3 மணி நேரத்தில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 360 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்ததால், இது புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்ததன் காரணமாக நேற்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்ததுடன், சென்னையின் பல பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை இடையில் நாளை(நவ.30) பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்றும், அப்போது 90 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.