உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றார் தமிழக வீரர் “குகேஷ்”..!

 உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றார் தமிழக வீரர் “குகேஷ்”..!

போட்டி டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குகேஷ் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்று வந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இறுதி சுற்றில் வெற்றி காணும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவார். இதுவும் டிராவில் முடிந்தால், அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்க அதிவேகமாக காய்களை நகர்த்தும் சுற்று அடங்கிய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.

இத்தகைய சூழலில், போட்டி இன்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. குகேஷ் வெற்றி பெறுவது கடினம் என்றும், போட்டி டிராவை நோக்கியே செல்லும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் ட்ங் லீரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள்ல் குவிந்து வருகின்றன. வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...