படப்பொட்டி – ரீல்: 14 – பாலகணேஷ்
அரசியலாகட்டும், சினிமாவாகட்டும்… இரண்டுமே மக்களின் மறதி அல்லது அலட்சியம் என்னும் அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டமைக்கப்படுகிறது. பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்கு இடையில் ஏற்கனவே பேசிய பேச்சுக்களை ஒப்பிட்டுப் பார்க்கவோ, பார்த்த கதையாக இருக்கிறதே என்று யோசிக்கவோ செய்வதில்லை, அல்லது செய்தாலும் சொல்வதில்லை. (இன்றைய மீடியா உலகிற்கு இது பொருந்தாது. நான் சொல்வது முந்தைய காலகட்டத்தை).
ஒரே கதை பலமுறை படமாக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது ‘மாயா பஜார்’ திரைப்படம் என்று முன்பொரு அத்தியாயத்தில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது மற்றொரு வினோதத்தைப் பார்க்கலாம். இதுவும் ஒரே கதைதான். ஆனால் வேறுவேறு வடிவங்களில் வேறு பல பெயர்களில் அதே கதை வந்தது என்பதுதான் அட போடக்கூடிய விஷயம்.
இப்படி பலப்பல பெயர்களில் படமாக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் வெற்றிப் படமாக்கப்பட்ட அந்தக் கதையானது என்ன..? அதன் ஒருவரிச் சுருக்கமானது மிக எளிமையானது. சிறுவயதிலேயே பிரிந்த இரட்டையர்கள். ஒருவன் கோழையாக, அமைதியான சுபாவமுள்ளவனாக வளர்கிறான். மற்றவனோ படித்தவனாக, துணிவானவனாக, துறுதுறுப்பானவனாக வளர்கிறான். ஒரு கட்டத்தில் இருவரும் இடம் மாறும்படி நேர்ந்து விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பங்களும் அதனால் வருகிற பிரச்சனைகளும் எப்படித் தீர்ந்தன என்பது க்ளைமாக்ஸ்.
1964ம் ஆண்டு டி.ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்.டி.ராமராவைக் கதாநாயகனாகப் போட்டு ‘ராமுடு பீமுடு’ என்ற திரைப்படத்தை உருவாக்கினார்கள். சாணக்யா இயக்கியிருந்தார்.
தெலுங்கில் சக்கைப் போடு போட்ட அந்தப் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் 1965ல் எம்ஜிஆரை வைத்து உருவாக்கினார்கள் விஜயா வாகினி கம்பைன்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் என்ற பெருமைக்குரிய இப்படத்தை தெலுங்கில் இயக்கிய சாணக்யாவே இயக்கியிருந்தார். எம்ஜிஆரின் மாறுபட்ட நடிப்பும், ரங்காராவின் இயல்பான நடிப்பும், நாகேஷ், தங்கவேலுவின் காமெடியும், நம்பியாரின் அட்டகாசமான வில்லத்தனமும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையுமாக தமிழில் தெலுங்கைவிடப் பெரிய வெற்றியை ஈட்டியது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதற்குமுன் தமிழில் அதிகம் வசூலித்திருந்த படம் என்ற ரெக்கார்டை வைத்திருந்த ‘நாடோடி மன்னனை’ எ.வீ.பி. முந்தியது தன் ரெக்கார்டைத் தானே உடைத்தார் மக்கள்திலகம்
அதே விஜயா வாகினி நிறுவனம் 1967ல் திலீப்குமாரைக் கதாநாயகனாக்கி அதே சாணக்யா இயக்க, இந்தியில் தயாரித்து வெளியிட்டது. சிறிது இடைவெளி விட்டு 1976ல் மலையாளத்தில் இதே கதை ‘அஜயனும் விஜயனும்’ என்ற பெயரில் பிரேம்நசீர் நடிக்க, வெளியானது. கன்னடத்திலும் ‘மொஜுகரா சொகுசுகரா’ என்ற பெயரில் விஷ்ணுவர்த்தன் நடிப்பில் வெளியானது.
இப்படி ஒரு பெரிய ரவுண்டு வந்த கதையை இந்தித் திரைப்படக் கதாசிரியர்கள் சலீம் ஜாவேத், இரட்டையர்களான கதாநாயகர்களை உல்டா செய்து கதாநாயகிகளாக மாற்றிக் கதையை உருவாக்க, ரமேஷ் சிப்பி இயக்கத்தில் 1972ம் ஆண்டு ஹேமமாலினி இரட்டையர்களாக நடிக்க வெளியானது ‘சீதா அவுர் கீதா’ திரைப்படம். இந்தத் திரைப்படம் வெற்றிப் படமாக ஓடியதைக் கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த விஜயா வாகினி கம்பைன்ஸ் நிறுவனம் மற்ற மொழிகளில் (அவர்கள் கொண்டு செல்லாதிருக்க) அந்தக் கதையை ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றது.