‘பெஞ்சல்’ புயல் கனமழை எதிரொலி 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து..!
விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த பிறகும் விழுப்புரம் புதுச்சேரி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றன. அதே நேரத்தில் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:
திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்
மதுரை – சென்னை வைகை விரைவு ரயில்
காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில்
சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில்
சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில்