இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.12.2024)
ராமசாமி ராமநாதன் செட்டியார் நினைவு தினம் இன்று
ராமசாமி ராமநாதன் செட்டியார் (30 செப்டம்பர் 1913 – 12 டிசம்பர் 1995) இந்திய தொழிலதிபர், அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.
ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தாா். அவர் 1948 முதல் 1952 வரை சென்னை மாநகரில் ஒரு அவை உறுப்பினராக பணியாற்றினார். 1950 இல், ராமநாத செட்டியார் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வருடம் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் இந்திய பாராளுமன்றத்திற்கு ராமநாதன் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-1967 காலகட்டங்களில் கரூர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குநராக ராமநாதன் செட்டியார் இருந்தார்.[1] இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்புக் குழுவின் உறுப்பினராகவும், இந்திய கைவினை அபிவிருத்திக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். ராமநாத செட்டியார் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 82 வயதில் இறந்தார்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் ராமநாதன் மண்டபம் அவருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகராக டெல்லி மாறிய தினம் இன்று.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
ஐரோப்பியரின் வருகைக்கு முன்னதாக முறையாக கட்டமைக்கப்படாத இந்தியாவே இருந்து வந்தது. பல மாகாணங்கள், சமஸ்தனங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவுக்கு 18-ம் நூற்றாண்டுகளில் வந்த பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைமையிடமாக நிர்ணயித்தனர்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து பின்னர் காலம் பிரிட்டன் அரசின் கீழ் இந்தியா வந்த பின்னரும் கொல்கத்தாவே தலைநகராக நீடித்தது.
1911-ம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920-ம் ஆண்டுகளில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே, புதுடெல்லி என பெயர் பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947-ல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்திய பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை என பிரசித்தி பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் புது டெல்லியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக மும்பையும், மருத்துவ தலைநகரமாக சென்னையும், அறியப்படுகிறது.
நடிகை சௌகார் ஜானகி (Sowkar Janaki) பிறந்த நாள் இன்று
தென்னிந்தியத் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகை சௌகார் ஜானகி (Sowkar Janaki) பிறந்த நாள் இன்று (டிசம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
l வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். வானொலி நாடகத்தைக் கேட்ட சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார். இதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.
l கணவருடன் விஜயவாடாவில் வசித்தார். அவர் வேறு நல்ல வேலை தேடி, சென்னைக்கு வந்தார். சினிமா ஆசை துளிர்த்ததால் இவரும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். தன் தம்பி நாகிரெட்டியிடம் அவர் சிபாரிசு செய்தார்.
l விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இதனால் ‘செளகார் ஜானகி’ ஆனார்.
l மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
l ‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.
l தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க் கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
l எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்தவர். 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.
l சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
l ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாக பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்பார். 85-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் செளகார் ஜானகி இன்றும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.
கவிஞர் ஆலங்குடி சோமு பிறந்த தினம் டிசம்பர் 12 ,1932.
ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 – 6 சூன் 1990) தமிழ்த் திரைப்படபாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 – 1974 பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் ,
காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக “ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்” என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை
ஆலங்குடி சோமு [பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர்]
தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக் காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.
1932-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் திகதியன்று பிறந்தவர். திரைக்கதை எழுதவேண்டுமென்ற ஆவலோடு திரையுலகை நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த தேவர் இப்படத்திற்குப் பாடல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ஆலங்குடி சோமு எழுதிய முதற்பாடல் 1960-இல் வெளிவந்த ‘’யானைப்பாகன்’’ திரைப்படத்தில் ஏ.எல்.இராகவனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய ’ஆம்பளைக்குப் பொம்பளை அவசியந்தான்’’ என்ற பாடல். இஃது ஓர் நகைச்சுவைப் பாடல். படத்தில் இப்பாடல் காட்சியில் நகைச்சுவைச் செம்மல் குலதெய்வம் ராஜகோபாலும் மனோரமாவும் நடித்திருந்தனர். பாடலும் வெற்றியைப் பெற்றது.
1961-இல் ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ படத்துக்காக ’கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்’, 1963-இல் ‘கலையரசி’ படத்தில் ’நீல வானப் பந்தலில்’, ’காஞ்சித் தலைவன்’ படத்தில் ‘அவனியெல்லாம் புகழ் மணக்கும் அம்மன் அருள்’, பி.பானுமதி பாடிய ’மயங்காத மனம் யாவும் மயங்கும்’ போன்ற பாடல்கள் ஆலங்குடியாரின் பிரபலமான பாடல்களாகும்.
அமரகவி தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தினம் இன்று.
நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்பணித்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ். நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். அவரது பிறந்த தினம் இன்று.
நம் நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்ப்பணித்த தியாகிகளில் குறிப்பிடத் தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ். தன்னுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்துமே நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். அந்த வீரத் தியாகி அமரகவி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் இன்று, ஜூன் 16.
தியாகி விஸ்வநாததாஸ் 1886-ஆம் ஆண்டு ஜூன் 16-ல் அன்றைய ஒருங்கிணைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் சிவகாசியில் மருத்துவர் குடும்பத்தில் பிறந்தார். அவரது முன்னோர்கள் மருத்துவத் தொழிலைப் பரம்பரையாக செய்து வந்தனர். பெற்றோரிட்ட பெயர் தாசரிதாஸ். சிறுவயதிலேயே இசை, நாடக, நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டார்.
சிவகாசியிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் எங்கெல்லாம் நாடகம், கூத்து நடக்கிறதோ, அங்கெல்லாம் தொலைவைப் பொருட்படுத்தாமல் அவற்றைப் பார்க்கச் சென்றுவிடுவார். நாளடைவில் நாடக அரங்கமே அவரின் கல்விக்கூடமாகியது. நாடகக்கலையில் தேர்ந்து சிறப்பினைப் பெற்றார்.
அந்த காலகட்டத்தில் நாடக கலைக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள், “நாடக உலகின் இமயமலை“ என்றும் சிறப்பிக்க பட்டவர். தாசரிதாஸ் என்ற விஸ்வநாதனின் ஆர்வத்தைக் கண்டார். நல்ல குரல் வளம், நடிப்பில் திறமை, வரலாற்று அறிவு ஆகியவற்றைப் பாராட்டினார். அவரின் திறமையை வெளிக்கொண்டுவர நாடகத்தில் அறிமுகப்படுத்தினார் சங்கரதாஸ் சுவாமிகள்.
நடிப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் பல வித்தியாசமான வேடங்களில் பெண்ணாகவும், ராஜபார்ட்டாகவும் நடித்தார் விஸ்வநாததாஸ். வேடத்திற்குத் தக்க குரலும் உடல் மொழியும் இயல்பாகவே இருந்தது. இவருக்கென ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது .
1911-ஆம் ஆண்டு துாத்துக்குடிக்கு காந்தி வருகை தந்தார். அப்போது நாடக மேடையொன்றில் பாடிய பாடல் மக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது. பெரும் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்திழுக்கும் விஸ்வநாததாஸ் திறமையைக் கண்டு வியந்த காந்தி அவரைச் சந்தித்துப் பாராட்டினார்.
“உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தாய்நாட்டின் சுதந்திர பணியில் உன்னை அர்ப்பணித்துக் கொள்” என்று காந்தி அறிவுறுத்தினார். தன்னுடைய இசைத் தமிழாலும், நாடகத் தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்த விஸ்வநாததாஸ் மேலும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.
தான் மேடையேறும் ஒவ்வொரு நாடகத்திலும் தேச விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினார். நாடகம் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள் மனதிலும் தன்னுடைய நடிப்பாலும், கம்பீரமான குரல் வலிமையாலும் தேசபக்தியைப் புகுத்தினார் விஸ்வநாததாஸ்.
தேசபக்தியுள்ள நல்ல நடிகரான விஸ்வநாததாஸ், ரசிகர் மன்றத்தை முறைப்படுத்தினார். சுய நலத்திற்காகவோ, சுய லாபத்திற்காகவோ அந்த ரசிகர் மன்றத்தை அவர் தொடங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தன்னுடைய பெயரில்கூட அந்த சங்கத்தைத் தொடங்கவில்லை.
அவரது சிந்தனை, சொல், செயல் எல்லாம் நாட்டின் நலனைப் பற்றித்தான் இருந்தது. எனவே அந்த வீரத்தியாகி விஸ்வநாததாஸ் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1938ம் ஆண்டு துவக்கினார்.
இந்த சங்கத்தின் தலைவராக வீரத்தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸும் பொருளாளராக தியாகி ஜி.வெங்கிடாத்திரி நாயுடுவும் செயலாளராக எஸ்.வி.சுப்பிரமணியன் மற்றும் எ.சிதம்பரம் ஆகியோரும் செயல்பட்டனர்.
நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்க தீவிரவாதம், மிதவாதம் என இரு வேறு சித்தாந்தங்கள் உருவாகின. இரு பெரும் தலைவர்கள் தலைமையில் அணி சேர்ந்தனர். ஆயுதப்படைகளுடன் போராடிய சுபாஷ் சந்திர போஸின் வீரத்தைப் பறைசாற்றிடும் வகையில் சுபாஷ் என்ற பெயர் முதலாவதாகவும், அஹிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிய காந்தியடிகளின் வீட்டில் அழைக்கும் பாபுஜியை என்ற பெயரில் பாபு என்ற பெயரை இரண்டாவதாகவும் இணைத்து ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்பதை துவக்கினார்.
இந்த இடத்தில் அவருடைய சிந்தனையை ஆராய்ந்து பாருங்கள்.. எந்த குறுகிய நோக்கமும் இல்லாமல் பரந்த தேசிய சிந்தனை கொண்டு செயல்பட்டது நன்கு புலப்படும். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தீரர் சத்தியமூர்த்தி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரிடம் மிகவும் நெருங்கிப் பழகிய விஸ்வநாததாஸ், வீரம் மற்றும் விவேகத்துடன் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட இந்த சங்கத்தை துவக்கினார். இந்த சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேரடி உறுப்பினர்களாகவும், ஆயிரக்கணக்கானோர் மறைமுகத் தொண்டர்களாகவும் இணைந்துள்ளனர்.
இவருக்குப் பக்கபலமாக திருமங்கலத்தைச் சேர்ந்த ஜி.வெங்கிடாத்திரி நாயுடு, எஸ்.வி.சுப்பிரமணியன், எ.சிதம்பரம், ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன், நாடக நடிகர் சங்க அருணாச்சலம், சுவாமி நித்தியானந்த அடிகள் போன்றோர் இருந்துள்ளனர்.
இந்த சங்கத்தின் பின்னணியில் தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பல்வேறு அமைப்புகள், தனிமனிதர்கள், கூட்டணிகள், தொண்டர் படைகள், மன்னர்கள், ஜமீன்தார்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் களம் கண்டிருந்த நிலையில், இந்திய தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்துக் கட்டுக்கோப்பான தொண்டர் படைகளைக் கொண்டு போராடியது இந்த சங்கம்.
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது. அந்நியப் பொருள்களை வாங்காமல் சுதேசிப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மேடைகளில் முழங்கியதைக் கேட்டு, தான் நடித்த ஒரு நாடகத்தில் “அந்நியத் துணிகளை வாங்காதீர் உள்நாட்டுத் துணிகளை வாங்குவீர்…” எனப் பாடினார்.
அவரது பாடலால் மக்களுக்கு சுதேச உணர்வு மேலிட்டது. பார்வையாளர் ஒருவர், தான் அணிந்திருந்த அந்நியத் துணியைக் கழற்றி மேடையிலேயே தீ வைத்து எரித்தார். இதனைக் கண்ட விஸ்வநாததாஸ் தனது கதராடையை அவரிடம் தந்து அணியச் செய்தார்.
1938ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் மற்றும் ஆங்கிலேயர் அடக்குமுறைகளை எதிர்த்து திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது சங்கத்தின் மதுரை தொண்டர் படையுடன் திருமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரமும், ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியனும் போராடுவதற்காகச் சென்றனர். அதில் கைதாகி சிறையிலிருந்த ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன் சிறையிலேயே நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தார்.
