ஒரேநாளில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று இரவு 11:38 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. கட்டிடங்களுக்குள் பல குண்டுகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், குண்டுகள் சிறியவை, ஆனால் யாருக்கும் தெரியாத அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
மின்னஞ்சலை அனுப்பியவர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய $30,000 கேட்டுள்ளார். இது கட்டிடத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தாது. ஆனால் வெடிகுண்டுகள் வெடிக்கும்போது பலர் காயமடைவார்கள். கட்டிடத்தில் இருப்பவர்கள் கை, கால்களை இழக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். டெல்லி போலீசார் ஐபி முகவரியை வைத்து, மின்னஞ்சல் அனுப்பியவரை தேடி வருகின்றனர்.
மிரட்டலையடுத்து தீயணைப்பு துறையினர், மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், உள்ளூர் போலீசார் ஆகியோர் பள்ளிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். ஆனால் சந்தேகிக்கும் படி எதுவும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.