தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை:
நடிகர் ரஜினி மனு மீது ஆணையம் இன்று முடிவு….!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என ஒரு நபர் ஆணையக்குழுவிடம் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு தரப்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார்.
இந்த விசாரணையில் ஆஜராக பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டம் குறித்து சென்னை விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்தை நேரில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஒரு நபர் ஆணையத்தில் வரும் 25ஆம் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு வேலைகளில் இருப்பதால் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதிலிருந்து விலக்கு அளிக்கும்படி அவரது வழக்குரைஞர் மூலம் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு சனிக்கிழமை மனு அனுப்பினார்.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை திங்கள்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பட்டது. மேலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் ரஜினியின் மனு மீது ஆணையம் முடிவு செய்யவுள்ளது.