விழுப்புரத்தில் முதலமைச்சர் இன்று ஆய்வு..!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த பிறகும் விழுப்புரம் புதுச்சேரி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையே, சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி மழையால் பாதிக்கப்பட்டு என்பது குறித்தும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்காணம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.