இன்றைய முக்கிய நிகழ்வுகள் (06.12.2024)
சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி பிறந்த தினமின்று
1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும் செயலிலும் சீர்திருத்தமும், தேசபக்தியும் இழையோட வாழ்ந்து வழிகாட்டினார். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் மேம்பாடு இவற்றில் இவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் வரலாற்று தடங்களில் இவரை என்றும் வைத்திருக்கும். சுதந்திரப் போராட்ட வீராங்கனை. தமிழகத்தின் பெண் தலைவர்களில் முக்கியமானவர். காந்தியடிகள் தலைமைமையில் 1930-இல் நாடு முழுவதும் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றபோது, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர் ருக்மணி லட்சுமிபதி. ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். ருக்மணி லட்சுமிபதி, டிசம்பர்- 6, 1892- ஆம் ஆண்டு சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தாத்தா ராஜா டி. ராம்ராவ் ஒரு பெரும் நிலச்சுவான்தாராக இருந்தார். ருக்மணி, பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., பட்டம் பெற்றார். டாக்டர் லட்சுமிபதியுடன் இவரது திருமணம் நடைபெற்றது. 1923-இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார் ருக்மிணி லட்சுமிபதி. 1926-இல் பாரீஸில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமைப் பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1934-இல் சென்னை மாகாண சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து, 1937-இல் நடந்த சென்னை மாகாண சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று, சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அன்றைய முதலமைச்சர் த. பிரகாசத்தின் அமைச்சரவையில் 1946 முதல் 1947 வரை சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இதன்மூலம் தமிழகத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் மற்றும் சுதந்திரத்துக்கு முன்பு அமைச்சர் பதவி வகித்த ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றார். சென்னை எழும்பூரில் இருந்த மார்ஷல் சாலைக்கு “ருக்மிணி லட்சுமிபதி சாலை’ என்று இவர் பெயர் சூட்டப்பட்டது. 1951 ஆகஸ்ட் 6ஆம் நாள் மறைந்தார்.1997-இல் இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
முதல் டாக்சி சேவை லண்டனில் தொடங்கிய நாள்
உலகின் முதல் அரசு உரிமத்தின்மூலம் முறைப்படுத்தப்பட்ட டாக்சி சேவை லண்டனில் தொடங்கிய நாள் டிசம்பர் 6. வாடகை வாகனச் சேவை, ஹேக்னி கேரேஜ் என்ற பெயரில் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே லண்டனிலும், பாரிசிலும் உருவாகிவிட்டது. 1605இல் ஹேக்னி கேரேஜ் குதிரை வண்டிச் சேவை லண்டனில் இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. இச்சேவையைச் சட்டப்பூர்வமாக்க, 1635இல் சட்டம் இயற்றப்பட்டது. தங்க வருபவர்களை அழைத்துச் செல்ல, விடுதிகள் இச்சேவையை அதிகம் பயன்படுத்தியதால், முதல் டாக்சி ரேங்க் (ஸ்டாண்ட்), மேபோல் விடுதியில் 1636இல் தொடங்கப்பட்டது. 1654இல் மற்றொரு சட்டம் இயற்றப்பட்டு, ஹேக்னி கேரேஜ் உரிமம் 1662இல் வழங்கப்பட்டது. ஹான்சம் கேப் எனும் மேம்படுத்தப்பட்ட குதிரை வண்டி 1834இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1897இல் பேட்டரியால் இயங்கும் மின்சார டாக்சிகள் அறிமுகமாயின. அக்கால செல்வந்தர்களின் வண்டிகளில் அவர்கள் உள்ளேயும், குளிர், மழையானாலும் ஓட்டுனர் வெளியேயும் இருப்பார்கள். அதைமாற்றி, ஓட்டுனரை தங்களுடன் அமரச் செய்ய அவர்கள் தயாராக இல்லாததாலேயே, ஓட்டுனரின் பகுதி தனியாக உள்ள லிமோசீன் வகை டாக்சிகள் உருவாயின. டாக்சி மீட்டர் மூன்று ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர்களால் 1897இல் உருவாக்கப்பட்டது. உலகின் முதல் மீட்டர் பொருத்தப்பட்ட, பெட்ரோலால் இயங்கும் டாக்சி டெய்ம்லர் நிறுவனத்தால் 1897இல் ஜெர்மெனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வரி, கட்டணம் என்று பொருள்படும் இடைக்கால லத்தீன் சொல்லான டேக்சா என்பதிலிருந்து, டேக்சாமீட்டர் என்று மீட்டருக்குப் பெயரிடப்பட்டதால் டாக்சி, கேப்ரியோலெட் என்ற குதிரைவண்டியின் பெயரிலிருந்து கேப் ஆகிய சொற்கள் உருவாயின. லண்டனில் டாக்சி ஓட்டுனர் ஆவதற்கு, ‘லண்டனைப் பற்றிய அறிவு’ என்ற மிகக் கடுமையான தேர்வு முறை இன்றுவரை நடைமுறையில் உள்ளது. லண்டன் குறித்த தகவல்கள், பயணிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறை ஆகியவைகுறித்து 3-4 ஆண்டுகளுக்குப் பயிற்சியெடுத்து, பலமுறை முயற்சித்தால்தான் இதில் தேர்ச்சியடையமுடியும் என்பதால், லண்டனின் டாக்சி சேவை இன்றுவரை உலகின் மிகச்சிறந்ததாக விளங்குகிறது.
நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்
நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். ஒரு முறை நம்மாழ்வார் அய்யாவோடு, பூம்புகாரிலிருந்து கல்லணை செல்லும் வழியில் வடுகுர் கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. ராமகிருஷணன் அவர்கள் வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஜெயராமன் .விடைபெறும்போது, ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு மஞ்சள் பையை கொடுத்திருக்கிறார்,திறந்து பார்த்தால் காட்டு ஆனம் விதை நெல். தான் பாரம்பரியமாக காட்டு ஆனம் பயிர் செய்வதாகவும், அறுவடையின் போது நீர் நிறைந்து விட்டால், படகில் சென்று அறுவடை செய்வோம் என்றும், எப்படியாவது இந்நெல்லை வருங்கால சந்ததியினருக்கு சேர்த்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.அன்றே, தொடர்ந்த பயணத்தில் மேலும் ஏழு வகையான பாரம்பரிய விதை நெல் கிடைத்திருக்கின்றன.அப்போது, நம்மாழ்வார் அய்யா, ஜெயராமன் அவர்களைப் பார்த்து இன்று முதல் பாரம்பரிய நெல்லை மீட்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் என்றும் நெல் ஜெயராமன்என்று அழைக்கப்படுவீர்கள், என்றும் கூறி வாழ்த்தி இருக்கிறார். அன்று முதல் பாரம்பரிய நெல் விதைகளை சேகரிப்பதோடு, அதன் பயன்கள், தன்மைகளை கேட்டறிந்ததோடு, பரிசோதனை மூலம் உறுதி செய்து, தானே அந்நெல் வகைகளை சாகுபடி செய்து, மகசூல் எவ்வளவு என்பது வரை உறுதி செய்த பின்னரே விதை நெல்லாக, ஆண்டுதோறும் ஆதிரெங்கத்தில் நடைபெறும் நெல் திருவிழாவில் விவாசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வந்தார். சுமார் 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்.
முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நினைவு நாளின்று
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டக்காடு கிராமத்தில் 1930 இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார். 1980ல்பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1991ல் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக இருமுறை பணியாற்றியுள்ளார். இவர் தமிழக சட்டபேரவையில் உறுப்பினராகவும், இருமுறை 1971 , 1977 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் எம்.ஜி.ஆர் , ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுக்கு பொறுப்பேற்று சிறப்பாக நடத்தியவர். … தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் திராவிடர் கழகத்திலும் , பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் , அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்த பின்னர் தம் சொந்த கட்சியான நமது கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார். பின்னர் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இவர் 06-12-2001ல் காலமானார்.
பாபர் மசூதி இடிப்பு தினம்
பாபர் மசூதி இடிப்பு 1992 டிசம்பர் 6 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளின் ஒரு பெரிய குழுவால் நடத்தப்பட்டது . இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டு பாபர் மசூதி , நீண்ட சமூக-அரசியல் சர்ச்சைக்கு உட்பட்டது , மேலும் இந்து தேசியவாத அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அரசியல் பேரணி வன்முறையாக மாறிய பின்னர் குறிவைக்கப்பட்டது .
