சீனா அதிபரை பாராட்டிய அமெரிக்க அதிபர்:
கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது என்றும், மிகச்சிறப்பான முறையில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்துடனும், அமெரிக்காவின் சுகாதாரத்துறை நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடனும் சீனா தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரானா விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும், அதில் 2 பேர் அண்மையில் சீனா சென்று வந்தவர்கள் அல்ல என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார்.