இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு.!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (நவ.27) தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலா பேருந்து ஒன்று மண்ணில் புதைந்தது. பேருந்தின் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் விழுந்தன.
உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி மாயமான பலரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.