இந்து பாரம்பரியத்தில், அயோத்தி நகரம் ராமர் பிறந்த இடம் . 16 ஆம் நூற்றாண்டில் ஒரு முகலாய தளபதி மீர் பாக்கி , ராம ஜென்மபூமி அல்லது ராமர் பிறந்த இடம் என்று சில இந்துக்களால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் பாபர் மசூதி என்று அழைக்கப்படும் ஒரு மசூதியைக் கட்டினார் . இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கூற்றுப்படி , இந்த மசூதி முன்பு இஸ்லாம் அல்லாத ஒரு கட்டிடம் இருந்த நிலத்தில் கட்டப்பட்டது.1980 களில், விஸ்வ இந்து பரிஷத் (VHP) அந்த இடத்தில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலைக் கட்டுவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியது, பாரதிய ஜனதா கட்சி (BJP) அதன் அரசியல் குரலாக இருந்தது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக எல்.கே.அத்வானி தலைமையிலான ராம் ரத யாத்திரை உட்பட பல பேரணிகளும் அணிவகுப்புகளும் நடத்தப்பட்டன .
6 டிசம்பர் 1992 அன்று VHP மற்றும் BJP 150,000 பேரை உள்ளடக்கிய இடத்தில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தன. பேரணி வன்முறையாக மாறியது, மேலும் கூட்டம் பாதுகாப்புப் படையினரை மூழ்கடித்து மசூதியை இடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக மற்றும் விஎச்பியின் பல தலைவர்கள் உட்பட 68 பேர் பொறுப்பேற்றனர். இடிக்கப்பட்டதன் விளைவாக இந்தியாவின் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே பல மாதங்களாக இனக்கலவரம் ஏற்பட்டு குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தன.
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை வெளியான நாள்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பத்திரிக்கை துவங்கிய பிறகு, 1889 முதல் 1933 வரை, பலரிடம் கைமாறி யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946 இல், அவர் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார்.
பிலிப் கிரஹாம் தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கிரஹாமால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு பத்திரிக்கை சரிவை சந்திக்கத் தொடங்கியது. 1963 இல் கிரஹாம் தற்கொலை செய்துகொண்டதால், பத்திரிகை கிரஹாமின் மனைவி கேத்தரின் கிரஹாமின் கைகளில் வந்து சேர்ந்து பின் தலை நிமிர்ந்தது.[11] அதன் பிறகு அவர்களின் குடும்ப சொத்தாக இருந்த இந்த இதழ் அக்கடும்பத்தால் 2013 ஆம் ஆண்டில், அமேசான்.காம் நிறுவனர் ஜெப் பெசோசுக்கு விற்கப்பட்டது.
சந்திரலேகா பிறந்த தினம்
சந்திரலேகா (முழுப்பெயர்: சந்திரலேகா பிரபுதாஸ் படேல்; 6 டிசம்பர் 1928 – 30 டிசம்பர் 2006) பரத நாட்டியத்தை நவீன முறையில் மேம்படுத்திய நடனக்கலைஞர். மேலைநாட்டு நடனக்கலைகளையும் இந்திய நாட்டு களரி போன்ற போர்க்கலைகளையும் பரதநாட்டியத்துடன் இணைத்தார். இந்திய நடனத்தை முன்னெடுத்தவர் என்றும் அவர் புகழப்படுகிறார்.
சந்திரலேகா, 1928ம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி மருத்துவரின் மகளாக மகாராஷ்டிராவில் வாடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பிறப்பால் குஜராத்தி. சட்டம் படித்த சந்திரலேகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடனக்கலைஞராக ஆனார்.
காஞ்சீபுரம் எல்லப்ப பிள்ளையின் மாணவியாகி பரதநாட்டியம் கற்றார். தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி அருண்டேல் ஆகியோரின் மாணவியாக இருந்தார். கேரளக் களரிப்பயிற்றும் பயின்றிருக்கிறார். இந்திய நடனத்தை மேலைநாட்டு அசைவுகளுடனும், அரங்க உத்திகளுடனும் இணைத்து பெரிய நிகழ்கலையாக ஆக்கினார். ஆடம்பரமான ஒளி, ஒலி அமைப்புகள் கொண்ட நடன நாடகங்கள் அவருடையவை.
- சங்கீத நாடக அகாதமி விருது, 1991
- காளிதாஸ் சம்மன் விருது(2003 – 2004)
- 2004 சங்கீத நாடக அகாதமி ஆய்வு உதவி (பெல்லோஷிப்)