ஏ பி டி வில்லியர்ஸ்: மிஸ்டர் 360 டிகிரி குறித்த 10 தகவல்கள்

 ஏ பி டி வில்லியர்ஸ்: மிஸ்டர் 360 டிகிரி குறித்த 10 தகவல்கள்
1. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 
2. வலது கை பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 டிகிரி என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.  தான் விளையாடிய காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக கருதப்பட்ட வீரர்களின் பந்துகளை மிக லாவகமாக சிக்ஸர்கள் விரட்டியவர்.

3. தென் ஆப்பிரிக்க அணிக்காக விக்கெட் கீப்பராக சிறிது காலம் பணியாற்றிய டிவில்லியர்ஸ், அணித்தலைவராகவும் பங்காற்றியுள்ளார். இவரது தலைமையில் 2015 உலகக் கோப்பையில் அரை இறுதி வரை விளையாடியது தென் ஆப்பிரிக்க அணி.  

4. ஒருநாள் போட்டிகளில் 16 பந்துகளில் 50 ரன்கள், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டிவில்லியர்ஸ். ஒருநாள் போட்டிகளில் 228 போட்டிகளில் விளையாடி 9,577 ரன்கள் குவித்தவர் டி வில்லியர்ஸ்.

5. டி வில்லியர்ஸ் டேனியல் ஸ்வார்ட் என்ற பெண்ணை காதலித்தார். 2012-ம் ஆண்டு  உலக அதிசயங்களில் ஒன்றான புகழ்பெற்ற தாஜ்மஹாலில் தனது காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ‘புரொபோஸ்’ செய்தார். அதற்கு அடுத்த ஆண்டே திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 

6. டி வில்லியர்ஸின் சிறு வயது ஹீரோ தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜாண்டி ரோட்ஸ். ” 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டைவ் அடித்து அபாரமான ரன் அவுட் செய்தார். எனக்கு அப்போது எட்டு வயதுதான், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அவரை போல ரன் அவுட் செய்ய பல முறை முயற்சி செய்திருக்கிறேன்.  ஜாண்டி ரோட்ஸ் எனக்கு நல்ல ஆசிரியர் மட்டுமல்ல நல்ல மனிதனும் கூட” என ஜாண்டி ரோட்ஸ் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் டி வில்லியர்ஸ். 

7. ஐபிஎல் மூலமாக இந்திய ரசிகர்களிடையே மிகப்பிரபலம் ஆனவர் டி வில்லியர்ஸ். முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியவர் பின்னர் ஐபிஎல்லின் நான்காவது சீசனில் இருந்து  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடத் துவங்கினார். 

8. கிறிஸ் கெயில் , டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஐபிஎல்லில் அதிக சதம் (3) விளாசியிருக்கிறார் டி வில்லியர்ஸ். ஐபிஎல்லில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150-க்கும் மேல். அதிக சிக்ஸர்கள்  அடித்தவர்கள் பட்டியலில் கெயிலுக்கு அடுத்தபடியாக 212 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது  இடத்தில் இருக்கிறார் டிவில்லியர்ஸ், மூன்றாவது இடத்தில் தோனி உள்ளார். 9. டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையும்  டி வில்லியர்ஸுக்கு உண்டு. 2011-ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில்  75 பந்துகளில் சதமடித்தார். அதிவேகமாக ரன்கள் குவிப்பது மட்டுமல்ல அணிக்கு தேவைபப்ட்டால்  தடுப்பாட்டம் ஆடுவதிலும் வல்லவர் டி வில்லியர்ஸ்.

9. 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா  தோல்வியைத் தவிர்க்க போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற நிலை. நான்காவது இன்னிங்ஸில் 354 நிமிடங்கள் களத்தில் இருந்து 297 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார் டி வில்லியர்ஸ். அந்த போட்டியில் ஹாஷிம் ஆம்லா – டி வில்லியர்ஸ் இணை 253 பந்துகள் (42.1 ஓவர்கள்) சந்தித்து 27 ரன்கள் குவித்தது. அதே போட்டியில் ஃபாப் டு பிளசிஸ் – டி வில்லையர்ஸ் இணை 211 பந்துகளில் 35 ரன்கள் குவித்தது. நான்காவது இன்னிங்ஸில்  143.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 143 ரன்கள் எடுத்தது. எனினும் இந்தியாவிடம் 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா. 

10. கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ் .ஆனால் உலகக் கோப்பை அணி அறிவிக்கப்படும் வேளையில் தான் 2019 உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தேர்வுக்குழு  ஒருங்கிணைப்பாளர் ஏபி டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்படாததற்கு வருத்தமில்லை எனத் தெரிவித்தார். 2019 உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு கூடத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...