முழு கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அதன் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,436 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பக்கூடும்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், சென்னை வாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களும் நீர்வளத்துறையினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் காரணமாக, இன்று (30.11.2024) காலை முதல் பெய்து வரும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்த்தேக்க உயரமான 24 அடியில், தற்பொழுது மாலை 4 மணி நிலவரப்படி 19.31 அடி உயரம் நிரம்பி, அதன் முழு கொள்ளளவான 3645 Mcft-ல் தற்பொழுது 67% ஆன 2436 Mcft நிரம்பியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும், 5 நீர்த்தேக்கங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்த கொள்ளளவான 11.76 டிஎம்சி-இல் தற்போது வரை சுமார் 50% கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.