புராண நாடகத்தின் இடையே, சம்பந்தமே இல்லாமல், ஆங்கிலேயர்களை, சிலேடையாகவும், சமயங்களில் நேரடியாகவும் தாக்கி வசனம் பேசுவார். புராணம், சரித்திரம் என எந்த நாடகமாக இருந்தாலும் தேசபக்தி பாடல்களைப் பாடும்படி மக்கள் விஸ்வநாததாஸிடம் கேட்க ஆரம்பித்தனர்.
நெல்லையில் வள்ளி திருமண நாடகத்தில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடலைப் பாடுகிறார் விஸ்வநாததாஸ். முடிவில் மேடைக்கு வந்த போலீஸ் ஆங்கில அரசுக்கு எதிராகப் பாடியதால் உங்களைக் கைது செய்கிறோம் எனக் கூறினார்கள். யாருக்கு வாரண்ட் எனக் கேட்க விஸ்வநாததாசுக்கு என காவலர்கள் பதிலளித்தனர். இந்தப் பாடலைப் பாடியது நான் இல்லை; முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் வந்து பாடினார், எனவே முருகப்பெருமான் பேரில் வாரண்ட் கொண்டு வாருங்கள் என்று விஸ்வநாததாஸ் கூறியதும், குழம்பிப் போயினர் காவலர்கள். மிகவும் சாமர்த்திய கலைஞர் விஸ்வநாததாஸ். ஒவ்வொருமுறை அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனே வார்த்தைகளைக் கண்காணித்தது ஆங்கில அரசு.
சண்முகானந்தம் குரூப் என்ற நாடகக் கம்பெனியை நிறுவி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டார்.
வள்ளி திருமண நாடகம் அவரது நாடகத்தில் முக்கியமானது, அதில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடல் மிக முக்கியமானது. முருகப் பெருமான் – வேடனாக நடிக்கும் விஸ்வநாததாஸ் தாய் நாட்டைக் கொள்ளையடிக்கும் வெள்ளையனைப் பற்றி கொக்கு பறக்குதடி பாடலில் இரு பொருள்படும்படி வெள்ளையனை இடித்துரைப்பார்.
”கொக்கு பறக்குதடி பாப்பா – நீயும்கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்கு கொக்கு –அது நம்மைகொல்ல வந்த கொக்கு வர்த்தகம் செய்ய வந்த கொக்கு -நமது வாழ்க்கையைக்கெடுக்கவந்த கொக்கு! அக்கரைச் சீமைவிட்டுவந்து – இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா!”
கொக்கு அந்த வெள்ளை கொக்கு என்று பாடியவுடன் எழுந்த பாமர மக்களின் கைதட்டல்களால் அரங்கம் அதிரும், கோஷங்கள் முழங்கும் .
பிரிட்டிஷ் அதிகாரிகள் வெறுப்படைந்தனர். பாடல்கள், காவல்துறையின் நெஞ்சைத் துளைத்தது. விஸ்வநாததாஸ் மேடைகளில் தொடர்ந்து ராஜத் துரோக பாடலைப் பாடி வருகிறார். அவ்வாறு பாடுவதை அவர் நிறுத்த வேண்டும், இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக் கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.
எதற்கும் அஞ்சாமல், “போலீஸ் புலிக்கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்” என்று பாடி ஆங்கில அரசை அதிர வைத்தார். இதனால் விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவரின் மூத்த மகன் சுப்பிரமணிய தாஸ் மேடைகளில் தேசபக்திப் பாடல்களைத் தொடர்ந்து பாடினார். மகனையும் கைது செய்தனர்.
