிற நாடுகளில் 16மாக 100 ஓட்டல்களைக்கொண்டுள்ளது!

வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) பிறந்த தினம்

வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) பிறந்த தினம் இன்று டிசம்பர் 16.1770. ! பீத்தோவனை உலகம் வியந்து போற்ற ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. தன் குறைபாட்டை நினைத்து மிகவும் நொந்துபோன பீத்தோவன் தற்கொலைக்குகூட முயன்றிருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. கண் தெரியாத ஒருவர் அழகான ஓவியம் தீட்ட முடியும் என்பதை எப்படி நம் மூளையால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல்தான் காது கேளாத ஒருவரால் அற்புத இசையை பிரசவிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசைக்குத் தேவையான புலனே செவிகள்தானே! ஆனால் அதைத்தான் செய்து காட்டினார் அந்த அதிசய மனிதன். ஆம் முழுமையான நிசப்த உலகில் வாழ்ந்து கொண்டே பல அமர படைப்புகளை உருவாக்கினார் பீத்தோவன்..! காது கேளாமல் போனபோது தன்னம்பிக்கையின் அடி மட்டத்தைத் தொட்டாலும் ஒரு கால் நூற்றாண்டு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் பீத்தோவன்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...