அப்பொழுதுதான் திருமணமாகியிருந்த சுப்பிரமணியதாஸிடம், “இனிமேல் தேச விடுதலை பற்றி எந்த மேடையிலும் பேச மாட்டேன், பாட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் உன்னை விடுதலை செய்கிறோம்” என்றனர் ஆங்கில அதிகாரிகள். தனது தந்தையிடம் இது பற்றிக் கருத்து கேட்டபோது கோபத்தோடு வெடித்த விஸ்வநாததாஸ், “மகனே! நீ மன்னிப்புக் கேட்டு மானமிழந்து மனைவியுடன் வாழ்வதைவிட சிறையிலேயே மாவீரனாகச் செத்துவிடு” என்று கடிதம் அனுப்பினார்.
இந்த தேசத்தின் விடுதலைக்காக கிராமங்கள்தோறும் தேசபக்தி மணம் பரப்பி போராடியவர், அதற்காக இருபத்தொன்பது முறை சிறைச் சாலை சென்றார். அவருக்கு 52 வயது ஆகிவிட்டாலும் நாடகத்தில் எழுச்சியூட்டும் நாயகனாகவே விளங்கினார், 1940, டிசம்பர் இறுதியில் விஸ்வநாததாசின் நாடகத்தை சென்னையில் ஐந்து நாள்கள் நடத்த ஏற்பாடு செய்தனர். அவரின் நாடகத்தைக் காண சென்னை வால்டாக்ஸ் சாலையிலே உள்ள ராயல் தியேட்டர் அரங்கில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் அரங்கேறியது. புராண நாடகமாக அதில் வெள்ளையனை எதிர்த்து கருத்துகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் விஸ்வநாததாஸ் பேசும் அந்த வசனங்களுக்காகவே, மக்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
வள்ளி திருமண நாடகத்தில், முருகனாக நடித்தார். மயில் மேல் அமர்ந்து கொண்டு, “கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி” என்று பாடினார்.
அவர் பாடலைத் தணிக்கை செய்யவும், அவர் பாட தடை விதிக்கவும், ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தார்கள். நாடகம் முடியட்டும், அவரைக் கைது செய்யலாம் என்றிருந்தார்கள். முருகன் வேடமிட்ட தாஸ், ஆவேசமாக, அரக்கர்களை ஏசுவதைப் போல, ஆங்கிலேயர்களை வசை பாட ஆரம்பித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது.
அடுத்த நிமிடம், ஆரவாரம் அடங்கியது. முருகன் அப்படியே மயில் மேல் சிலையாக இருந்தார். ஆம்! மயில் மேல் அமர்ந்து தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் உயிர் பிரிந்தது.
டிசம்பர் 31, 1940… அந்த நாடகத்திலேயே, அவர் உயிரும் பிரிந்துவிட்டது. “என் உயிர் நாடக மேடையிலேயே போக வேண்டும்” என்ற அவரது விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றி வைத்து விட்டார்.
1941-ஆம் ஆண்டின் துவக்கம், ஜனவரி 1-ஆம் தேதி மக்கள் வெள்ளத்தில் அவரது இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. 52 வயது வரை போராடி 29 முறை சிறைச்சாலை சென்றவர். தனது வாழ்நாளையும், திறமைகள் முழுமையும் தேசத்திற்கு அர்ப்பணித்த அமரகவி தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம்
ஆண்டு தோறும் டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு மனதான தீர்மானம் நிறைவேறிய நாள் டிசம்பர் 12. அதாவது அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு, சமூக நிலை, பாலினம், சாதி அல்லது மத வேறுபாடுகளின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதே சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு என்பதன் பொருள். மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் நோக்கம். அதில் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்க்கைப் பராமரிப்புகள் யாவும் அடங்கியுள்ளன. ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களால் தங்களுக்குத் தேவைப்படும் சுகாதார சேவைகளைப் பெற முடிவதில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் 1.50 கோடி பேர் வரை பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். 1 கோடி பேர் வரை வறுமைக்கோட்டிற்குக் கீழாக உள்ளனர். 2012 முதல் 2017 வரையிலான 12-வது திட்டக் காலத்தில் நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்க இந்தியா உறுதி எடுத்துக் கொண்டதாக்கும்.
சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பானது 1948-ம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சுகாதாரம் அனைவரின் அடைப்படை உரிமை என்பதும், எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.